Advertisement

அந்த அன்பு தேசம் போல் வருமா

எனது வெளிநாட்டுப்பயணத்திற்கு பின்னர் நான் ரொம்பவே மாறி விட்டேன். காரிலோ, இரு சக்கர வாகனத்திலோ செல்லும் போது மக்கள் சாலையை கடக்க நின்றால் அவர்களுக்கு வழி விட்டு அவர்கள் சென்ற பின்னரே செல்கிறேன். எனக்கு பின்னால் வரும் வாகன ஓட்டிகள் என்னை திட்டுகின்றனர். விடாமல் ஒலி எழுப்பி சுற்றியிருப்போர் காதைசெவிடாக்குகின்றனர். ஆனால் அதைப் பற்றியெல்லாம் நான் கொஞ்சம் கூட கவலைப் படுவதில்லை. ரோட்டை நிம்மதி யாக கடந்து சென்ற அந்த பாத சாரியின் கண்களில்கண்ட சந்தோஷம் எனக்குள் மிகப்பெரிய மகிழ்ச்சியை, நிம்மதியைத் தருகிறது. இப்போதெல்லாம் சாலையில் செல்லும் போது வாகனங்களை முந்துவதில்லை. தேவையின்றி ஹாரன் அடிப்பதில்லை. இந்த மாற்றங்கள் எல்லாம் எப்படி வந்தன? அண்மையில் நான் ஜெர்மனிக்கு சென்று வந்த பின்னர்தான் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன. வாழ்க்கையில் மனிதர்களுக்கு, பயணங்களைப் போல அனுபவம் தரும் அம்சம் எதுவும் இல்லை என்பதை முழுமையாக உணர முடிந்தது இந்த ஜெர்மன் பயணத்தில்!

ஜெர்மனியில் சில மாதங்கள் : ஜெர்மனி என்றாலே ஹிட்லர் நமக்கு நினைவிற்கு வரும். ஆனால் அந்த ஹிட்லர் வாழ்ந்த அந்த தேசம்தான் இன்று உலகில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும்
நாடுகளின் 'டாப் டென்னில்'ஒன்றாக திகழ்கிறது.சில மாதங்கள் ஜெர்மனியில் தங்கி இருப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அங்கே எனக்கு கிடைத்த அனுபவங்கள் அற்புதமானது மட்டுமல்ல, அழகானது. அந்த தேசத்தில் மக்கள் வாழும் வாழ்க்கை நெறிமுறைகள்தான் என்னை கொஞ்சம் மாற்றிஇருக்கிறது. ஜெர்மனியில் வாழுகின்ற மக்கள் நம்மைப்போல் இல்லை. அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள்.நம்மூரைப்போல எதற்கெடுத்தாலும் டென்ஷன் என்ற நிலை இல்லை. அவர்களது வேலை, வசதி வாய்ப்புகள், அடிப்படை வசதிகள் எல்லாமே மிகச் சீராகஇருக்கிறது. எங்கும் நேர்த்தி, எதிலும் நேர்த்தி என்பதுதான் அவர்களது சித்தாந்தம். 8:00 மணிக்கு பஸ் வரும் என்றால் வினாடி கூட தாமதிக்காமல் மிகச்சரியாக பஸ் வந்து நிற்கிறது. அடித்துப் பிடித்து, ஓடிப்பிடித்து ஏற வேண்டியதில்லை. டிரைவர்கள் முக மலர்ச்சி யுடன் ஹலோ சொல்லி நம்மை வரவேற்கிறார்கள்.

வேலைக்கு செல்பவர்கள், கல்விச்சாலைகளுக்கு செல்பவர்கள், ஷாப்பிங், பொழுது போக்கு என செல்பவர்கள் அனைவரும் மகிழ்ச்சி என்றால் அப்படி ஒரு மகிழ்ச்சி யாக, மனநிம்மதியுடன், மன அழுத்தம் இன்றி வாழ்வதைப் பார்க்கும்போது இறைவா... நம்மூரில் மக்கள் எப்போது இந்த நிலையை அடைவார்கள் என்ற ஏக்கம்தான் மனதில் எழுகிறது.

எங்கும் சுத்தம் : முதலில் நம்மை வியக்க வைக்கும் விஷயம், அந்த நாடே அவ்வளவு சுத்தமாக சுகாதாரமாக, அழகாக உள்ளது. இயற்கை வழங்கிய காலநிலையும் அப்படி உள்ளது. குளிர் பிரதேசமான இந்நாட்டில் கிராமம், நகரம் என்ற வித்தியாசம் இன்றி எங்கும் துாய்மை. எதிலும் துாய்மை. சாலைகளும் தெருக்களும் துடைத்து வைத்த வீடுகளைப் போல் பளிச்சென்று இருக்கிறது.ஒலி விஷயத்தில் இன்னும் கட்டுப்பாடு. அதிர்ந்து பேசும் மக்களைக் கூட இங்கு காண
முடிவதில்லை. மிகப் பெரிய நகரங்கள் கூட அமைதியாக உள்ளது. தேவை ஏற்பட்டால் ஒழிய, வாகனங்கள் ஹாரன் அடிக்கக் கூடாது என்பது சட்டம். பிற்பகல் ஒரு மணி முதல் 3:00 மணி வரை வீட்டில் இருப்பவர்கள் கூட எந்த சத்தமும் எழுப்பக் கூடாது. இது 'ரெஸ்ட் டைம்' அவர்களுக்கு. ஒலி பெருக்கி சத்தமெல்லாம் சுத்தமாக கிடையாது. சர்ச், மசூதிகளில் இருந்து கூட ஒலி வெளியே கேட்டதில்லை; கேட்கக் கூடாது. மொத்தத்தில் ஒட்டுமொத்த நாடும் அமைதியின் மடியில் துயில்கிறது.

தனிமனித சுதந்திரம் : தனி மனித சுதந்திரம், சமூக நீதி, அடிப்படை உரிமைகள், சமூக பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு மிக அற்புதமாக செயல்படுத்தப்படுகிறது. தமிழர்கள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு குடியுரிமை பெற்று வாழ்கின்றனர். ஆனால் இங்கு யாரும் உயர்ந்தவரும் அல்ல; தாழ்ந்த வரும் அல்ல. அனைவருக்கும் சம உரிமை. இதுதான் அவர்களது கோட்பாடு.ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை தாய் மொழியான ஜெர்மனியில் படிப்பு
முற்றிலும் இலவசம். ஆங்கிலத்தில் பயில விரும்பும் மாணவர்களுக்கு குறைந்த கட்டணம்.
கல்வி திட்டமே முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. 3 வயது முதல் 10 வயது வரை அடிப்படை ஆரம்ப கல்வி. இது நம்மூர் கல்வி போல் புத்தகம் கிடையாது. தேர்வு கிடையாது.
மனித பண்புகளையும் மனித நேயத்தையும் கற்றுத் தருகிறார்கள். பல் தேய்ப்பதில் ஆரம்பித்து
சாப்பிடும் போது மற்றவர்களுக்கு பகிர்ந்து சாப்பிடுவது வரை நற்பண்புகள் கற்றுத் தரப்படுகின்றன. உண்மையும், நேர்மையும் கற்றுத்தரப்படுகிறது. சாலையை கடப்பது முதல் நல்ல குடிமகனாக வாழ்வது எப்படி என்பது வரை அரசின் விதி முறைகள் கற்றுத்தரப்படுகிறது.எல்லாவற்றிலும் மேலாக உங்கள் குழந்தையின் எதிர் காலத்தையும் அவர்களே தீர்மானிக்கிறார்கள். அவர்களின் தனித்திறமையை கண்டறிந்து அந்த துறையில் உயர் கல்வி அளித்து வல்லுனர்களாக்கி வெளியே அனுப்புகின்றனர்.

உழைப்பிற்கு மரியாதை : உழைப்பிற்கு மிகுந்த மரியாதை என்றாலும், தினம் 8 மணி நேரத்திற்கு மேல் உழைக்க எவருக்கும் அனுமதியில்லை. சனி, ஞாயிறு கட்டாய விடுமுறை நாட்கள். உயிரே போகும் நிலை வந்தாலும் ஞாயிற்றுக்கிழமை யாரும் வேலை செய்ய மாட்டார்கள். ஆண்டிற்கு ஒரு மாதம் அனைவரும் கட்டாயம் சுற்றுலா சென்றே ஆக வேண்டும்.
மருத்துவ சேவை முற்றிலும் இலவசம். அதுவும் உலகத்தின் முதல்தர சிகிச்சை. அனைவருக்கும் ஒரே வகையான சிகிச்சைதான். சிகிச்சைக்கான செலவை அரசாங்கமே கொடுத்து விடுகிறது. 35 வயதை தாண்டியவர்கள், ஆண்டு தோறும் முழு மருத்துவ பரி
சோதனை செய்ய வேண்டும். மறந்து விட்டால் அரசு மருத்துவர்கள் வீடுதேடி வந்துவிடுகிறார்கள்.

அனைவருக்கும் வேலை : அரசாங்கத்தில் பதிவு செய்துவிட்டால் அரசே அனைவருக்கும் வேலை தருகிறது. இல்லையென்றால் தகுதியான தனியார் வேலையை அரசே பெற்று தருகிறது. ஏதேனும் காரணத்தால் வேலை இழக்க நேர்ந்தால் ஆறு மாதம் வரை வேலை இல்லாத காலத்திற்கு அரசு சம்பளம் தருகிறது. அதற்குள் வேறு வேலையை அரசே தேடி தந்துவிடும்.
65 வயதை தாண்டியவர்களுக்கு மாதம் இந்திய மதிப்பில் சுமார் 42 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம்
வழங்கப்படும். சீனியர் சிட்டிசன்களுக்கு வீட்டு வாடகையில் 50 சதவீதம் அரசேஅளிக்கிறது.
தண்ணீர், மின்சாரம் ஒரு வினாடி கூட தடைபடுவதில்லை. வீட்டில் குழாயில் வரும் தண்ணீரையே குடிக்கவும், குளியலறைக்கும் பயன்படுத்துகிறார்கள். அந்த அளவிற்கு தண்ணீர் மிகச்சுத்தமாக உள்ளது. அரசின் சட்டங்களை மக்கள் உயிருக்கு மேலாக மதிக்கிறார்கள். எங்கும் நேர்மை, எதிலும் நேர்மை. யாரும் யாரையும் ஏமாற்றுவதில்லை. அந்தஎண்ணமே அவர்களுக்கு ஏற்படுவதில்லை. காரணம் மழலை பருவத்திலேயே அந்த பயிற்சி அவர்களுக்கு
அளிக்கப்பட்டு விடுகிறது.

வணிகத்தில் நேர்மை : வணிக நிறுவனங்களிலும் கூட அநியாயத்திற்கு நேர்மையை கடைபிடிக்கிறார்கள். ஒரு பொருளை வாங்கி விட்டு ஒரு மாதம் பயன் படுத்தி விட்டு திருப்தி இல்லை என்று சொன்னால் அப்படியே எடுத்து விட்டு பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறார்கள். அதே சமயம் வாடிக்கையாளர்களும் அதே அளவிற்கு நேர்மையாக நடக்கிறார்கள். ஜெர்மனியில் அனைத்து நதிகளும் இணக்கப்பட்டிருக்கிறது. அதனால் தண்ணீர் பஞ்சமும் கிடையாது. வெள்ளப்பெருக்கும் ஏற்படுவதில்லை. மின்சாரம் தயாரிக்க உருவாக்கப்பட்ட ஒன்றிரண்டு அணு உலைகளும் மூடப்பட்டு விட்டது.அதிகமாக காகிதங்கள் பயன் படுத்தப்பட்டாலும் இந்த நாட்டில் ஒரு காகிதத் தொழிற்சாலை கூட இல்லை. மரங்களை வெட்டக்கூடாது என்பதால் காகித தொழிற்சாலைக்கு அனுமதி இல்லை. தேவைப்படும் காகிதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்கிறார்கள்.அரசியலைப் பொறுத்தவரை நம்மூரைப் போல ஆர்ப்பாட்டம், ஆரவாரம் எதுவுமில்லை. மீடியா வெளிச்சத்தை தேடி ஓடும் அரசியல்வாதிகள் இல்லை. தனி மனித காழ்ப்புணர்ச்சி இல்லை. நாட்டின் மக்கள் மீதும், மக்களின் நலன் மீதும் அந்நாட்டு தலைவர்களுக்கு அக்கறையும், கரிசனமும் இருக்கிறது.மொத்தத்தில் ஜெர்மனி
நாட்டையும் அந் நாட்டு மக்களை யும் பார்த்தால் பெருமையாக மட்டுமல்ல. பொறாமை
யாகவும் இருக்கிறது.

--என்.எம்.இக்பால்
சமூக ஆர்வலர்
கன்னியாகுமரி. 99447 78502

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (16)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement