Advertisement

சொல்கிறார்கள்

பகலிலும் குளிர்ச்சியாக இருக்கும்!



கொளுத்தும் வெயிலில், வீட்டை குளுமையாக்கும் தொழில்நுட்பம் குறித்து கூறும், 'காவ்யா ஹோம்ஸ்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ஜெகதீஷ்: செங்கல்லில் கட்டப்பட்ட கட்டடங்கள் உறுதியாக இருந்தாலும், வெயிலின் தாக்கம் வீட்டுக்குள் அதிகமாக இருக்கும்.தற்போது, சந்தையில் செங்கல்லுக்கு மாற்றாக, 'தெர்மோபிளாக்ஸ்' என்ற கல் அறிமுகமாகி உள்ளது. இதை வைத்து வீடு கட்டும்போது வெயில் காலத்தில், வெப்பம் வீட்டுக்குள் வருவது தடுக்கப்படும்; செங்கல் கொடுக்கும் உறுதித் தன்மையை இதுவும் கொடுக்கும். சுற்றுச்சூழலுக்கு இது ஏற்றது; ஆனால், தெர்மோபிளாக்சில் ஆணி அடிக்கும்போது கவனம் தேவை.
மொட்டை மாடியில், சாதாரண காவி நிற கற்களையே பெரும்பாலும் பதிக்கின்றனர். இந்த கல், தண்ணீரை வீட்டுக்குள் புகவிடாமல் தடுப்பதோடு, வெப்பத்தை கட்டுப்படுத்தாமல் உள்ளே இறக்கிவிடும். எனவே, இதற்கு பதிலாக, வெள்ளை நிற கற்கள், அனைத்து கடைகளிலும் கிடைக்கின்றன.இந்த வெள்ளை நிற டைல்ஸ், வெப்பத்தை எதிரொலித்துவிடும். இதனால், இரவில் மட்டுமின்றி, பகலிலும் வீட்டின் அறை குளிர்ச்சியாக இருக்கும். மின்சாரம் இல்லா விட்டாலும் அதிகமாக வியர்க்காது, வெப்பமும் தெரியாது.வெள்ளை நிற டைல்ஸ்களை பதிக்க முடியவில்லை என்றால், வெயிலை தடுக்கும் வெள்ளை நிற பெயின்டை, மொட்டை மாடித் தளத்தில் பூசலாம். ஆனால், புதிதாக வீடு கட்டுபவர்கள், வெயிலைச் சமாளிக்கக்கூடிய வகையில் கட்டுவது
நல்லது.இது தவிர, வீடுகளில் இருக்கும் ஜன்னல்களை, காற்றோட்டம் கொண்டவைகளாக அமைப்பது நல்லது. ஜன்னல் கண்ணாடி மீது கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதால், வெயிலின் தாக்கத்தில் இருந்து சிறிது தப்பலாம்.மேலும், வீட்டில் இடமிருந்தால், ஆங்காங்கே செடிகள் வளர்த்து வீட்டை பசுமையாக்கலாம். மூலிகைச் செடிகளாக வளர்த்தால், உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கும். மாடியில் தோட்டம் அமைத்தும் வெப்பத்தை குறைக்கலாம்.
பிளாஸ்டிக் மற்றும் துணிகளாலான கால்மிதிகள், திரைச்சீலை, தரைவிரிப்புகளுக்கு பதிலாக, வெட்டிவேர் மூலிகை நார்களால் செய்யப்பட்டவற்றைபயன்படுத்தினால், வீட்டின் வெப்பத்தை எடுத்துக் கொள்ளும்.புதிதாக வீடு கட்டுபவர்கள் இனி, கலர், டிசைன் எனப் பார்க்காமல், கட்டடத்தின் தன்மையை பார்ப்பது அவசியம். இதே போல், ஏற்கனவே வீட்டை கட்டியிருக்கும் பலரும், தங்கள் விருப்பத்திற்கேற்ப, இன்ஜினியர்கள் ஆலோசனையுடன் மாற்றிக்கொள்ளலாம்.
வெயிலிலிருந்து தப்ப, இயந்திரங்களின் பின்னால் ஓடிக் கொண்டிருக்காமல், இப்படியும் மாற்றி யோசித்து, நிரந்தரத் தீர்வு கண்டு, வெயில் கொடுமையிலிருந்து தப்பலாம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement