Advertisement

டீ கடை பெஞ்ச்

மந்திரிகளிடம் பணம் கேட்கும் தினகரன் வலது கரம்



''துாங்க விட மாட்டேங்கறார் ஓய்...'' என, முதல் ஆளாக விஷயத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''யாரை சொல்றீங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''திருச்சி மாநகர போலீஸ் அதிகாரியை தான் சொல்றேன்... இவர், போக்குவரத்து போலீசாருக்கு, சமீபத்துல ஒரு உத்தரவு போட்டிருக்கார்... அதாவது, 'பகல் டூட்டி பார்த்த போலீசார், ராத்திரி, 9ல இருந்து காத்தால, 6 மணி வரை, குற்றப்பிரிவு போலீசாருடன் சேர்ந்து, வேலை பாக்கணுமாம் ஓய்...''இதனால, பெரும்பாலான போக்குவரத்து போலீசார், ராத்திரி துாங்காம, மறுநாள் வேகாத வெயில்ல நின்னு, போக்குவரத்தை சரிப்படுத்துற பணியில ஈடுபடறா...
''மாநகர குற்றப்பிரிவுல போலீசார் பற்றாக்குறையா இருக்கறதால, அதிகாரி இந்த திட்டத்தை செயல்படுத்தியிருக்கார்... போலீசாரை ஓய்வு எடுக்க விடாம, படுத்தி எடுக்கறது, அவாளுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்திடுத்து... அதிகாரி பத்தி, டி.ஜி.பி.,க்கு புகார் அனுப்ப போறா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
''பிரபாகரன்... நாளைக்கு தொகை வந்துடும் பா...'' என, போனை, 'கட்' செய்தபடியே வந்த அன்வர் பாய், ''மன்னார்குடி கும்பலோட, இன்னும் தொடர்புல தான் இருக்காங்க பா...'' என, மேட்டருக்கு வந்தார்.
''அ.தி.மு.க., தகவலாங்க...'' என்றார் அந்தோணிசாமி.''ஆமாம் பா... 'சசிகலா, தினகரன் கும்பலை, கட்சி, ஆட்சியில இருந்து ஓரம் கட்டிட்டோம்'னு அமைச்சர்கள் பலரும் கற்பூரத்தை அணைக்காத குறையா சொன்னாங்களே...
''ஆனா, பல அமைச்சர்கள் இன்னும், சசிகலா சொந்தங்கள் தொடர்புல தான் இருக்காங்க பா... சமீபத்துல, முதல்வர் பழனிசாமி, மதுரையில பங்கேற்ற விழாக்களுக்கு, 'தெர்மாகோல்' புகழ் அமைச்சர் கொடுத்த விளம்பரங்கள்ல, சசிகலா, தின
கரன் படங்கள் இல்லாம பார்த்துக்கிட்டார்...''ஆனா, அவர் சட்டை பையில, இன்னும் ஜெ., - சசி படங்களை வச்சுட்டு தான், வலம் வர்றாரு பா...'' என்றார் அன்வர் பாய்.''நீரு சொன்னதுக்கு ஏத்த மாதிரி, என்கிட்டயும் ஒரு தகவல் இருக்கு வே...'' என்ற அண்ணாச்சி தொடர்ந்தார்...''தினகரனுக்கு
வலது கரமா இருந்தவர், 'மாஜி' அமைச்சர் ஒருத்தர்... அவருக்கு டில்லியில, முக்கிய பதவியை தினகரன் கொடுத்தார்... தினகரனை ஒதுக்கி வச்சுட்டதா, அமைச்சர்கள் வட்டாரம் அறிவிச்சாலும், டில்லி பதவியில, 'மாஜி' தான் இன்னும் இருக்காரு வே...
''இவர், அடிக்கடி தலைமைச் செயலகத்துக்கு வர்றார்... அமைச்சர்கள் அறைகளுக்கு போய், தினகரன் பேரை சொல்லி, பெரும் தொகை தாங்கன்னு கேக்காரு... இவர் தலையை கண்டாலே, அமைச்சர்கள் கதிகலங்கி போயிடுதாவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
கடைக்குள் இருந்த நாயர், ''தளவாய்க்கு சூடா ஒரு டீ போடுப்பா...'' என, கத்தியது, தெரு முனை வரை ஒலிக்க, நண்பர்கள் நடையை கட்டினர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement