Advertisement

சொல்கிறார்கள்

உதடுகளில் தேன் தடவலாம்!

வாய்ப்புண் குறித்து கூறும், தஞ்சாவூரைச் சேர்ந்த இயற்கை நல மருத்துவர், டாக்டர் எஸ்.எஸ்.அரவிந்தன்: வாய்ப்புண்ணுக்கும், வயிற்றுக்கும் நிறையவே தொடர்பு உண்டு. குழப்பம் மற்றும் மனக்கவலை ஆகியன தொடர்ந்து நீடிக்கும் போது, உடல் உஷ்ணம் அதிகமாகும்; உடல் உஷ்ணம் அதிகமாகும் போது, வாய்ப்புண் வருகிறது.பொதுவாகவே, நம் உடலில், உஷ்ணம் அதிகமாக நிலவும் பகுதி வயிறு. மாதவிடாய் காலங்களில், பெண்களின் உடலில், ஹார்மோன் சுரப்பிகளில் மாற்றம் ஏற்படும்; அப்போது, உடல் உஷ்ணம் அதிகரிக்கும்.
உடலில், வைட்டமின், 'பி12' சத்து குறையும் போது, வாய்ப்புண் ஏற்படும்; அதிகமான வலி நிவாரண மாத்திரை எடுத்து கொள்பவர்களுக்கும் வாய்ப்புண் வரும்; செரிமான கோளாறு மற்றும் மலம் இறுகுதல் போன்ற சமயங்களில், வாய்ப்புண் உருவாகும். வயிற்றில், கழிவுகளின் தேக்கம் அதிகமாக இருக்கும் போதும் வாய்ப்புண் வந்து விடும்.
வாய்ப்புண் என்பது, ஒரு குறைபாடு தானே தவிர, அது ஒரு நோயல்ல. வாய்ப்புண் இருக்கும் நாட்களில், கார உணவு வகைகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. குறைந்தது, 3.5 லிட்டர் அல்லது அதிகபட்சமாக, 5 லிட்டர் தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியம்.
மணத்தக்காளி கீரை ஜூஸ் அல்லது சூப் அருந்துவது, வாய்ப்புண்ணுக்கு மிகச் சிறந்த நிவாரணி. தேங்காய்ப்பால் அருந்தலாம் அல்லது கொப்பளித்து துப்பலாம். வேப்பிலை கொழுந்து அல்லது இளம் வேப்பிலையை கொதிக்க வைத்து, அதன் சாற்றை கொப்பளித்து துப்பலாம். மாதுளம் பழத்தோலை, நீரில் கொதிக்க வைத்து, வாய் கொப்பளிக்கலாம்.
வாய்ப்புண் இருக்கும் போது, உதடுகள் உலர்ந்து போகும். பலரும் அப்போது உதடுகளில் வெண்ணெய் தடவி கொள்வர்; அது, தீர்வாகாது.
உதடுகள் உலர்வதை மட்டுமே தற்காலிகமாக தடுக்கும் என்பதால், தேன் தடவி கொள்ளலாம். அப்போது, எரிச்சல் ஏற்படும் என்பதால், பயப்பட வேண்டாம். வாய் மற்றும் உதடுகளில் தேனை தடவி, சிறிது தேனை உட்கொள்ளவும் செய்யலாம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement