Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'இப்போதெல்லாம், அ.தி.மு.க., எல்லா தவறான நடவடிக்கைகளுக்கும் முன்னுதாரணமாய் இருக்குது... அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் கட்சிகள், அ.தி.மு.க.,வைப் பின்பற்றாமல் இருக்கும் என, உங்களால் உத்தரவாதம் தர முடியுமா...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் பேட்டி:
தர்மபுரியில், பெண் அரசு அதிகாரி ஒருவரை, தமிழக அமைச்சர் சரோஜா மிரட்டியதாக வந்த புகாரை, தமிழக போலீசார் விசாரிக்கக்கூடாது; சி.பி.ஐ., தான் விசாரிக்க வேண்டும். அப்போது தான், உண்மை வெளிவரும். இது போன்ற விசாரணை, புகார், வழக்கில் சிக்கிய அமைச்சர்கள், தாங்களாகவே முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும். அப்போது தான், அச்சமின்றி, மிரட்டல் இன்றி விசாரணை நடக்கும்.

தே.மு.தி.க., தலைவர் விஜய காந்த் மனைவி பிரேமலதா பேச்சு: புதிய ஜனாதிபதி தேர்தலுக்குப் பின், தமிழகத்தில், 'பிரேக்கிங் நியூஸ்' வரும். தமிழகத்திற்கு நிரந்தர கவர்னர் நியமிக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி வரப்போவது உறுதி. அதன்பின் நடக்கும் தேர்தலில், தே.மு.தி.க., வெற்றி பெற்று, தமிழகத்தில் லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்ட, தைரியமான முதல்வர் ஆட்சி நடக்கும்.

பா.ஜ.,வைச் சேர்ந்த, ராஜ்ய சபா எம்.பி., இல.கணேசன் பேட்டி: தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடுவதில், மாற்றம் கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது. 'ரேங்க்' பட்டியல் வெளியிடாதது, மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும். மதிப்பெண்கள் அடிப்
படையில் தேர்வு செய்த நிலையை மாற்றி, தற்போது கல்வியாளர்கள், நல்ல முடிவு எடுத்துள்ளனர். 'நீட்' தேர்வின் விதிமுறைகள் ஏற்புடையது தான். இதன் மூலம், மருத்துவத் துறைக்கு தரமான மருத்துவர்கள் கிடைப்பர்.

மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் துறை இணை அமைச்சர் கிரிராஜ் சிங் பேட்டி: சிறு,
குறு தொழில்கள் துவங்க, வங்கிகளில் உத்தரவாதம் இல்லாமல் வழங்கப்பட்டு வந்த, 1 கோடி ரூபாயை, பிரதமர் மோடி, ௨ கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளார். சிறு, குறுந்தொழிற்
சாலைகள் வளர்ச்சியில், தமிழகம் முன்னிலையில் தான் உள்ளது. மானியம், சட்ட
பாதுகாப்பு, கடன் உதவி உள்ளிட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய
முக்கிய அம்சங்களை, மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை பேட்டி: சசிகலாவை தேர்ந்தெடுத்தது, பொதுக்குழு தான். அந்த பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் உட்பட எல்லாரும் கையெழுத்து போட்டு உள்ளனர். பொதுக்குழு எடுத்த முடிவை, தனிப்பட்டவர் எப்படி மாற்ற முடியும்? இவர்கள் வந்து பேசி, மாற்றுவதற்கு வழியை சொல்லட்டும். இதற்காகத் தான், ஒன்று சேர்ந்து பேச வேண்டும் என்கிறோம். எதையும், பேசுவதன் முலம் தீர்வு காண முடியுமே ஒழிய, ஏதோ சில கருத்துக்களை மனதில் வைத்து பேசினால் சரி வராது.

'மாற்றுத் திறனாளிகளின் வளர்ச்சிக்கு உதவுறீங்களோ இல்லையோ, உங்களோட திறன் என்னன்ன சமீபத்துல தமிழக மக்களுக்குத் தெரிஞ்சு போச்சு...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், தமிழக சமூகநலத்துறை அமைச்சர், வி.சரோஜா பேட்டி:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மாற்றுத்திறனாளிகள் மீது அதீத அக்கறை கொண்டவர். அவர் மேற்கொண்ட முயற்சிகளால் தான், தமிழக அரசுக்கு, 2013 -14ம் ஆண்டுக்கு, 'மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த செயல்திறன்மிக்க மாநிலம்' எனும் விருது கிடைத்தது. அதைப்போலவே, தற்போதும் அரசு, மாற்றுத்திறனாளிகள் வளர்ச்சித் திட்டங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

த.மா.கா., கட்சி தலைவர் வாசன் பேட்டி: தமிழகத்தில், அமைச்சர்கள் பலர் மீது, குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. இது, நல்ல ஆட்சிக்கு உகந்ததல்ல. குற்றம் சாட்டப்பட்டவர்கள், உண்மையை விளக்க வேண்டும். இல்லாவிட்டால், பதவியில் நீடிப்பது முறையல்ல.

பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி பேட்டி: தமிழகத் தேர்வு வரலாற்றில் முதன்முறையாக இவ்வாண்டு, பிளஸ் ௨ பொதுத்தேர்வில், 'ரேங்க்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. 'பிளஸ் ௧ வகுப்பிற்கும், விரைவில் பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்படும்' என, அரசு கூறியுள்ளது; இந்த இரு அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை. தரவரிசை ரத்து செய்யப்பட்டதால், மாணவர்களிடையே நட்புணர்வு பெருகும். அவர்களின் கல்வி, உறவு வளர்ச்சிகளுக்கு இத்தகைய சூழல் அவசியம்.

அ.தி.மு.க., - பன்னீர் அணியைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமி பேட்டி: தம்பிதுரை, ஜெயலலிதா மேல் விசுவாசம் உள்ளவர் போல் காட்டிக் கொண்டாலும், அவர் சசிகலாவுக்கு தான், உண்மையான விசுவாசியாக உள்ளார். இரு அணிகளும் ஒன்றிணைய வேண்டும் என, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மேல் பற்றுள்ள, இரு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் ஆர்வம் உள்ளது. இதற்கு, தீயசக்தி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.

அ.தி.மு.க., - பன்னீர் அணி எம்.பி., மைத்ரேயன் பேச்சு: அமைச்சர்களான விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித் துறையினர் சோதனை; காமராஜ் மீது வழக்கு; சரோஜா மிரட்டல் என, ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. சட்டசபை தேர்தல் விரைவில் வரும்; பன்னீர்செல்வம் விரைவில் முதல்வராவார். இரட்டை இலை சின்னம், எங்களிடம் வரும். 122, 'கூவத்துார் பாய்ஸ்' குறித்து, நாங்கள் கவலைப்படவில்லை.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    தே.மு.தி.க., வெற்றி பெற்று, தமிழகத்தில் லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்ட, தைரியமான முதல்வர் ஆட்சி நடக்கும். குதிரைக்கு கொம்பு முளைப்பது எவ்வளவு சாத்தியமோ அந்த அளவு தே மு தி க ஆட்சி சாத்தியம்

  • Sekar - Maraimalai Nagar

    தமாகா தலைவர் வாசன்: அப்படியே அவர்களே ஊழல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டு விரும்பி தண்டனையைப் பெற்றுக்கொண்டு சிறைக்கும் செல்லவேண்டும். போதுமா தல. நீ விடுற அறிக்கையெல்லாம் பார்த்தா எப்ப வேணாலும் எந்த அணிக்கு வேணாலும் போவேன்கிற மாதிரிதான் இருக்கு. உன்னை நம்பியும் சில பைத்தியங்கள். நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement