Advertisement

செயல்படு ஆனந்தா செயல்படு...


செயல்படு ஆனந்தா செயல்படு...


அன்றாடம் நம்மைக் கடந்து சென்று விடுகின்ற பல செய்திகளில், சந்தேகம் காரணமாக மனைவியைக் கொன்ற கணவன் கைது என்பதும் ஒன்று.

இதில் பார்க்கவேண்டியது எதார்த்தம் தாயும் இல்லை, தந்தையும் சிறையில் இந்த தம்பதிகளின் குழந்தைகள் நிலமை என்ன என்பதை எத்தனை பேர் நினைத்துப் பார்க்கின்றனர்.

ஏதோ ஒரு வேகத்தில் எடுத்த தப்பான முடிவுக்கு, எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத இவர்களது குழந்தைகள் பழியாவது எந்த விதத்தில் நியாயம்.அதுவும் படிக்கின்ற குழந்தைகளாக இருந்தால் இன்னும் பரிதாபம்.சம்பவத்திற்கு மறுநாளில் இருந்தே இவர்களை சங்கடங்களும் சோகங்களும் சூழ்ந்து கொள்ளும்.
இது போன்றதொரு வழக்கை விசாரித்த சென்னை போலீஸ் அதிகாரி சரவணன், தனது நண்பரும் ஐடி துறையில் பணியாற்றுபவருமான ஆனந்தன் என்பவரிடம் விஷயத்தை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.அடுத்த நிமிடமே நீங்கள் சொன்னால் இந்த குழந்தையை படிக்கவைக்கிறேன் சார் என்று ஆனந்தன் சொல்லிவிட்டார்.

இப்போது அந்த குழந்தை நல்லதொரு பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி ஏழாவது வகுப்பு பிரமாதமாக படித்துக் கொண்டிருக்கின்றது.அந்த குழந்தையை படிக்க வைக்கும்போதுதான் இது போல பாதிக்கப்பட்ட குழந்தைகள் நிறைய பேர் இருக்கின்றனர் என்று தெரியவந்தது.
எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அத்தனை குழந்தைகளையும் படிக்கவைப்போம் என்று முடிவு செய்தார் ஆனந்தன் ஆனால் அது தனிப்பட்ட தன்னால் முடியாது என்பதால் நண்பர்களிடம் சொல்ல நண்பர்கள் பலரும் நாங்களும் கைகொடுக்கிறோம் என்று முன்வந்தனர்.அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் செயல் அறக்கட்டளை.

அஷ்வின்,ஜெகன்,கார்த்திக்,உமர்,சையத்,பிரகாஷ் மற்றும் ஆபிரகாம் என்று நண்பர்களுடன் துவங்கிய செயல் அறக்கட்டளையின் பிரதான நோக்கமே பிரமாதமானது.இந்த திட்டத்திற்காக யாரிடமும் நன்கொடை வாங்கக்கூடாது நம்மிடம் இருக்கும் பணத்தை மட்டுமே செலவழித்து படிக்கவைக்க வேண்டும்.நம்மால் படிக்கவைக்கப்படும் குழந்தைகளை சமூகத்தில் தப்பாக பார்த்துவிடக்கூடாது என்பதற்காக குழந்தையை பற்றிய விவரத்தை வெளியில் சொல்லக்கூடாது இன்னும் சொல்லப்போனால் அந்தக் குழந்தைக்கு கூட தெரியாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.இந்த கொள்கையின் அடிப்படையில் செயல் அறக்கட்டளையால் தற்போது 260 குழந்தைகள் படித்துக் கொண்டு இருக்கின்றனர்.

இந்த குழந்தைகள் படிக்கும் பள்ளி/ஹாஸ்டலுக்கு சென்று அவர்களது உறவுகளாக நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லும் விதத்தில், அவர்களுக்கு பிடித்ததை வாங்கிக்கொண்டு போய் கொடுத்து பார்த்து பேசி சந்தோஷப்படுத்திவருகின்றனர்,வேலையைத்தாண்டி எங்களுக்கான பொழுது போக்கே இப்போது இதுதான் என்று சொல்லும் ஆனந்தனை நேரில் சந்தித்து பாராட்டினேன்.

நான் பாராட்டுக்காக இதையெல்லாம் செய்யவில்லை, நான் பாட்டுக்கு என் மனதிற்கு பிடித்ததை செய்து கொண்டு இருப்பேன் என் மனதிற்கு பிடித்த விஷயமே யாருக்காவது உதவிக்கொண்டே இருப்பதுதான்.

சாதாரணமாக தினமும் முன்னுாறு ரூபாய் சம்பளத்திற்கு ஒட்டலில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கும் போதே சம்பளப் பணத்தில் பாதி ரூபாய்க்கு உணவு வாங்கிக்கொண்டு போய் முடியாதவர்களுக்கு கொடுத்துக் கொண்டு இருப்பேன்,அவர்கள் மனதார நல்லாயிரு என்று வாழ்த்தும் வாழ்த்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றும்.

இப்போது நல்ல பதவியில் நல்ல சம்பளத்தில் இருக்கிறேன் ஆகவே என் உதவியை இன்னும் விரிவுபடுத்தி யாரும் கண்டு கொள்ளாத தொழுநோயாளிகள் வாழும் இல்லங்களுக்கு உணவு கொடுத்துவிடுதல், ரோட்டில் விடப்பட்ட முதியோர்களை இல்லத்தில் சேர்த்து பராமரித்தல் என்று தனி ஒருவனாக செய்து கொண்டு இருந்தேன்.போலீஸ் அதிகாரி சரவணன் சார்தான் என்னை ஊக்கப்படுத்தி ஒரு குழுவாக செயல்படவைத்தவர்.

இப்போது செயல் அறக்கட்டளை குழுவில் முன்னுாறுக்கும் அதிகமானவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.எங்களுக்கு கட்டிடம் கிடையாது, பாங்க் கணக்கு கிடையாது, அது தேவையும் கிடையாது. உதவி தேவைப்படுபவர் பற்றி குரூப்பில் உறுப்பினர் தகவல் தெரிவித்ததும் நாங்களே பணம் போட்டு அந்த உதவியை செய்து முடித்துவிடுவோம்.

முன்னரே சொன்னது போல குழந்தைகளை படிக்கவைப்பதுதான் முக்கிய நோக்கம் அதைத்தாண்டி காவல் துறை குறிப்புகளோடு வேண்டுகோள் விடப்படும் உதவிகளையும் செய்து வருகிறோம்.

பேச்சு வேண்டாம் விளம்பரம் வேண்டாம் புகழ் வேண்டாம் நம்மால் முடிந்த வரை செயல்பட்டால் போதும் என்று முடிவு செய்தோம் அதுதான் செயல் அறக்கட்டளை என்று சொல்லி செயல்படும் ஆனந்தனை பாராட்ட நினைப்பவர்களுக்கான எண்:9841762383,9444800155.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (12)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement