Advertisement

நினைத்தால் வேதனை...அழிவை குறைக்கட்டும்!

தமிழகத்தில் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த முன்வந்திருக்கிறது. சென்னை ஐகோர்ட் இவ்விஷயத்தில் மேற்கொண்ட அதிரடிகள், பல விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு
வந்ததை மறக்க முடியாது. ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி என்.கிருஷ்ணகுமார், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மாநிலத்தில், 30 இடங்களில் மணல் குவாரிகள் திறக்க அரசு முன்வந்து, முதல் கட்டமாக விழுப்புரம், கரூர் பகுதிகளில் குவாரி திறக்கப்பட்டிருக்கிறது. நேரடி விற்பனையில், 2 யூனிட் அளவு கொண்ட மணல், 1,050 ரூபாய்க்கு விற்கப்படும். இப்பணம் பொதுப்பணித் துறை கணக்கிற்கு செல்லும் நடைமுறை, படிப்படியாக நிறைவேற்றப்படும். புதிதாக கட்டடப் பணிகள், வீடுகள் கட்டுவது உட்பட எல்லாவித கட்டுமானப் பணிகளுக்கும் மணல் தேவை அதிகம் என்றாலும், மணல் குவாரி என்ற பெயரில், கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தின் ஆறுகளை கட்டாந்தரையாக்கியது உண்டு. ஏனெனில், ஐகோர்ட் மதுரைக் கிளையில், 2010ல் அளிக்கப்பட்ட தீர்ப்பு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தாமிரபரணி ஆற்றுப் படுகையில் மணல் அள்ளுவதை அந்த தீர்ப்பு தடுத்து நிறுத்தி உத்தரவிட்டதும், ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ளுவது குறித்த விழிப்புணர்வு அதிகமானது. ஆனாலும் இத்தொழிலில் ஈடுபடுவோரும், அரசு அதிகாரிகளும் வரம்பற்ற முறையில் செயல்பட்டது தொடர்ந்தது. இன்றும், பல்வேறு வருமான வரி வழக்கில் சிக்கிய பலரும், மணலை அள்ளி, தவறாக விற்று பணம் சம்பாதித்த பின்னணி கொண்டிருக்கும் கொடுமை தெரிய வந்துள்ளது. முந்தைய காலத்தில் ஆற்று மணல் என்பது, ஆற்று நீரின் துாய்மையைக் காப்பதுடன், அதன் ஊற்றுப் பெருக்கால், அண்டைப் பகுதிகளை வளமாக்கும். அது இன்று இல்லை. அணைகளில் இருந்து தண்ணீர் அதிகமாக வரும்போது, ஆற்றின் மணல் பரப்பானது, தண்ணீரில் ஆக்சிஜனை அதிகரிக்க உதவும் என்ற விஞ்ஞானக் கருத்தை, யாரும் இன்று நம்ப முடியாது. நமது மாநில கட்டடத் தேவைக்கு மட்டும் இன்றி, அண்டை மாநிலங்களில் மணல் சப்ளை செய்ததும், தொடர்ந்து நடைபெற்றது. இது தொடர்பாக கோர்ட் வழக்குகள், மற்ற பொதுப்பணித்துறை ஆதாரங்கள் ஆகியவற்றைப் பார்த்தால், எத்தனை ஆயிரம் கோடிகள் இயற்கை இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை, மதிப்பிட முடியாத நிலையும் இருக்கிறது. மணல் குவாரிகள் மோசடி குறித்த வழக்குகளில் அரசு அளித்த ஆவணங்களில், 2013ல், அரசுக்கு கிடைத்த வருவாய், 200 கோடி ரூபாய்க்கும் குறைவானது. ஆனால், தினமும், 10 ஆயிரம் லாரிகள், தலா 2 - 3 லோடுகள் மணல் ஏற்றி சென்றிருக்கின்றன என்ற தகவலும் உள்ளது.
இது எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், பெரிய பெரிய கட்டடங்கள் தமிழகத்தில் ஏற்பட்டது வளர்ச்சிக்கு அடையாளம் என்ற கருத்து, இச்செயலை நியாயப்படுத்தாது.
கேரளா, ஆந்திராவுக்கு மணல் விற்பனை, கடற்கரைப் பகுதி மணல் துபாயில் எளிதாக கிடைக்கும் வாய்ப்புகள் ஆகிய எல்லாம் சட்டரீதியாக நடந்திருக்கின்றன. மணல் கொள்ளையை தடுத்த அதிகாரிகள் சிலர் கொல்லப்பட்டதும், கிரிமினல் வழக்குகளாக பதிவானதும் உண்டு. இன்று, மணல் கொள்ளைக்கு முடிவு காண வேண்டிய விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது.
அதன் விளைவே, இந்தக் குவாரிகளில் முறைகேடாக மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டு, தற்போது பொதுப்பணித் துறை மூலம் விற்க அரசு முன்வந்திருக்கிறது. அரசுக்கு, 'டாஸ்மாக்' வியாபார வருவாய் குறையும் நேரத்தில், இந்த முடிவால் ஆண்டு வருமானம் அதிகரிக்கலாம். இதற்கான முழு அளவான விரிவான தகவல்களை, அரசு இனி வெளியிடும் போது வருவாய் அளவு தெரியும். கட்டுமானப் பணிகளில் மணலுக்கு மாற்றாக, கல் உடைக்கும் போது வரும் ஜெல்லி மண், மற்ற மாற்று ஏற்பாடுகள் எப்போது முழுவீச்சில் வரும் என்று மதிப்பிட முடியாது.
மலைகளை தரையாக்கிய, 'கிரானைட் ஊழல்' மிகச்சிறந்த தாதுவான தோரியம் கொண்ட கடற்கரை மணல் மோசடி, ஆற்றுப்படுகைகளை சுரண்டி விற்று, கோடிகள் சம்பாதித்த அவலம் ஆகிய எல்லாமே, சுற்றுச் சூழல் அழிப்பின் அவலங்கள். இதை தமிழகம் பல ஆண்டுகளாக அனுபவித்து, ஊழலையும் வளர்த்திருக்கிறது. இன்று அரசு மணல் குவாரிகள் நேரடி விற்பனையைத் தொடங்கியிருப்பது, கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போன்ற செயலாகும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement