Advertisement

வங்கிகள் கடன் சுமை தீர்ந்தால் இனி நல்லது!

வாராக் கடன்களை முடிவுக்கு கொண்டு வர, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் திருத்தப்பட்டு உள்ளது. நீண்ட ஆலோசனைக்குப் பின், மத்திய அரசு இதைச் செய்திருப்பது, 'வேண்டுமென்றே'
வங்கிக் கடனை செலுத்த விரும்பாத,தொழிலதிபர்களுக்கு சிக்கலை தரும்.
தொழிலதிபர் சுப்ரதா ராய், மோசடி வழக்கில் சிக்கி, சுப்ரீம் கோர்ட் கேள்விகளால் திணறுவதைக் காண்கிறோம். அதிகமான ஆடம்பரத்தில் திளைத்தவரும், எல்லாரையும் ஈர்த்து, வசீகர வாழ்க்கையின் ஆதாரமாக விளங்கியவருமான மல்லையா, தற்போது, பிரிட்டனில் பதுங்கி இருக்கிறார். இவர், வங்கிகளை ஏமாற்றி, தன் சொந்த ஆஸ்திகளை பாதுகாத்த தகவல்கள், ஏராளமாக வெளிவந்து விட்டன.பல பொதுத்துறை வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்து விட்டு, பிரிட்ட னில் இன்று சொகுசாக வாழும் மல்லையாவை,இந்தியாவுக்கு பிடித்துக் கொண்டு வர, ஏராளமான சட்ட நடைமுறை தேவை. அரசு தகவலின்படி, கடன் கட்ட முடியாமல் சிரமப்படும், தொழில் அதிபர்கள் உண்டு. அவர்களின் தொழில் நசிவு, அதற்கு அடிப்படையான காரணம். ஆனால், அதிக வருமானம், செயல் திட்டங்களின் இயல்பான தகவல்களை சாமர்த்திய மாக மறைத்து, வங்கி அதிகாரிகளை வளைத்து, பணத்தை அபகரிக்கும் மல்லையா போன்றவர்கள், நாட்டிற்கு எதிரானவர்கள். கடந்த, 2016 டிசம்பர் வரை, வங்கிகள் அனைத்திலும், 9.64 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன்கள் உள்ளன. அரசு துாண்டுதலில், வங்கி கள் நடத்திய கெடுபிடிகளில், வாராக்கடனில் திருப்பிச் செலுத்தப்பட்ட தொகை, 47 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே.
வெளிநாட்டு வங்கிகளில், தொழில் ஆவணங்களை தருவது, அதே போல, சில லெட்டர் பேடு கம்பெனிகளின் ஆஸ்திகள் என, தவறான தகவல்களை காட்டி, அதிக பணம் இருப்பது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி, அதற்குப் பின், பொதுத்துறை வங்கிகளில், கோடிகளில் பணத்தை வாங்கி, ஏப்பம் விடும் கோஷ்டி அதிகரித்ததே, இச்சுமைக்கு காரணம். ஆனால், வெளிநாட்டு வங்கிகளில், இவர்கள் பணத்தை அபகரிக்கவில்லை. நம்முடைய, 'வங்கிகள் ஒழுங்குபடுத்தும் சட்டம் - 1949'ல், சில ஓட்டைகள் இருந்ததை, சமீபத்திய திருத்தங்கள் மூலமாக, சீர் செய்திருக்கிறது மத்திய அரசு. வாராக்கடனை வசூலிப்பதில், பொதுத்துறை வங்கிகளுடன், மத்திய ரிசர்வ் வங்கியும் இணைந்து, அதிரடி நடவடிக்கை எடுக்க உதவும் இந்த அவசர சட்டம், இக்குறைகளை பெருமளவு குறைக்கலாம். இந்த அவசர சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன், பொதுத்துறை வங்கிகள், ரிசர்வ் வங்கி மற்றும் வாராக்கடன் பாதிப்பில் உள்ள கம்பெனி கள் என, அனைவரது கருத்துக்களும் கேட்கப்பட்டு, அதனடிப்படையில், இச்சட்டம் அமலாகியிருக்கிறது.
லஞ்ச ஒழிப்பு நடைமுறைகளுக்கு உதவும் வகையில், இனி வங்கி உயர் அதிகாரிகள், கோடிகளில் கடனுதவியை தரும் போது, சட்ட வரன்முறைகளில் தர வசதியாகும். ஏற்கனவே, அமலாக்கத்துறை, நாடு முழுவதும் நடத்திய பல்வேறு சோதனைகளில், பல உண்மைகள் வெளிவந்திருக்கின்றன. வங்கி அதிகாரிகள் சிலர், தவறுகளுக்கு உடந்தை என்றாலும், தொழில் வளர்ச்சிக்கான மூலதனத்தை வழங்கும் முடிவுகளில், வங்கிகள் இடர்ப்படாமல் இருக்கவும் இது உதவிடும்.பொதுத்துறை வங்கிகள், ஏற்கனவே சிறிது சிறிதாக அரசியல்வாதிகள் பிடியில் இருந்து தற்போது விலகி வருகின்றன. சட்ட உதவிகளுடன், பட்டய கணக்காளர்களின் சாமர்த்திய நுணுக்கங்களுடன், மல்லையா போன்ற சிலர், மற்றவர்களை எளிதாக ஏமாளியாக்க நினைப்பதை மாற்றும் இந்த அவசரச் சட்டம், பார்லிமென்டில் விவாதிக்கப்படும்.
அப்போது, நல்லதொரு விவாதம் வரும் பட்சத்தில், அரசியல் கட்சித் தலைவர்கள், வங்கி அதிகாரிகள் மற்றும் செல்வாக்கு பெற்ற, 'மற்ற சக்திகள்' மக்கள் வரிப்பணத்தை எப்படி பாழடிக்கின்றன என்ற தகவல்கள் அதிகம் வெளிவரலாம். பழைய சட்டங்களால், செழித்து வளர்ந்த பலரும், இனி மாற்றங்களை ஏற்றாக வேண்டிய கட்டாயம் வருகிறது என்பதை, இச்சட்டம் காட்டு கிறது. வங்கிப் பணிகளும் ஒளிவுமறைவின்றி மாற, இது உதவிடும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement