Advertisement

மாற்றம் ஒரு துவக்கமே!

பிளஸ் 2 தேர்வில் ரேங்கிங், கிரேடிங் முறை ஒழிக்கப்பட்ட நிலையில் வெளியான முடிவுகளில், இத்தேர்வில், 1,180 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் எண்ணிக்கை, 1,100ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல், 100 சதவீத தேர்ச்சி என்பது மொத்த பள்ளிகளின் எண்ணிக்கையில், 27 சதவீதம் மட்டுமே.
பிளஸ் 2 தேர்வு, ரேங்க் பட்டியல் இல்லாதது மாணவ, மாணவியரின் மன அழுத்தத்தை குறைக்கும் என்ற கருத்து ஏற்கக் கூடியது. அத்துறை அமைச்சராக செங்கோட்டையன் சில முக்கிய மாற்றங்களை கொண்டு வருவது தொடரும் பட்சத்தில், அடுத்த, 3 - 5 ஆண்டுகளில் தமிழக கல்வித் துறையின் தரம் நிச்சயமாக உயரும். அதற்கான விழிப்புணர்வு, பெற்றோரிடம் இப்போதே அதிகரிக்க வேண்டும்.
விரைவில், பிளஸ் 1 பாடத்திட்டம் மாற்றம், இத்தேர்வில் தரப்பட்ட, ஏ முதல் ஜி வரை உள்ள பல பிரிவு மாணவ, மாணவியர், தங்களை அடுத்த கட்டத்திற்கு தயார் செய்வதற்கான, சுய சிந்தனை மேலோங்க உதவிடும்.
இவற்றில் கடைசி, மூன்று பிரிவுகளில் இடம் பெற்ற, மூன்று லட்சம் மாணவ, மாணவியர், தொழில் திறமைக்கான படிப்புகளை தேர்வு செய்யும் பட்சத்தில், வேலைவாய்ப்பு தகுதிகள் அவர்களுக்கு வரலாம். அதில் பல பெண்கள் இடம் பெறலாம். ஏனெனில், பல்வேறு அரசு சார்ந்த அரசிதழ் பதிவு பெறாத, வேலைவாய்ப்புகளுக்கு முதுகலைப் பட்டம், பொறியியல் படிப்பு படித்தோர் முயற்சிப்பது, அடுத்த சில ஆண்டுகளில் தானாகவே குறைய வழி வரும்.
அதற்கு முன், மொத்த மதிப்பெண், 800 மற்றும் கடைசியாக, 700க்கு கீழ் எடுத்து தேர்வு பெற்றவர்கள் மொத்த மாணவர்களில், 49 சதவீதம் என்பது நம் கல்வித் தரத்தின் அடையாளம். இது அனேகமாக அரசுப் பள்ளிகள் சிலவற்றிலும், மெட்ரிக் பள்ளிகள் பலவற்றிலும் இருக்கலாம். அவற்றை ஆராய வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. ஏனெனில், இவர்கள் மேற்படிப்பிற்கு முயற்சிக்காமல் பின்தங்கி விடும் அபாயம் வரலாம். அதற்கு அதிக கட் - ஆப், கல்லுாரிகள் முன்வைக்கும் நிபந்தனைகள் ஆகியவை இடைஞ்சலாக அமையலாம்.
இவர்கள் பலரும் இனி அரசு கல்லுாரிகள், மாலை நேரக் கல்லுாரிகளுக்கு விண்ணப்பிக்கும் போது, அவற்றுக்கு அதிக கிராக்கி ஏற்படும்.
அதே போல மொழிப்பாடங்களில், 200 மதிப்பெண் கிடையாது என்பது, இப்பாடங்களில், 190க்கு மேல் பெறுபவர்கள், மொழிப்பாடங்களில் முதுகலைப் படிப்பு வரை எளிதாக படிக்க முன்வரலாம். ஆனால், அதற்கேற்ற விழிப்புணர்வு வரவேண்டும்.
தனியார் பள்ளிகள் தங்களது கல்வியின் தரம் அதிகம் என்பதை நிரூபிக்க, இனி அதில் பணியாற்றும் ஆசிரியர்கள் தகுதி, கல்வி கற்றுத் தருவதில் சிறப்பம்சங்கள், மற்ற வசதிகள் என, பல்வேறு விஷயங்களை விளம்பரமாக, வெளிப்படுத்தியாக வேண்டி வரும். அதில் பணியாற்றும் ஆசிரியர்கள் அதிக தகுதி பெற்றிருக்கும் பட்சத்தில் அரசு ஊதியம் போல தர வேண்டிய கட்டாயமும் வரலாம்.
அதே போல, அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி சிறக்க, பாரபட்சமற்ற ஆய்வு தேவை. 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி, தற்போதைய கல்வி கற்பிக்கும் சூழ்நிலைக்கு தங்களை உயர்த்திக் கொள்ள முடியாதவர்களுக்கு, வங்கித்துறை போல விருப்ப ஓய்வு கூட தர அரசு முன்வரலாம். அதே போல ஆசிரியர் நியமனத்தில் முழுவதும் ஒளிவுமறைவற்ற நடைமுறைகள், லஞ்சத்தின் சாயல் சிறிதும் இல்லாத வழிகள், உடனடியாக அமலாக வேண்டும். அதற்கு அரசு முழுப்பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எல்லாவற்றையும் விட, பாடத்திட்டங்களில் மாற்றம், விளையாட்டு மற்றும் மனநல வளம் தரும் சிறப்பு அம்சங்கள் ஆகியவற்றை கொண்டுவர, ஒரு காலக்கெடுவுடன் கூடிய திட்டம், கல்வித் துறைக்கு தேவை. கல்வி மாநில அரசின் கீழ் உள்ள அதிக நிதி செலவழிக்கப்படும் துறை என்பதை, மக்கள் அறிவர்.
மிகப்பெரும் தேர்ச்சி தரும் சென்னை, சேலம், கோவை போன்ற நகரங்களை விட, வறட்சியில் அதிகம் பாதிக்கப்பட்ட ராமநாதபுரம் மற்றும் விருது நகர் மாவட்டங்களில், அதிக தேர்ச்சி உட்பட பல அம்சங்கள், தமிழகத்தில் கல்வித் துறை இனி முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement