Advertisement

சொல்கிறார்கள்

சிகிச்சை தாமதமேஉயிருக்குஉத்தரவாதமற்ற நிலை!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளுக்கு, 'ரே ஆப் லைட் பவுண்டேஷன்' அமைப்பு மூலம், 15 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வரும், டாக்டர் ப்ரியா ராமச்சந்திரன்: இங்கிலாந்தில் பொது அறுவைச் சிகிச்சை பற்றி படித்த நான், அமெரிக்காவில் குழந்தைகளுக்கான அறுவைச் சிகிச்சை குறித்து படித்து கொண்டிருந்தேன்.

அங்கு, கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கீமோதெரபி மருந்து அளிக்க, நெஞ்சுப் பகுதியில் ஆபரேஷன் செய்து சருமத்திற்கு கீழே, 'கீமோ போர்ட்' என்ற சிறிய கருவியை பொருத்துவோம். அதன் மூலம் மருந்து செலுத்தும் போது, அது நேரடியாகவே இதயத்திற்கு சென்றுவிடும்; விரைந்து பலனளிக்கும். ஆண்டுக்கு, 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அந்த ஆபரேஷனை செய்திருக்கிறேன். 2001ல், அந்த கீமோ போர்ட்டின் விலை, 20 ஆயிரம் ரூபாய்.

அந்த காலக்கட்டத்தில் தான், நான் சென்னை வந்தேன். அப்போது, இங்கு பெரும்பாலும் பொது மருத்துவர்களே குழந்தைகளுக்கு ரத்தப் புற்றுநோய்க்கான சிகிச்சையும் அளித்துக் கொண்டிருந்தனர். கீமோ போர்ட் பற்றிக் கேட்டால், 'அதன் விலை மிக அதிகம்' என்றனர்.

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, போதிய பணம் இல்லாத காரணத்தால், சிகிச்சை அளிப்பதில் தாமதமாகிறது. அதனால், அந்த குழந்தையின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்படுகிறது. அந்த அவலத்தை மாற்றி, இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக உயர்ந்த சிகிச்சை தர வேண்டும் என்ற நோக்கத்தோடு, இந்த அமைப்பை ஆரம்பித்தேன்.
இந்த நோய்க்கு, 2 - 3 ஆண்டு சிகிச்சையும், ஒரு குழந்தைக்கு கிட்டத்தட்ட, 10 லட்ச ரூபாய் வரையும் செலவாகும்.

இதுவரை, 123 குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்துள்ளோம். அவர்கள் வளர்ந்து, நல்ல நிலையில் இருக்கின்றனர். இந்த நோயால் பாதிப்புக்குள்ளான குழந்தைகளில், 85 சதவீதம் பேரை பிழைக்க வைத்துவிட முடியும்.அடிக்கடி சளி பிடிப்பது, அவ்வப்போது ஜுரம் ஏற்படுவது, சாப்பிட முடியாமல் இருப்பது, எப்போதும் சோர்ந்து இருப்பது போன்ற அறிகுறி தெரிந்தால், உங்கள் பகுதியில் உள்ள மருத்துவரின் ஆலோசனைப்படி, ரத்தப் பரிசோதனை செய்யுங்கள். அது, ரத்தப் புற்றுநோயாக இருந்தால், கண்டுபிடித்து விடலாம்.

ரத்தப் புற்றுநோய்க்கான காரணம், இதுவரை விஞ்ஞானப்பூர்வமாக கண்டுபிடிக்கப் படவில்லை. அதைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியை செய்து வருகிறோம். பிறந்த குழந்தையில் இருந்து, 18 வயது வரை உள்ளவர்கள், எங்களிடம் இலவச சிகிச்சை பெறலாம். தேவைப்படுவோர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையில் எங்களை அணுகலாம்.

வயிற்றுப் புண்உருவாகும்!

'ஆப்பிள் சிடர் வினிகர்' பயன்படுத்தலாமா எனக்கூறும், ஊட்டச்சத்து நிபுணர், கிருஷ்ணமூர்த்தி: ஆப்பிள் சிடர் வினிகரில், அசிட்டிக் அமிலம், பொட்டாசியம், சோடியம் மற்றும் தயமின் என, அமிலத்தன்மை நிறைந்துள்ளதால், இதைத் தொடர்ந்து உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
குறைந்த கலோரி இருப்பதால், இதை அடிக்கடி குடிப்பவர்கள் உண்டு; இது, முற்றிலும் தவறு. ஒரு நாளைக்கு ஒரு முறை தான், குடிக்க வேண்டும்.

அதுவும் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து குடிக்கலாம். அதிகமாக ஆப்பிள் சிடர் வினிகரைக் குடித்தால், உணவுக் குழாயில் எரிச்சல் ஏற்படும்.பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்க, ஆப்பிள் சிடர் வினிகரால் வாயை கொப்பளிக்க வேண்டும் என்பர். உண்மையில், இதில் உள்ள அமிலத்தன்மை பற்களின் எனாமலைப் பாதிப்பதோடு, பற்களின் உறுதியையும் வலுவிழக்கச் செய்யும்.

பற்களைத் தேய்ப்பதற்கு முன், ஒரு கப் தண்ணீரில், 5 மி.லி., ஆப்பிள் சிடர் வினிகரை கலந்து கொப்பளிக்கலாம். இதை, 15 நாட்களுக்கு ஒருமுறை செய்ய வேண்டும். முடிந்தளவுக்கு எலுமிச்சை சாறை, இதற்கு மாற்று மருந்தாகப் பயன்படுத்துவது சிறந்த பலனைத் தரும்.ஆப்பிள் சிடர் வினிகர் பசியைக் குறைத்து, நிறைவான நிலைமையைத் தருவதால் அதிகமான உணவைச் சாப்பிட முடியாமல் போகிறது. இதுவே, எடை குறையக் காரணமாகிறது.

இப்படி எடை குறைக்க முயற்சி செய்வது, ஆரோக்கியமான வழியல்ல. சமச்சீரான உணவும், உடற்பயிற்சியும் தான் உடல் எடையைக் குறைப்பதற்கான சிறந்த வழிகள்.சிலர், வெறும் வயிற்றில் இதைக் குடித்தால், தொப்பை குறையும் என்கின்றனர். இப்படிக் குடித்தால், இரைப்பையில் பாதிப்பு ஏற்படும். வயிற்றுப் புண் உருவாகவும் வாய்ப்புகள் உள்ளன.

உணவு அருந்தியதும் ஆப்பிள் சிடர் வினிகரைக் குடித்தால், சர்க்கரை நோய் குறையும் என்பர். உண்மையில் இதற்கான எந்த ஆதாரமும் இல்லை. சர்க்கரை நோய் கட்டுக்குள் வர, வாழ்வியல் மாற்றங்களே தேவை என்பதை, நாம் மறந்து விடக்கூடாது.ஆப்பிள் சிடர் வினிகர் என்பது, அயல்நாடுகளில் மிகவும் பிரபலமானது. கால் ஆணிகளை நீக்க, பொடுகுத் தொல்லையை சரியாக்க, அழகு மற்றும் பராமரிப்புத் தொடர்பான விஷயங்களுக்குப் பெரிதும் பயன்படுகிறது. ஆனால், இதை உள்ளுக்குச் சாப்பிடுவது சரியான முறை அல்ல. அதனால், மருத்துவரின் ஆலோசனையின்படி, ஆப்பிள் சிடர் வினிகரை பயன்படுத்துவது நல்லது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

  • MaRan - chennai,இந்தியா

    ரத்த புற்றுநோய் ஏன் வருகிறது , இன்றைய காலகட்டத்தில் அதை தவிர்க்க வேண்டிய இயற்கை வழிமுறைகள் குறித்தும் எங்களுக்கு விளக்குங்கள் மேடம்,,

  • Manian - Chennai,இந்தியா

    டாக்டர் ப்ரியா ராமச்சந்திரன் - இட ஒதுக்கீடு, ஜாதி, மதம் என்ற தகுதி இல்லாமல் நீங்கள் படித்திருந்தால், அது எங்கள் திராவிட குழந்தைகளுக்கு தேவை இல்லை. அஷ்டாங்க ஆயுர் வேதம் மூலம் எங்கள் போஸ்ட்டல் கல்வி மருத்துவர்கள் இதை குறைந்த விலையாக 1 லட்ஷத்தில் செய்கிறோம். மேல் தட்டு அம்மா இன்னமும் எங்களை அடிமை படுத்தலாம் என்று, முன்னேற விட வேண்டாம் என்று கனவு காணாதீர்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement