Advertisement

டீ கடை பெஞ்ச்

கால்நடை உதவியாளர் பணிக்கு 'கறவை' ஆரம்பம்


''ஜெயலலிதா நியமிச்சவரையே ஓரங்கட்டறா ஓய்...'' என, முதல் விஷயத்தை கையில் எடுத்தார் குப்பண்ணா.''அடப்பாவமே... யாரு பா அது...'' என்றார் அன்வர் பாய்.
''போன வருஷம், ஜெயலலிதா உயிரோடு இருந்தப்ப, வீட்டு வசதி வாரிய தலைவரா, 'மாஜி' எம்.எல்.ஏ., வைரமுத்துவை நியமிச்சாங்க... அவரும், இருக்கற இடம் தெரியாம, தன் வேலையை பார்த்துண்டு இருந்தார் ஓய்...
''ஆனா இப்ப, துறை அதிகாரிகள், அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டேங்கறா... வாரிய கூட்டங்களை, தலைவர் தான் நடத்தணும்... அவர் கேக்கற விபரங்களை அதிகாரிகள்
தரணும் ஓய்...
''ஆனா, அதிகாரிகளோ, துறையின் அமைச்சர் சொல்றதை தான் கேக்கறா... 'வாரியத்தை' கண்டுக்கறதே இல்லை... 'ஜெயலலிதா நியமிச்ச பிரமுகருக்கே இந்த கதியா'ன்னு, வாரிய வட்டாரங்கள்ல பெருமூச்சு விடறா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
''மாணவர் அணியில, புகைச்சல் உருவாகிடுச்சு பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்
அன்வர் பாய்.''எந்த கட்சியிலங்க...'' என்றார் அந்தோணிசாமி.''இந்தி திணிப்பு, 'நீட்' தேர்வு விவகாரத்துல, மத்திய அரசை கண்டிச்சு, மாவட்ட வாரியா, தி.மு.க., சார்புல கருத்தரங்கம் நடத்துறாங்க... இதுல, மாநில நிர்வாகிகள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள்ல, நல்லா பேசக் கூடியவங்களை தேர்வு செஞ்சு, அனுப்பி
வைக்கிறாங்க பா...
''இந்த பேச்சாளர் பட்டியல்ல, மாணவர் அணி நிர்வாகிகளை சேர்க்கலை... இதனால, 'நமக்கு மதிப்பில்லாத இடத்துல இருக்கணுமா'ன்னு சிலர்
ராஜினாமா யோசனையில இருக்காங்க பா...'' என, முடித்தார் அன்வர் பாய்.''கறவையை
ஆரம்பிச்சுட்டாவ வே...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் அண்ணாச்சி.''புரியும்படியா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''மாநிலம் முழுக்க, கால்நடை உதவியாளர் வேலைக்கு, நேர்முகத் தேர்வு நடத்திட்டு இருக்காங்கல்லா... இதுக்கும், ஆளுங்கட்சியினர் வசூல் பேரத்தை ஆரம்பிச்சுட்டாவ வே...
''உதாரணமா, திருவள்ளூர் மாவட்டத்துல, 34 காலியிடங்களுக்கு, 12 ஆயிரம் பேருக்கு நேர்காணல் கடிதம் அனுப்பியிருக்காவ... நாளை வரை நேர்காணல் நடக்கு...
''இந்த வேலைக்கு, 3ல இருந்து, 4 லட்சம் ரூபாய் வரைக்கும் பேரம் பேசி, ஆளுங்கட்சி நிர்வாகிகள் வசூல் பண்ணிட்டு இருக்காவ... சிலர், 'நீ நேர்காணலுக்கே போக வேண்டாம் தம்பி... வேலை உன்னைத் தேடி வரும்'னு ஜம்பமா பேசியே பணத்தை வசூல்
பண்ணுதாவ வே...
''இதனால, நேர்காணல்ல கலந்துக்கிட்ட ஏழை, பாழைங்க
எல்லாம், 'ஒப்புக்கு சப்பாணியா தான் நம்மை கூப்பிட்டாவளா'ன்னு புலம்புதாவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
டீக்கடை எப்.எம்.,மில், 'எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...' என்ற, எம்.ஜி.ஆர்., பாடல் ஒலிக்க, பெரியவர்கள் ரசிக்க ஆரம்பித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

  • chinnamanibalan - Thoothukudi,இந்தியா

    இலவசங்களை காட்டி வாக்குகளை பெற்று, ஆட்சிக்கு வந்ததும் கொள்ளை அடிக்கும் வேலையை ஆட்சியாளர்கள் துணிவுடன் செய்கின்றனர்.மக்களும் இவர்களை நம்பி வாக்களிப்பதுதான் வேதனை.வெட்கக்கேடு.

  • sudharshana - chennai,இந்தியா

    Edhukkume adanga matta pola irukku...

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    நம் தமிழகத்துக்கு மிகவும் பொருத்தமானது அந்தப் பாட்டுதான்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement