Advertisement

பக்க வாத்தியம்

அமைச்சருக்கு தண்ணீரில் கண்டம்?

வைகை அணையில் தண்ணீர் ஆவியாவதை தடுக்க, தெர்மாகோல் அட்டைகளை மிதக்க விட்ட அமைச்சர் ராஜு, அது தொடர்பான கிண்டல், கேலி பேச்சுகள் அடங்கும் முன், மதுரையில் குடிநீர் பிரச்னை தொடர்பான ஆய்வு கூட்டத்தை கூட்டினார். மாநகராட்சியால் குடிநீர் பிரச்னையை சமாளிக்க முடியாததால், தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்குவது தாராளமயமாக்கப்பட்டு இருந்தது. இதை கண்டுகொள்ளாத ராஜு, 'தனியார் தண்ணீர் லாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும். தனியார் லாரிகள் பயன்படுத்தும் தண்ணீரை, மாநகராட்சி பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் ஆராய வேண்டும்' என உத்தரவிட்டார். அமைச்சரின் இந்த பேச்சை கேட்ட கட்சியினர், 'இது அமைச்சரின் இரண்டாவது தெர்மாகோல் திட்டம் போல் இருக்கிறது. தண்ணீர் பிரச்னை உச்சத்தில் இருக்கும்போது, அதை எப்படி சமாளிக்க வேண்டும் என தெரியாமல், வாய்க்கு வந்தபடி பேசும் இவருக்கு, தண்ணீர்ல தான் கண்டம் இருக்கு போல...' என, கிண்டல் அடித்தனர்.

'ஒரு கட்சியுடன் சேர்ந்துடுவாரு...'


மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக் கோரி, புதிய தமிழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த, அதன் தலைவர் கிருஷ்ணசாமி நிருபர்களை சந்தித்தார். 'நீட்' தேர்வை வரவேற்று பேசிய கிருஷ்ணசாமியிடம் நிருபர்கள், சமீபத்தில் நடந்த தபால் துறை தேர்வில், தமிழே தெரியாத ஹரியானா மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றிருப்பதை சுட்டி காட்டினர். கிருஷ்ணசாமி, 'லாலு, நிதிஷ்குமார் போன்றோர் ரயில்வே அமைச்சராக இருந்த காலங்களில், அதிக வட மாநிலத்தவர் தமிழகத்தில் ரயில்வே பணிகளில் அமர்த்தப்பட்டனர். இதில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. தமிழகத்தில் மாறி மாறி ஆட்சியில் இருந்த கட்சிகள் என்ன செய்தன... தமிழக நலனை காப்பாற்றுவதாக கூறி மாணவர்களுக்கு துரோகம் செய்தன' என, சாடினார்.
இதைக் கேட்ட நிருபர் ஒருவர், 'இப்ப சாடுவாரு... தேர்தல் வந்தா ஏதாவது ஒரு கட்சியுடன் சேர்ந்துடுவாரு...' என, 'பஞ்ச்' வைத்தார்.


இந்தம்மாவெல்லாம் அமைச்சரா...

திருச்சி, பிஷப் ஹீபர் கல்லுாரின் பொன்விழா ஆண்டு கொண்டாட்ட நிறைவு விழா, சமீபத்தில் நடைபெற்றது. இதில், ராஜ்யசபா துணைத் தலைவர் குரியன், தமிழக அமைச்சர்கள் நடராஜன், வளர்மதி, எம்.பி., குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் வளர்மதி பேசுகையில், 'இந்த கல்லுாரியில் படித்த பலர், இன்றைக்கு நாடு முழுவதும் வக்கீல்களாக, பொறியாளர்களாக உள்ளனர்' என்றார். இதைக் கேட்ட மாணவர்கள், 'கடகட'வெனச் சிரித்துவிட்டனர். பிஷப் ஹீபர் கல்லுாரி, கலை அறிவியல் கல்லுாரி. அதில் படித்தவர்கள் எப்படி பொறியாளர்களாக இருக்க முடியும்? பெண் அமைச்சரின் பேச்சைக் கேட்ட விழாவில் இருந்த பேராசிரியர்கள், 'எந்த கல்லுாரி விழாவில் பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறார்... இவருக்கெல்லாம் ஓட்டு போட்டு, அமைச்சராக்கிட்டோம்... ஒருத்தரு என்னடான்னா, தெர்மாகோல் வச்சு, வைகையை சீர்படுத்துறாரு... இந்தம்மா இப்படி உளறிக் கொட்டுறாங்க...
தமிழகத்தைப் பிடிச்ச சாபக்கேடு...' என, தலையில் அடித்துக் கொண்டனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement