Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

காங்., சொத்து மீட்புக் குழு உறுப்பினர் செல்வப்பெருந்தகை பேட்டி: சென்னை தலைமைச் செயலகத்தில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆய்வு செய்வது, தமிழக மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இது, மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் செயல். தமிழகத்தில், மணல் கொள்ளை மூலம் பெரியளவு ஊழல் நடந்துள்ளது என, சி.பி.ஐ., விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த ஐந்தாண்டு காலம், மணல் கான்ட்ராக்டில் ஈடுபட்ட, சேகர் ரெட்டியை விசாரணை செய்த, சி.பி.ஐ., அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் பன்னீர்செல்வத்தை விசாரிக்காதது ஏன்?



இ.கம்யூ., கட்சி தேசியக்குழு உறுப்பினர் நல்லகண்ணு பேச்சு:
'கடந்த, 140 ஆண்டுகள் இல்லாத வறட்சி, தற்போது தமிழகத்தில் நிலவி வருகிறது' என, மாநில அமைச்சர்கள் ஒப்புக் கொள்கின்றனர். அதற்கு, என்ன நடவடிக்கை எடுத்தனர் என்று தெரியவில்லை. மத்திய அரசிடம், வறட்சி குறித்த உண்மை நிலவரங்களை, தமிழக அரசு மறைத்து வருகிறது.



த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி:
மெட்ரோ ரயில் திட்டம், ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு தான் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி, துரிதமாக செயல்படுத்த வேண்டும். மெட்ரோ ரயில் கட்டணம் அதிமாக உள்ளது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுவர்.


பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர், மாபா.பாண்டியராஜன் பேட்டி:
நான், பா.ஜ., - தே.மு.தி.க., கட்சியில் இருந்து, அ.தி.மு.க.,விற்கு வந்தவன் தான். ஆனால், ஜெ.,வால் அடையாளம் காணப்பட்டவன். செய்தித் தொடர்பாளராக நான் கூறிய கருத்து எதையும், ஜெ., மறுத்ததில்லை. ஜெ., தான் பங்கேற்க வேண்டிய கூட்டங்களில், என்னை பங்கேற்க அனுப்பி வைத்தார். அந்த விசுவாசத்தால் தான், மறைந்த முதல்வர், ஜெ., எனக்கு அளித்த, நான்கு துறை அமைச்சர் பதவிகளையும் துறந்து, ஓ.பி.எஸ்., அணியில் இணைந்தேன்.


தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை:
தமிழகத்தில், தனியார் பேருந்துகள் எல்லாம் லாபகரமாக இயங்கும் காலகட்டத்தில், அரசு பேருந்துகள் எல்லாமே பெரும் நஷ்டத்தில் இயங்குவது ஏன்? இதை சீர் செய்ய, உடனடி நடவடிக்கை தேவை. இந்தப் போராட்ட நேரத்தை பயன்படுத்தி, தனியார் பேருந்துகள் கட்டண கொள்ளை அடிக்காமல், பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.



'அப்படியாங்க... நீங்க சுழல் விளக்கு கார்ல போனதே இல்லையா... பிளைட்ல ஏறும்போது, உங்களுக்கு யாரும் வழிவிட்டு நிக்காம இருந்தாங்களா... வாழ்க்கையின் முக்கால் நேரத்தையும் டில்லியில செலவழிச்சீங்களே... உங்களைப் பார்க்க வந்தவங்களை, உடனடியாகப் பார்த்து அனுப்பி இருக்கீங்களா...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், காங்கிரசைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பேச்சு:
அரசு அதிகாரி என்றாலே, அதிகாரம் செய்பவர் என்ற நிலை தான் உள்ளது; இந்த மனப்பான்மை நீங்க வேண்டும். அரசு அதிகாரிகளின் தோற்றமும், பேச்சும், சாதாரண மக்களை அச்சமடையச் செய்யும் வகையில் இருக்கக்கூடாது. மக்களை அச்சுறுத்தாமல், அவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement