Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'எல்லா கட்சிக்காரங்களுக்கும் இது பொருந்தணும்ன்னா, நீங்கள் சார்ந்திருந்த, காங்கிரஸ் வாயை மூடச் சொல்லுங்களேன்...' என, சொல்லத் தோன்றும் வகையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேச்சு:பார்லிமென்ட், சட்டசபைகளில் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும்; பயனுள்ள விவாதங்களில் பங்கேற்க வேண்டும். கூச்சல், குழப்பம், அமளியில் ஈடுபடுவது அழகல்ல.
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், தமிழக நிலையையே அறியாமல் பேச்சு: தமிழகத்தில், அ.தி.மு.க., - தி.மு.க., ஆகியவற்றுக்கு ஒரே மாற்று கட்சி, பா.ஜ., தான். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, தமிழக மக்கள் மனதில் நிலவுகிறது. அதனால் தான், அ.தி.மு.க., - தி.மு.க., ஆகியவற்றுக்கு மாற்றான, தகுதிமிக்க அரசியல் சக்தியாக, பா.ஜ.,வை மக்கள் பார்க்கின்றனர்.
'நாஞ்சில் சம்பத்தை ஒரு பொறுட்டா மதிச்சா, இது என்ன... இதை விட இன்னும் அதிகம் பேசுவார்... கண்டு கொள்ளாமல் இருந்தாலே, தனக்கு தமிழகத்தில் மதிப்பில்லை என்பதை புரிந்து கொள்வார்...' என, சொல்லத் தோன்றும் வகையில், பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமி பேட்டி: அரசியல் அபலையாக நடுரோட்டிலே இருந்த நாஞ்சில் சம்பத்தை அழைத்து, அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தவர் ஜெயலலிதா. அப்படிப்பட்ட ஜெயலலிதாவை, அவர் விமர்சனம் செய்கிறார். இப்படிப்பட்டவரை, அம்மா அணிக்கு தலைமை பொறுப்பு ஏற்றிருக்கும் பழனிசாமி, உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.
தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் அறிக்கை: தமிழக அரசு, செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் அதே நேரத்தில், அது குறித்து மிரட்டல் தொனியில் பேசுவதற்கு, மத்திய அரசுக்கு உரிமையில்லை. அப்படி பேசுவது, மத்திய, மாநில அரசுகளிடையே நிலவி வரும் உறவுகளை சீர்குலைக்கும் முயற்சியாகவே இருக்க முடியும் என, எச்சரிக்க விரும்புகிறேன்.
'சூட்சுமத்தை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள உங்களுக்கு திறமை இருக்கான்னு தெரியலே... விவாதமின்றி சட்டங்கள் இயற்ற தான், சட்டசபைக் கூட்டத்தை முன்கூட்டியே முடிச்சதா சொல்லப்படுது... சிந்திச்சுப் பாருங்களேன்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக சட்டசபை, காங்., தலைவர் ராமசாமி பேட்டி: எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பர் என்பதால் தான், சட்டசபையை நடத்த, தமிழக அரசு தயங்குகிறது. அரசின் நடவடிக்கையை பார்க்கும் போது, பெரிய தவறு செய்துவிட்டு, அதை மறைக்க முயற்சி செய்வது போல் உள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement