Advertisement

சொல்கிறார்கள்

பால் பிடிக்காதவர்கள் என்ன சாப்பிடலாம்?


பால் பிடிக்காதவர்களுக்கு, அதை ஈடு செய்ய சாப்பிட வேண்டிய உணவு குறித்து கூறும், ஊட்டச் சத்து நிபுணர், நித்யஸ்ரீ:குறிப்பிட்ட வயதில், சிலருக்குப் பால் பிடிக்காமல் போய் விடுகிறது. பால் குடிப்பதை தவிர்த்தால், எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் கால்சியம், நமக்கு கிடைக்காமல் போய்விடும்.
முதல், ஆறு மாதங்கள் வரை, 200 மி.கி., 7 - 12 மாதங்கள் வரை, 260 மி.கி., 1 - 3 வயது வரை, 700 மி.கி., 4 - 8 வயது வரை, 1,000 மி.கி., 8 - 18 வயது வரை, 1,300 மி.கி., 18 வயதிற்கு மேல், 1,000 - 1,200 மி.கி., கர்ப்பிணிப் பெண்களுக்கு, 1,300 மி.கி., கால்சியம், தினமும் தேவை.பெண்களின் உடலில் கால்சியம் குறைந்தால், கூன் விழும். மாதவிடாய் நின்ற பின், இது ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். 'ஆஸ்டியோபொரோசிஸ்' என்ற, எலும்பு சார்ந்த நோய் ஏற்படும். எலும்புகள் வலுவிழப்பதால், விழுந்து அடிபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.குழந்தைகளின் வளர்ச்சியில், எலும்புகள் முக்கியப் பங்காற்றுகின்றன. கால்சியம் குறைவு, குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்கும்; பற்கள் பாதிக்கப்படும். எலும்பின் அடர்த்தி குறைந்து, எலும்பு உடைவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.சோர்வு, கவனக் குறைவு, இணைப்புகளில் வலி, தசைகளில் வலி, மூச்சுத் திணறல், அடிக்கடி உடல் மரத்துப் போதல் போன்றவை, கால்சியம் குறைபாட்டின் அறிகுறியே.
எனவே, பால் குடிக்காதவர்களுக்கு, கால்சியம் கிடைக்க ஏராளமான உணவு வகைகள் உள்ளன. தானியம் - கேழ்வரகு, சிவப்பு அவல், வரகு, கோதுமை, பனி வரகு; பருப்பு - கடலைப் பருப்பு, உடைத்த கடலை, கருப்பு உளுந்து, கொள்ளு, ராஜ்மா, துவரம் பருப்பு, பச்சைப் பயறு, பட்டாணி.கீரை - அகத்தி, பருப்பு, வெந்தயம், முருங்கை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி; காய் - கேரட், பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பாகற்காய், நெல்லிக்காய், காலிபிளவர், முருங்கைக்காய், சுண்டைக்காய், வாழைப்பூ; பழம் - கொய்யா, பேரீச்சை, திராட்சை, ஆரஞ்சு, பப்பாளி.
இலை - கேரட் இலை, முட்டைக்கோஸ் இலை, கொத்துமல்லி இலை, கறிவேப்பிலை, காலிபிளவர் இலை; விதை - சூரியகாந்தி விதை, தர்பூசணி விதை, எள்ளு உருண்டை, வால்நட், பாதாம்.இவை தவிர பாதாம், வேர்க்கடலையை, 10 - 16 மணி நேரம், நீரில் ஊற வைத்து அரைத்து, தேங்காய் பால் போல பிழிந்து, பாலுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம்.
இதன் பச்சையான சுவை பிடிக்காதவர்கள், சூடாக்கியும் பயன்படுத்தலாம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement