Advertisement

டீ கடை பெஞ்ச்

மாவட்டத்தை காலி செய்ய மனசில்லாத அதிகாரி''பல லட்சம் ரூபாய் கமிஷன்ல, மஞ்ச குளிச்சிட்டு இருக்காங்க...'' என்ற படியே, பெஞ்சுக்கு வந்தார் அந்தோணிசாமி.''யாரு பா...'' என்றார் அன்வர் பாய்.''தமிழ்நாடு பாடநுால் கழகத்தின், கோவை மாவட்ட அலுவலகத்துல, ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்குதுங்க... கழகத்தின் அங்கீகாரம் பெற்ற பாட புத்தக விற்பனையாளர்கள், நுாத்துக் கணக்குல இருக்காங்க...
''ஆனா, குறிப்பிட்ட ரெண்டு பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் தான், புத்தகங்களை விற்பனைக்கு கொடுக்குறாங்க... மத்தவங்களுக்கு, 'ஸ்டாக் இல்லை; அப்புறமா வாங்க'ன்னு இழுத்தடிக்கிறாங்க...
''ரெண்டு பெரிய நிறுவனங்களும், அரசு தர்ற, 7.50 சதவீதம் தள்ளுபடியில, 2.50 சதவீதத்தை, பாடநுால் கழக அதிகாரிகளுக்கு கொடுத்துடுறாங்க... இதுலயே, அதிகாரிகளுக்கு பல லட்சம் ரூபாய் கமிஷன் கிடைக்குதுங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
''மூணு பேர் தான், மாட்டி விட பார்க்காவன்னு புலம்புதாரு வே...'' என, அடுத்த தகவலுக்கு வந்தார்
அண்ணாச்சி.''யாரு ஓய்...'' என்றார் குப்பண்ணா.''கோடநாடு காவலாளி கொலை வழக்குல பரபரப்பா பேசப்பட்ட, சஜீவனை தான் சொல்லுதேன்... துபாய்க்கு போயிருந்தவர், திரும்பி வந்ததும், பேட்டி கொடுத்தாருல்லா வே...
''அப்ப, 'சட்டசபை தேர்தல்ல, நீலகிரி மாவட்டத்துல, ரெண்டு தொகுதிகள்ல, அ.தி.மு.க., தோற்க காரணமான கட்சியினர் பத்தி, சசிகலாவிடம் புகார் செஞ்சேன்... அதுல, 23 பேரை கட்சியில இருந்து, ஜெயலலிதா நீக்கினாங்க... அதுக்கு பழி வாங்குறதுக்காக, இந்த கொலை வழக்குல என்னை கோர்த்து விடுறாங்க'ன்னு சொன்னாரு வே...
''பகிரங்கமா யார் பெயரையும் குறிப்பிடலைன்னாலும், தனக்கு நெருங்கியவர்களிடம், 'மாஜி' அமைச்சர்கள் புத்தி சந்திரன், மில்லர், தொழில் போட்டியாளர், ராயன்னு மூணு பேரும் தான், தனக்கு எதிரான தகவல்களை பரப்புதாவன்னு, சஜீவன் புலம்பியிருக்காரு வே...'' என்றார் அண்ணாச்சி.
''வேண்டா வெறுப்பா கிளம்பி போனாரு பா...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் அன்வர் பாய்.
''யாரு ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''டாலர் சிட்டி மாவட்டத்துல இருந்த, கல்வி அதிகாரியை தான் சொல்றேன்... இவர், அங்க போய் மூணு வருஷம் ஆச்சு... அதிகாரிக்கும், தனியார் பள்ளிகளுக்கும் இடையில, நல்ல, 'அண்டர் ஸ்டேண்டிங்' உருவாகிடுச்சு பா...
''அதிகாரிகளை, மூணு வருஷத்துக்கு ஒரு முறை, இடம் மாத்துவாங்க... ஆனா, மாற்றத்தை விரும்பாத அதிகாரிக்காக, தனியார் பள்ளி நிர்வாகங்கள் சார்புல, பள்ளிக்கல்வி செயலருக்கு, மனுக்கள் அனுப்புனாங்க... 'இவரை மாதிரி நல்ல அதிகாரியை மாத்திடாதீங்க'ன்னு அதுல குறிப்பிட்டிருந்தாங்க பா...
''ஆனா, செயலர் எதையும் கண்டுக்கலை... சமீபத்துல இவர் உட்பட, பல மாவட்டக் கல்வி அதிகாரிகளை துாக்கி அடிச்சுட்டார்... டாலர் சிட்டி அதிகாரி, மனசே இல்லாம ஊரை காலி பண்ணிட்டு போயிட்டாரு பா...'' என, முடித்தார் அன்வர் பாய்.
பெஞ்சில் இருந்து எழுந்த அண்ணாச்சி, ''என்ன முருகன் நல்லாயிருக்கியா... ரொம்ப நாளா உன்னைப் பார்க்கவே முடியலை...'' என, கதை பேச ஆரம்பிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.அரசு போனை 'ஆட்டைய' போட்ட பெண் அதிகாரி!

''வேகாத வெயில்ல, 'உள்ள' இருக்காதீய... வெளியில வாங்கன்னு சொல்லிட்டு வந்திருக்காவ வே...'' என, அரட்டை கச்சேரியை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''விளக்கமா எடுத்து விடுங்க பா...'' என்றார் அன்வர்பாய்.''இந்திய இறையாண்மைக்கு எதிரா பேசின வழக்குல, 'ஜாமின் வாங்க மாட்டேன்'னு சொல்லி, வீம்பா புழல் சிறைக்குள்ள போய் உட்கார்ந்திருக்காரே, வைகோ... சமீபத்துல, இவரது, 'மாஜி' கூட்டாளிகள் திருமாவும், முத்தரசனும், ஜெயிலுக்கு போய், வைகோவை பார்த்து பேசினாவ வே...
''அப்ப, 'போதும் உள்ளே இருந்தது... சீக்கிரமா ஜாமின் மனு போட்டு வெளியே
வாங்க'ன்னு சொல்லிட்டு வந்திருக்காவ...''அதே மாதிரி, த.மா.கா., மூத்த தலைவர் ஞானதேசிகனும், வைகோ வக்கீல் நன்மாறனிடம், 'இந்த கத்திரி வெயில்ல, ஜெயில்ல கிடக்க வேண்டாம்... நான் சொன்னதா வைகோவிடம் சொல்லி, அவருக்கு ஜாமின் போடுங்க'ன்னு சொல்லியிருக்கார்... அதனால, சீக்கிரமே ஜாமின்ல வருவார்னு சொல்லுதாவ வே...'' என்றார்
அண்ணாச்சி.''சசிகலா, தினகரன் அதிகாரத்தை கையில எடுத்துட்டாரு பா...'' என்றார் அன்வர் பாய்.''யாரு ஓய்...'' என்றார் குப்பண்ணா.''அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் இறந்து போயிட்டா, இரங்கல் தெரிவிச்சு, ஜெயலலிதாவின் அறிக்கை, கட்சி பத்திரிகையில வரும்... ஜெ.,க்கு அப்புறம், சசிகலா பேர்லயும், கடைசியா தினகரன் பேர்லயும், இந்த இரங்கல் அறிக்கைகள் வந்துட்டு இருந்துச்சு பா...
''இப்ப, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த, பொதுக்குழு உறுப்பினர் காளிமுத்து மறைவுக்கு, இரங்கல்
தெரிவிச்சு, அந்த
அதிகாரத்தை பழனிசாமி கைப்பத்திட்டாரு பா...'' என, முடித்தார்
அன்வர் பாய். ''எடுத்துட்டு போன பொருட்களை திரும்ப வாங்க, படாதபாடு படறா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் குப்பண்ணா.
''யார், எதை எடுத்துட்டு போனாங்க...'' என்றார் அந்தோணிசாமி.''மதுரை மாநகராட்சியில, முக்கிய பதவிகள்ல இருக்கற சில அதிகாரிகள், 'டிரான்ஸ்பர்'ல போறச்ச, கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் போன்களை கையோட கொண்டு போயிடறா... இதை ஈடு செய்ய, அதிகாரிகள் ஏதாவது கணக்கெழுதி சமாளிப்பா ஓய்...
''இங்க, துணை கமிஷனரா இருந்த பெண்மணி, சமீபத்துல வேற மாவட்டத்துக்கு போயிட்டாங்க... அவங்க
இருந்தப்ப, மாநகராட்சிக்குரிய, 48 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போனை பயன்படுத்திட்டு இருந்தாங்க ஓய்...''போறச்ச, அதுக்கு பதிலா, பழைய போனை கொடுத்துட்டு போயிட்டாங்க... புதுசா வந்த துணை கமிஷனர்ட்ட, பழைய போனை,
அதிகாரிகள் கொடுத்துட்டா... இந்த போன்ல, வாட்ஸ் ஆப், மாநகராட்சியின் ஆப்ஸ் உள்ளிட்ட வசதிகளை பார்க்க முடியாது ஓய்...''விஷயம், கமிஷனருக்கு தெரிய வர, 'பெண் அதிகாரியிடம் இருந்து போனை வாங்கி கொடுங்க'ன்னு உத்தரவு போட்டிருக்கார்... அதிகாரிகள் என்ன செய்றதுன்னு தெரியாம, முழிக்கறா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
ஒலித்த போனை எடுத்த அந்தோணிசாமி, ''சாந்தி, கிருஷ்ணகிரி போயாச்சா...'' என கேட்டு 'கட்' செய்ய, அரட்டை தொடர்ந்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement