Advertisement

'நீட்' தேர்வு ஏற்படுத்திய கசப்பும், உண்மைகளும்

எம்.பி.பி.எஸ்., மற்றும் மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வு, தமிழகத்தில் பல்வேறு சர்ச்சைகளுடன் முடிந்தது. தமிழகத்தில், இத்தேர்வில், 87 ஆயிரம் பேர் பங்கேற்றது சற்று வியப்பானது. ஆனால், தேர்வு வினாத்தாள், சி.பி.எஸ்.இ., நடைமுறையில் படித்தவர்கள், எளிமையாக கையாளும் வகையில் இருந்திருக்கிறது. மருத்துவக் கல்லுாரிகள் சேர்க்கைக்கான இத்தேர்வு, மத்திய கல்வி வாரியம் நடத்தியது என்றபோதும், இதில் மேற்கொள்ளப்பட்ட கெடுபிடிகள் சற்று அதிகம்; தேவையற்றதும்கூட. பொதுவாக, பிளஸ் 2 உட்பட சில தேர்வுகள், பல்வேறு மாநிலங்களில் மிக மோசமாக நடத்தப்படுகின்றன. அந்த விஷயத்தில், தமிழகத்தில் நிலைமை முன்னேறி இருக்கிறது. இத்தேர்வில் கம்மல், மூக்குத்தி கூட அணிந்து வரக்கூடாது என்ற அளவுக்கு கெடுபிடிகள் இருந்தபோதும், அதையும் தாண்டி, சில இடங்களில் நடைபெற்ற சோதனை முறைகள் ஏற்புடையதல்ல. இதை அடுத்த ஆண்டு மத்திய அரசு சீராக்க வேண்டும்.
'நீட்' தேர்வு என்பது, பிளஸ் 2 படிப்பில் இயற்பியல், ரசாயனம் உட்பட அறிவியல் படிப்புகளில் அதிக நாட்டம் கொண்டவர்களுக்கு வாய்ப்பைத் தரும் தேர்வாகும். தமிழிலும் இந்த தேர்வு நடக்கும் என்கிறபோது, அதிக எண்ணிக்கையில் பங்கேற்ற ஆர்வத்தைக் காணும்போது, 'சமூகநீதி' என்ற கருத்தைப் பேசிய பலரும் குழம்பலாம். அரசு பள்ளிகளின் பாடத்திட்டம் மோசம் என்பது உண்மையானதை, அவர்கள் உணர்ந்திருக்கலாம். தவிர, மருத்துவக் கவுன்சில் செயல்முறைகள் சரியல்ல; அந்த அமைப்பு மேற்கொள்ளும் நடைமுறைகள், மருத்துவர் எண்ணிக்கையை முறையாக, நல்ல தரத்தில் உருவாக்க உதவவில்லை என்பது, பல ஆண்டுகளாக பேசப்படும் விஷயம். அதேபோல, கிராமப்புறங்களில் பணியாற்றும் எம்.பி.பி.எஸ்., படித்த டாக்டர்கள், முதுநிலைப் படிப்புக்கான இடங்களில், 50 சதவீதம் ஒதுக்கீடு தேவை என்பதை வலியுறுத்தும் பலரும், கிராமப்புறங்களில் டாக்டர்கள் பணியாற்ற முன்வரமாட்டார்கள் என்ற வாதத்தை வைக்கின்றனர். எம்.பி.பி.எஸ்., படிப்பில் அரசு கல்லுாரிகளில் பயில்வோர், தனியார் நடத்தும் சிறந்த கல்லுாரிகளில் பயில்வோர், ரஷ்யா, பிலிப்பைன்ஸ், சீனா போன்ற நாடுகளில் பட்டம் பெற்று, அதற்குப்பின் அங்கீகாரச் சான்றிதழ் பெற்றோர் என, பல ரகம் உண்டு.
பொதுவாக, தலைசிறந்த டாக்டர்களாக உருவாகும் சிலர், மிகப்பெரும் தனியார் மருத்துவமனைகள் அல்லது பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று, தங்கள் மருத்துவப் பணிகளை நடத்தி, வெற்றி வாகை சூடுகின்றனர்.
தமிழகத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்கள் பலவற்றில், டாக்டர்கள் வருகை, அங்கு தங்கி பணியாற்றும் நேரம், அவசர சிகிச்சைகளில் முழு வெற்றி ஆகியவை குறித்து, எந்தவிதப் புள்ளி விபரமும் கிடையாது. சிறப்பாகப் பணிபுரியும் சிலர், சொந்தமாக மாலை நேர, 'கிளீனிக்' நடத்தி, பண அறுவடை நடத்துகின்றனர். இவர்களில் பலர், தங்கள் பணிக்கான புத்தாக்கப் பயிற்சியில் ஈடுபடாமல் இருப்பதும் உண்டு. ஏழைகளுக்கு சிறந்த மருத்துவம் தரும் ஒரு சில மருத்துவர்கள், அப்பாவிகள் லிஸ்டில் சேருவர். இந்த காரணங்களால், கிராமங்களுக்கு தேவைப்படும் மருத்துவ வசதி முழுவதும் மேம்படவில்லை. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட, 'ஜெனரிக்' மருந்துகளை, டாக்டர்கள் தர வேண்டும் என்ற கருத்தும் எதிர்க்கப்படுகிறது.
மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் கைகோர்த்து, இந்த ரக மருந்துகளின், புதிய புதிய பெயர்களை அறிமுகப்படுத்தும் வழக்கமும் நடைமுறையாக இருப்பதே இதற்கு காரணம்.
மருத்துவச் செலவைக் குறைத்தல், காப்பீடு பயன்களை அதிகரித்தல், இத்தொழிலில் சிறந்த டாக்டர்கள் எண்ணிக்கையைப் பெருக்கி, அதன் மூலம் மருத்துவ வசதி அதிகரிப்பதற்கான, ஒவ்வொரு முயற்சியும் இன்றையத் தேவை. இவை கேட்க கற்பனையாக தோன்றுவதற்கு, டாக்டர் படிப்பு என்பது அதிக பணம் சம்பாதிக்கும் அபூர்வ தொழில் என்ற கருத்து, தொடர்ந்து நீடிப்பதே காரணம். அதனால், எதை எடுத்தாலும் இட ஒதுக்கீடு என்பதும், அதே சமயம், அதனால் வளரும் லஞ்சத்தைத் தடுக்கவும் முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கிறது.
தற்போது, 'நீட்' தேர்வு எழுதிய மாணவ, மாணவியர், புதிய யுகத்தின் பார்வையைப் புரிந்து, சில இடர்களைத் தாண்டி, அதிக முனைப்புடன் தேர்வு எழுத முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Ganesh Tarun - Delhi,இந்தியா

    Neet exam dress code எப்படி இருக்கணும்னு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சின்ன விதிகளை கூட பாலோ பண்ண முடியாத மாணவர்கள் வேலையை எப்படி ஒழுங்காக செய்வார்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement