Advertisement

பக்க வாத்தியம்

'வரதட்சணை அதிகம் கேட்பீங்களோ...'

சென்னை, மயிலாப்பூரில், தி.மு.க., சார்பில், முழு அடைப்பு போராட்ட விளக்க பொதுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், காங்., - மா.கம்யூ., - இ.கம்யூ., உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

தமிழக, காங்., தலைவர் திருநாவுக்கரசர் பேசும் போது, 'திருமணத்துக்கு முன், மாப்பிள்ளை பார்ப்பது, பெண் பார்ப்பது, நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்வுகள் நடக்கும்... அதற்கு அப்புறம் தான் திருமணம் நடக்கும்... என்னைப் பொறுத்தவரை, நம் கூட்டணி நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கருதுகிறேன்' என்றார்.

இதை கேட்ட முதியவர் ஒருவர், 'நல்ல பணியில இருக்குற மாப்பிள்ளைக்கு, பெண் வீட்டாரிடம் அதிக வரதட்சணை கேட்பாங்க... ஜெயலலிதா மறைவால், உங்க கூட்டணிக்கு, வரும் தேர்தல்களில் வெற்றி வாய்ப்பிருக்குன்னு சொல்றாங்க... அதனால், நீங்களும், தி.மு.க., கிட்ட அதிக இடங்களை கேட்டு, 'டார்ச்சர்' கொடுப்பீங்களோ...' என, முணுமுணுக்க அருகில்
இருந்தவர்கள், ஆமோதிப்பது போல் தலை அசைத்தனர்.

'மயக்கமா வருது... விடுங்க, போதும்!'

மதுரையில் சமீபத்தில் அமைச்சர்கள் ராஜு, உதயகுமார் தலைமையில் வறட்சி குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. காலை, 11:00 மணிக்கு துவங்கிய கூட்டம், மதியம், 2:30 மணியை கடந்து சென்ற நிலையில், மேடையில் அமர்ந்திருந்த, எம்.எல்.ஏ.,க்களில் சிலர், நெளிய துவங்கினர். கூட்டத்தில் அமர்ந்திருந்த அலுவலர்கள் சிலர் வெளியே வருவதும், உள்ளே போவதுமாக இருந்தனர்.

ஒரு வழியாக கூட்டம் முடித்து, வெளியில் வந்த அமைச்சர்களிடம், பத்திரிகையாளர்கள் தொடர்ந்து, அ.தி.மு.க., இணைப்பு குறித்து கேள்வி எழுப்பினர். அமைச்சர்களும் மழுப்பியபடி காரை நோக்கி வந்தனர். நிருபர்கள் தொடர்ந்து குறுக்கிட, எம்.எல்.ஏ., நீதிபதி, 'பசியில மயக்கமா வருது... விடுங்க, போதும்' எனக் கூறி, அமைச்சர்களை காரில் அனுப்பி வைத்தார்.

ஆவேசமான டிராபிக் ராமசாமி!

சமூக சேவகர், 'டிராபிக்' ராமசாமி, மதுரை வந்தால், டவுன்ஹால் ரோடு பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்குவது வழக்கம். போலியோ சொட்டு மருந்து தொடர்பாக, மாநகராட்சி சார்பில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து, பல பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது. இதில் ஒரு ஆட்டோ, அவர் தங்கியிருந்த லாட்ஜ் பகுதியில், சுற்றி வந்தது. அறையில் இருந்த அவர், பனியன் அணிந்தவாறு சாலைக்கு வந்து, ஆட்டோ டிரைவரிடம்,'சத்தத்தை குறை' எனக் கத்தினார்.

அங்கு நின்ற பலருக்கும், இவர் யார் என தெரியவில்லை; குறிப்பாக அந்த ஆட்டோ டிரைவருக்கும் தெரியவில்லை. அவரது ஆவேசத்தை பார்த்த ஆட்டோ டிரைவர், சற்று சத்தத்தை குறைத்துவிட்டு, அவரையும் திட்டியபடியே ஆட்டோவை கிளப்பினார். டிரைவரையும், மாநகராட்சியின் இந்த செயலையும் திட்டியவாறு, டிராபிக் ராமசாமி அறையை நோக்கி நடந்தார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement