Advertisement

அழிக்க வேண்டும் முழுவதுமாக...

மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள், மாவோயிஸ்டுகளால் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா என்ற வனப்பகுதி, இச்சம்பவங்களில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இதற்கு அம்மாநில, பா.ஜ., முதல்வர் ரமண் சிங் என்ன செய்யப் போகிறார் அல்லது உள்துறை எடுக்கும் முடிவு என்ன என்பது பொதுவான வினா ஆகும்.
மார்க்சிஸ்டு சித்தாந்தத்தில், ஜனநாயகம் மற்றும் ஓட்டெடுப்பில் மக்கள் பிரதிநிதிகளின் சிறப்பான நிர்வாகம் நடத்துவதை ஆதரிக்காமல், வன்முறை மூலம் பரம ஏழைகள் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என்னும் தத்துவம், இன்றும் நீடிக்கிறது என்பதன் அடையாளமே, இந்த இயக்கம் இருப்பதன் அடையாளமாகும். தமிழகம், கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இதன் தாக்கம் சில இடங்களில் உள்ளன. இன்னமும் மார்க்சியவாதிகள் தங்கள் கருத்துக்களை வலுவூட்ட, பாரதியாரின், 'தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்' என்ற கருத்தைக் கூறி, இந்த நாட்டு அடிப்படை கருத்துக்களுடன் இவர்களது அட்டகாசத்தை நியாயப்படுத்துவது நடக்கிறது. பாரதியார் காலத்தில் இருந்த ஏழ்மை, அன்றுள்ள புறச்சூழ்நிலை வேறு. ஒரு பக்கம், தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் ஆட்சி செய்யும் மார்க்சியவாதிகள், அதில் சிலர் அதிக பணவசதி உடையவர்கள், மேலும் சிலர் ஆட்சிப் பதவியை விடாமல் ஒட்டிக் கொண்டு இருந்தவர்கள் என்ற பட்டியல் நீளமானது. ஆனால், இன்றும் முற்றிலும் வனமும், காடுகளும் அடங்கிய, சுக்மா போன்ற இடங்களில், இவர்கள் ரிசர்வ் படையினர் மீது நடத்தும் அத்துமீறிய தாக்குதல், குண்டு வீச்சு சம்பவங்கள், அதிகரிப்பது அபாயமாகும்.
தாக்குதல் நடத்திய பின், அந்த இடங்களில் இருந்து துப்பாக்கிகள், குண்டுகள் ஆகியவற்றை எடுத்துச் சென்று, அடுத்த தாக்குதலுக்கு தயார்படுத்துவதும் தொடர்கிறது. கஞ்சா பயிரிடும் சக்திகள், குவாரிகள் வைத்து அதிக லாபம் சம்பாதிப்போர் ஆகியோரை, மிரட்டி, இவர்கள் பணம் சேர்ப்பதும் தெரிய வந்திருக்கிறது. ஏனெனில், மார்ச் 11ம் தேதிக்கு அடுத்ததாக, ஏப்ரல் கடைசி வாரத்தில், நமது ரிசர்வ் படையினர் கூட்டமாக உட்கார்ந்து சாப்பிடும் நேரத்தில், குண்டு வீச்சு நடத்தி, 25 வீரர்களை வனப்பகுதியான சுக்மாவில் கொன்றிருக்கின்றனர். சத்தீஸ்கர் அரசு இம்மாதிரி செயல்களை தடுக்க முயற்சிகள் எடுத்த போதும், அது பயன் தரவில்லை. இப்பகுதிகளில் ரோடுகள் போடுவது, மக்களுக்கு அடிப்படைத் தேவையான குடிமைப் பொருட்கள் வழங்குவது என்று படிப்படியாக முன்னேற்றம் உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும், பஸ்டார் என்ற வனப்பகுதி மாவட்டத்தில், காடுகள் நடுவே ரோடுகள் அமைந்ததை இவர்கள் பயன்படுத்தி, கண்ணிவெடி வைக்கின்றனர். தற்போது, பஸ்டார் வனப்பகுதியில் புதிய ரோடுகள் போடுவதை சத்தீஸ்கர் அரசு நிறுத்தி வைத்துள்ளது. தெலுங்கானா, மஹாராஷ்டிரா, ஒடிசா ஆகிய அரசுகளின் நுண்ணறிவு போலீசாரின் ஒத்துழைப்புடன் அதிக தகவல்களை சேகரித்து, மாவோயிஸ்டுகளை அழிக்க முயற்சிகள் நடக்கின்றன. குட்டி விமானங்களின், 'கேமரா' மூலம் இவர்கள் நடவடிக்கைகளை கவனிக்கவும், அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். ஆனால், அடர்ந்த வனப்பகுதிகளில் இதன் பணி அதிகம் பயன் தராது. காஷ்மீர் முதல் பஸ்டார் என்ற வனப்பகுதி வரை, அதிக தாக்குதலுக்கு உள்ளாகும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் எல்லைப்படை வீரர்கள் பங்கு மகத்தானது. கையில் துப்பாக்கியுடன், அடி அடியாக கண்காணிக்கும் அப்பகுதி மக்களையும் காக்கும் இவர்கள், இம்மாதிரி தாக்குதலுக்கு உள்ளாவது,
இந்திய கவுரவத்திற்கு விடப்படும் சவாலாகும். அதிலும், கடந்த ஐந்தாண்டுகளில், ராணுவத்தினரை, மாவோயிஸ்டுகள் குறிவைப்பதை விட, ரிசர்வ் போலீசாரை குறிவைக்கின்றனர் என்பதைக் காணும் போது, உள்ளூர் போலீஸ் பணி என்ன; எங்கே கண்காணிப்பு பணியில் கோளாறு
இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. வனப்பகுதியில் வாழும் பாமர மக்களின் ரேஷன் பொருட்களை பறிமுதல் செய்து, அவர்களை மிரட்டி, தங்கள் மறைவிடங்களில், நிரந்தரமாக வாழும் மாவோயிஸ்டுகள் எண்ணிக்கை அதிகம் இல்லை. இவர்களது அட்டகாசத்தில் உயிர் துறக்கும் இளம் வீரர்கள் எண்ணிக்கையில், தமிழக வீரர்களும் அதிகம் உண்டு. சமீப காலங்களில், இம்மாதிரி சம்பவங்களில் உயிர் துறக்கும் வீரர்களின் குடும்பத்திற்கு தரப்படும் நலநிதி கணிசமாக இருந்தாலும், மாவோயிஸ்டு சக்திகளை முழுவதுமாக அழிப்பது குறித்த ஒட்டு மொத்த அணுகுமுறை இன்று தேவை.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement