Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேட்டி: விவசாய வருமானத்திற்கு வரி விதிக்கும் திட்டம் ஏதும், அரசின் பரிசீலனையில் இல்லவே இல்லை. விவசாயிகளில் பெரும் பணக்காரராக இருப்பவர்கள், மிக மிக அரிது. விவசாயத்திற்கு தேவையான உதவிகளை அரசு செய்யுமே தவிர, வரி விதிக்காது. விவசாய வருமானம், மாநில அரசின் சம்பந்தப்பட்டது. இதில், எந்த ஒரு மாநிலமும், வரி விதிக்க முன்வராது.



பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளில், அவர்களின் நலனை விட, பொது நலனே நிறைந்துள்ளது. போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். இவற்றை கருத்தில் கொண்டு, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, வேலை நிறுத்தத்தை தவிர்க்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகனுமான அழகிரி பேட்டி: கருணாநிதியின் உடல்நலம் தொடர்பாக விசாரிப்பதற்காக, தற்போது சென்னை வந்துள்ளேன். இப்போது நான், தி.மு.க.,விலேயே இல்லை. அதனால், தி.மு.க.,வின் செயல்பாடுகள் தொடர்பாக எதுவும் சொல்ல விரும்பவில்லை. கருணாநிதியின் சட்டசபை வைர விழாவில், நிச்சயம் பங்கேற்பேன்.




கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர்கள் சங்க மாநில தலைவர் சேகர் பேட்டி:
மத்திய அரசு, டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை, தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. இதில், கேபிள் ஆப்பரேட்டராக சேர, புதிய ஆப்பரேட்டர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. கடந்த, 10 ஆண்டுகளாக அரசுக்கு வைப்புத்தொகை செலுத்தி, தொழில் செய்து வரும் நிலையில், புதிதாக விண்ணப்பங்கள் பெறுவதால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கிறது.


அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் பேட்டி: தமிழகத்தில் பல்வேறு இடங்களில், 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டதால், வேலையின்றி தவிக்கும் ஊழியர்களை, இயங்கி வரும் கடைகளில் பணியமர்த்த வேண்டும். இவர்களை, கல்வித் தகுதி, சீனியாரிட்டி அடிப்படையில், அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களில் பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். இது தொடர்பாக நடந்த பேச்சில், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என, உறுதியளிக்கப்பட்டது; ஆனால், இதுவரை நடக்கவில்லை.


அரசியல் நாகரிகத்திற்கு உதாரணமாக இதற்கு மேல் எதையும் சொல்ல முடியாது என்பது போல், தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி:
கட்சி வேற்றுமை பார்க்காமல், அனைத்து தரப்பினரிடமும் அன்பாக பழகி பேசக்கூடியவர், தி.மு.க., தலைவர் கருணாநிதி. அவரின் வைர விழா, பிறந்த நாள் விழா, விரைவில் கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு, பா.ஜ., - அ.தி.மு.க., உட்பட அனைத்து கட்சிகளையும் அழைத்து, அனைத்து தலைவர்களும் விழாவில் பங்கேற்று, கருணாநிதியை வாழ்த்தினால் தான், விழா முழு சிறப்படையும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement