Advertisement

குறள் வழி வாழ்ந்த, பொய் சொல்லா, வ.சுப.மாணிக்கனார்!

மதுரை, 'காலேஜ் ஹவுஸ்' திருக்குறள் செம்மல் மணிமொழியனார் அரங்கில், பேராசிரியர் ரா.மோகன் மற்றும் பேராசிரியை நிர்மலா மோகன் இணைந்து எழுதிய,
'மாணிக்கக் கதிர் வ.சுப.மாணிக்கனார்' என்ற, நுால் வெளியீட்டு விழாவில், ச.சங்கரலிங்கம் இ.வ.ப., ஆற்றிய உரையின் ஒரு பகுதி.

வள்ளுவம், தொல்காப்பியக்கடல், தமிழ்க்காதல், கம்பர்' என, உரைநடையாகவும், கவிதையாகவும், நாடக வடிவிலும், வ.சுப.மாணிக்கனார், பல நுால்களை எழுதியிருந்தாலும், அவற்றின் படைப்புகளில் தலையாயது, வள்ளுவம் என்ற நுாலாகும். ஆகையால் தான், தமிழக அரசு அவருக்கு, 'திருவள்ளுவர் விருது' வழங்கி சிறப்பித்தது. முன்னாள் முதல்வர், கருணாநிதி, 'குறளோவியம்' எழுதிய பின், அதற்கு அணிந்துரை எழுதுவதற்கு, தகுதியானவராக நம், பொய் சொல்லா, மாணிக்கனாரைத் தான் தேர்ந்தெடுத்தார். அது போல, மதுரை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக, அவரை, எம்.ஜி.ஆர்., நியமித்து பெருமைப்படுத்தினார். திருக்குறளை தேசிய நுாலாக்க வேண்டும் என, குரல் கொடுத்தவர், நம் மாணிக்கனார். தன் பேச்சாலும், மூச்சாலும், சொல்லாலும், செயலாலும் குறள் வழி வாழ்ந்த மாணிக்கனாருக்கு, மதுரை உலகத் திருக்குறள் பேரவையின் சார்பில், நுாற்றாண்டு விழா எடுப்பது மிக பொருத்தமானதாகும்.
இந்த அரிய நுாலை வெளியிடுவதில், மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். 'தமிழ்க் கதிர் வ.சுப.மாணிக்கனார்' என்ற நுாலின் தலைப்பு, மிகுந்த நுண்மாண் நுழைபுலத்துடன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தன் ஆசிரியர், 'பண்டிதமணி' கதிரேசன் செட்டியார் மீது, மாணிக்கனார் அளவற்ற மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார். தான் காரைக்குடியில் கட்டிய புது வீட்டிற்கு, 'கதிரகம்' என, தன்
ஆசிரியரின் பெயரை சூட்டினார்.

உருவச்சிலை : தான் பிறந்த ஊரான மேலைச்சிவபுரியில், பண்டிதமணியின் நுால்களை மறுபதிப்பு செய்து சிறப்பித்தார். பண்டிதமணியின் பிறந்த ஊரான, மகிபாலன்பட்டியில், அவருக்கு முழு உருவச்சிலை நிறுவி, மகிழ்ந்தார். அவர் தன் ஆசிரியரிடம் கொண்ட அளப்பரிய அன்பையும், மதிப்பையும் குறிக்கும் விதமாக, இந்த நுாலுக்கு, 'பண்டிதமணி கதிரேசன் செட்டியார்' என்ற பெயரில் இருந்து, 'கதிர்' என்ற சொல்லை எடுத்து வைத்த ஆசிரியர்களின் திறத்தை வியந்து போற்றுகிறேன். இந்த நுாலின் மூலம், இலக்கியத்தின் மீது அவர் கொண்டிருந்த முழுமையான பார்வையை, நாம் உணர முடிகிறது. 'தொல்காப்பியக்கடல், தமிழ்க்காதல், வள்ளுவம், கம்பர்' என, அவரின் சிறப்பான நுால்களை ஆழமாக ஆராய்ந்து, தெளிவான சிந்தனையுடனும், அழகான மொழி நடையிலும் இந்நுாலை எழுதியுள்ளனர், இதன் ஆசிரியர்கள்.
மாணிக்கனார், மிகுந்த தமிழ்ப்பற்று உடையவர். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, 'படி அரிசி திட்டம்' கொண்டு வந்த போது, 'படி தமிழ் திட்டம்' கொண்டு வர வேண்டும் என, சொன்னவர். தன் குழந்தைகளுக்கு, தொல்காப்பியன், பூங்குன்றன், பாரி, தென்றல், மாதரி, பொற்கொடி என, துாய தமிழ் பெயர்களை சூட்டி, மகிழ்ந்தவர். மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கத்துக்கு உறுதுணையாக இருந்தவர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், தொல்காப்பிய தகைஞராக பணியாற்றியவர். மறைவுக்கு பின், தன், 4,600 புத்தகங்களையும், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்திற்கு கொடுத்து, தமிழ் வாழ்வதற்காக பாடுபட்டவர். அன்னம் பாலிக்கும் தில்லையில், திருமுறைகள் பாடப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். தமிழ்க் கதிருக்கு, தமிழ் சுடர்கள் எழுதிய இந்த நுாலை, வெளியிடும் விழாவில், வருமான வரித்துறை அதிகாரிக்கு என்ன வேலை... என, பலரும் யோசிக்கலாம்!மாணிக்கனார், தன் சிறு வயதில், பர்மாவில் வட்டிக் கடையில் சேர்ந்த போது, ஒரு அதிகாரி வரும் போது, 'இல்லை' என, முதலாளி சொல்ல சொன்ன போது, பொய் சொல்ல மறுத்தார். அந்த அதிகாரி, ஒரு வருமான வரி அதிகாரி.
அந்த அதிகாரியின் பொருட்டு, பொய் சொல்ல மறுத்த காரணத்தால் தான், அவர் தமிழகம் வர நேர்ந்து, பண்டிதமணி கதிரேசன் செட்டியாரின் மாணவராக சேர்ந்து, தமிழ்ப்புலமையும், தேர்ச்சியும் பெற்றார். எனவே, மாணிக்கனாரை பர்மாவில் இருந்து, தமிழகத்துக்கு திருப்பி அனுப்ப காரணமாக இருந்தவர், ஒரு வருமான வரி அதிகாரி. அதை கருதி தான், விழாக் குழுவினர், இந்த பொறுப்பை எனக்கு அளித்துள்ளனர் போலும்.

முழுமையாக படிக்க வேண்டும் : மாணிக்கனார் வலியுறுத்திய முழுப்பார்வை, இலக்கிய உலகுக்கு மட்டுமின்றி, நம் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளுக்கும், பொருத்தமானதாகும்.
வருமான வரி தொடர்பான, ஒரு உச்ச நீதிமன்ற தீர்ப்பில், இந்த பார்வை தான் அடி நாதமாக விளங்குகிறது. ஒரு நுாலையோ, கட்டுரையையோ படிக்கும் போது, ஓரிரு வார்த்தை கள் அல்லது வரிகளை மட்டுமே படித்து, ஒரு முடிவுக்கு வராமல், அந்த நுாலை அல்லது கட்டுரையை முழுமையாக படித்து முடிவுக்கு வரவேண்டும் என, கூறுகிறது.எனவே, மாணிக்கனாரின் முழுப்பார்வையை நாமும், நம் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்ற செய்தியை, அவரின் நுாற்றாண்டு விழாவில், உங்களின் மேலான சிந்தனைக்கு வைத்து, வாய்ப்பளித்த உலகத் திருக்குறள் பேரவையைச் சார்ந்த பெருமக்களுக்கு நன்றி பாராட்டுகிறேன். நன்றி. வணக்கம்!

ச.சங்கரலிங்கம், இ.வ.ப.,

ஆணையாளர், வருமான வரித்துறை, மதுரை

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா

    சிறந்த கருத்துக்கள் தினமும் வரவேண்டும், இன்றைய தமிழ் வியாபாரிகள் அவசியம் படிக்கவேண்டும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement