Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'நீங்க பாட்ல ஏதோ, 'அடிச்சு' விடுறீங்க... சம்பந்தப்பட்டவங்க உங்க மேலே பாய்ஞ்சுடப் போறாங்க...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா பேட்டி: திராவிட கட்சிகளின் ஆட்சியில், அரசியல் மரணங்கள் பல நடந்துள்ளன. நாமக்கல் சுப்ரமணியம் மட்டுமல்ல, சாதிக் பாட்ஷா, ஸ்டாலின் நண்பர் ரமேஷ் உள்ளிட்ட அனைத்து மரணங்கள் குறித்தும், சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். கோடநாடு காவலாளி கொலை குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அது, முதல்வர் பழனிசாமிக்கும் வசதியாக இருக்கும்.




'ஏது... பேட்டியெல்லாம் குடுக்குற அளவுக்கு, அரசியல்ல தேர்ந்துட்டீங்களோ...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், அகில இந்திய, காங்., பொதுச்செயலர் நக்மா பேட்டி:
தமிழக அரசு, மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும். ஆனால், இந்த அரசு அப்படி ஏதும் செய்யவில்லை. அ.தி.மு.க.,வில் உள்ள இரண்டு அணியினரும், இரட்டை இலை சின்னத்துக்காக, குடிநீர் பிரச்னை, நீட் பிரச்னை என, அனைத்தையும் விட்டுவிட்டு, நாடகமாடிக் கொண்டிருக்கின்றனர்.




'அரசியல் நாகரிகம்ன்னு ஒண்ணு இருக்கு சார்... இந்த கட்சிகளை அவமானப்படுத்துறதா நினைச்சு, மூத்த தலைவரின் கவுரவம் குலையும் வகையில், உங்க தலைவரை நீங்க அவமானப்படுத்துறீங்கங்கறதை புரிஞ்சுக்குங்க...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., அமைப்புச் செயலர், ஆர்.எஸ்.பாரதி எம்.பி., பேட்டி:
பா.ஜ., மதவாத கட்சி என்பதால், அக்கட்சியின் தலைவர்களை, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் சட்டசபை வைர விழாவிற்கு, நாங்கள் அழைக்கவில்லை. பா.ஜ.,வுடன் நட்பு கட்சியாக, அ.தி.மு.க., விளங்குகிறது. எனவே, அக்கட்சியையும் அழைக்கவில்லை.




தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி: '
கருணாநிதியின் பொது வாழ்க்கையையும், கட்சியை கடந்த அவரது நட்பையும், குறுகிய அரசியல் வட்டத்திற்குள் சுருக்காதீர்கள்' என்று தான் கூறினேன்; கருணாநிதியின் சட்டசபை வைர விழாவுக்கு, பா.ஜ.,வுக்கு அழைப்பு விடுக்குமாறு, நான் கேட்கவில்லை. ஊழல் கட்சியான, தி.மு.க.,வுடன் எங்களுக்கு, உறவு தேவையில்லை. அரசியல் நாகரிகம் கருதி நான் கூறியதை, திசை திருப்பும் வகையில், ஆர்.எஸ்.பாரதி கூறுவது சரியல்ல.




'யார் சைடு, 'கோல்' போடுறதுக்காக, நீங்க திருவாய் மலர்ந்திருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி:
தலித் வகுப்பைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர்கள், தாங்கள் பதவி நீடித்தால் போதும், மீண்டும் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் போதும் என்ற மனோநிலையில் இருப்பதாகவே தெரிகிறது. சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தாம் வஞ்சிக்கப்படுவதையும், சுரண்டப்படுவதையும், அவர்களாலேயே உணர முடியாதது வேதனைக்குரியது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement