Advertisement

சொல்கிறார்கள்

உடல் உஷ்ணம்குறையும்!

கோடை உஷ்ணத்தை தடுக்கும் உணவு பொருட்கள் குறித்து கூறும், ஆயுர்வேத மருத்துவர், சாந்தி விஜய் பால்: 'பாஸ்ட் புட்' உணவுகள் சாப்பிடும் போது, ருசியாக தான் இருக்கும். ஆனால்,
அதிலுள்ள அமிலத்தன்மை நெஞ்சு எரிச்சலை உண்டாக்குவதுடன், மலச்சிக்கலையும் ஏற்படுத்தும். இதனால், மூலநோய் உண்டாகலாம். குறிப்பாக, மைதாவில் தயாரான உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

கேப்பைக் கூழ் செய்து மோருடன் கலந்து சாப்பிடலாம். புழுங்கல் அரிசியைக் கஞ்சியாக்கி தேங்காய்ப் பாலுடன் சாப்பிடலாம். நெஞ்சு எரிச்சல் உள்ளோர், தேங்காய் பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால், உடல் சூட்டை சரி செய்யும்.அதிக வியர்வை வெளியேறும்போது, கிட்னி மற்றும் சிறுநீரகப் பாதையில் கற்கள் உருவாக வாய்ப்பு உண்டு. இதற்கு தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். கல்லை சரி செய்யும் சிறந்த மருந்தான வாழைப்பூவை சாறு எடுத்து மோர் கலந்து குடிக்கலாம். மேலும், கிட்னியை பலப்படுத்த, கொத்துமல்லி சாறு குடிக்கலாம்.

உடல் சூடு அதிகமானால், சிலருக்கு இரவு உணவு சாப்பிடப் பிடிக்காது. அவர்கள் பூசணிக் காயை ஜூஸ் செய்து அருந்தலாம். கேன் தண்ணீரை விட, குழாய் தண்ணீரை அருந்துவது நல்லது. செப்பு, மண் பாத்திரத்தில் படிகாரத்துடன், ஏலக்காயை தட்டிப் போட்டு குடிக்கலாம்.உடலில் கட்டிகள் ஏற்படாமல் இருக்க, காலை, மாலை ஒரு டீஸ்பூன் குல்கந்த் சாப்பிடலாம். மாதுளம்பழம், கொய்யாப் பழம் உடல் சூட்டைத் தணிக்கும்.

கசகசாவை வறுத்துப் பொடி செய்து, இரவில் துாங்கச் செல்லும் முன் பாலில் கலந்து குடித்தால், நன்றாக துாக்கம் வரும்.ஒரு கரண்டி நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன், ஒரு துண்டு இஞ்சி, ஒரு பூண்டு, ஏலக்காய் சேர்த்து சூடு செய்து, அதை ஆற வைத்து உச்சந்தலை, கை, கால் பெருவிரல்களில் தேய்த்துக் குளித்து வர, உடல் உஷ்ணம் குறையும்.

நீர்க்கடுப்பு மற்றும் நீர் தொற்று போக்க, கரும்பு ஜூஸ் நல்ல நிவாரணி. இதற்கு, 'சிறுநீர் பெருக்கி' என்ற பெயரும் உண்டு. சுரைக்காய் சாறு, இளநீர் போன்றவையும் நல்ல பலன் அளிக்கும். பெரிய நெல்லிக்காய், வாழைப்பூ, சீரகம் போன்றவற்றிற்கு துவர்ப்புச் சுவை அதிகம். அவற்றை சாப்பிடுவதால், உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பித்தம் சரி ஆகும்.

பொதுவாகவே, இரவு வேளையில் சாதம் வடித்து, சுத்தமான மண் பானையில் போட்டு விட வேண்டும். காலையில், உப்பு, மோர் சேர்த்து சின்ன வெங்காயம், சீரகப்பொடி சேர்த்து சாப்பிட்டால், இந்த வெயில் காலத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.முக்கியமாக, புளிப்பு, உப்பு, காரம், இவை மூன்றை தவிர்த்தாலே, உடல் சூடு தானாகக் குறைந்துவிடும்; உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க முடியும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement