Advertisement

அதிக குழப்பங்கள்...தமிழகம் தனி ரகம்!

அ.தி.மு.க.,வின் மிகப்பெரும் தலைவராக உருவாக முயன்ற, டி.டி.வி.தினகரன் தற்போது திகார் சிறையில் இருக்கிறார். தமிழக அரசியலில், தி.மு.க.,விலும் சரி, அ.தி.மு.க.,விலும் சரி, அதன் முக்கிய பிரமுகர்கள் லஞ்சம் தொடர்பான கிரிமினல் வழக்குக்காக, டில்லி திகார் சிறை வாச அனுபவம் என்பது, வேறு எந்த மாநிலத்திலும் காணப்படாத அபூர்வம்.
இதற்காக தனிநபர், கட்சி அல்லது வேறு காரணங்களைக் கூறுவதை விட, நீண்ட நாளாக ஆளுங்கட்சி ஒன்றின் அதிகாரம் அல்லது தலைமை பெற்றவர்கள் ஊழல் புகாரில் சிறைவாசம் அனுபவிப்பது, அரசியல் களங்கமாகும். கிரிமினல் வழக்கு முடிந்து, குற்றமற்றவர் என்பது நிரூபணம் ஆகும் வரை, இச்சிறைவாசம் பெரிய விஷயமல்ல என்று கூறினால், அது சப்பைக்கட்டான வாதம். மிகவும் அதிசயமாக, ஒரு ஆளுங்கட்சியின் பொதுச்செயலர், வேறு மாநில சிறையிலும், துணைப்பொதுச்செயலர் டில்லி திகாரிலும், ஒரே காலத்தில் இருப்பது புதுமையானது. மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு, அவர் மனைவி ரப்ரி ஆகியோர், அந்த மாநிலத் தலைநகர் பாட்னா சிறையில், வெவ்வேறு காலங்களில் இருந்தது உண்டு. இப்போது, சிறையில் இருப்பவர்கள் இதுவரை பிரபல மனிதர்களுடன் கொண்டிருந்த தொடர்பு, அவர்களுடன் தங்களை விளம்பரம்படுத்திக் கொண்ட பாங்கு ஆகியவை, தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் நிகழ்ந்திருக்கின்றன. ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும், ஏற்கனவே சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்ததை ஒப்பிட்டு, அவருடன் இருந்து தியாகம் செய்த, சசிகலா இன்று சிறையில் இருக்கிறார் என்று கூறும் அவலமும் உள்ளது.
இன்று தமிழகத்தை ஆளும் கட்சிக்கு தலைமை யார், ஏன் அக்கட்சி இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது... அதே சமயம், எம்.எல்.ஏ.,க்கள், அதிக குழப்பங்களுடன் ஜாதி அரசியல் கும்பலாக காட்சி தருவது ஏன் என்பதும் அடுத்த கேள்விகளாகும். இன்றுள்ள நிலையில், அ.தி.மு.க.,வின் இரு அணிகளாக முதல்வர் பழனிசாமியும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் செயல்படும் விதம், அக்கட்சியின் உச்ச கட்ட குழப்பங்களை பிரதிபலிக்கிறது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகத்தை காணும் பன்னீர்செல்வம் கருத்தை, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் ஆதரிக்கின்றன. சசிகலா குடும்பம் ஒட்டுமொத்தமாக, அ.தி.மு.க.,வில் இருக்கக்கூடாது என்பதை, தினகரன் கைது சம்பவத்திற்குப் பின்னும் நிறைவேற்ற முடியாத நிலையில் பன்னீர்செல்வம் அணியில் உள்ளவர்கள் தவிக்கின்றனர். அதைவிட, கோடநாடு பங்களா கொலை, கொள்ளை சம்பவங்களுக்கு பின், நிலைமை மோசமாகி இருக்கிறது. இந்த இரு அணிகளும் இணைந்து, தேர்தல் கமிஷனிடம் மனு அளித்து நிரூபிக்காத வரை, இரட்டை இலை சின்னம் கிடைப்பது சுலபம் அல்ல; அதிலும், தேர்தல் கமிஷனையே லஞ்சம் கொடுத்து வளைக்கலாம் என்ற, தினகரனின் அபார உத்தி, அதில் உள்ள பின்னணி சக்திகள் எவை என்பது இனி வெளிவரலாம். ஏதாவது ஒரு ஊழல் பணியாளர், தேர்தல் கமிஷனில் இதற்கு உதவியதாக ஆதாரம் வந்தாலும், கமிஷனையே ஒட்டுமொத்தமாக பழிக்க முடியாது. அதைவிட, கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, அதன் பின்னணி, அங்கு, 'சிசிடிவி' கேமரா கூட இல்லாமல், தனிநபர்கள் செல்வாக்குடன் ராஜாங்கம் நடத்தியிருப்பது உண்மையானால், அது ஜெயலலிதா தனிப்பட்ட ஆளுமையில் சந்தேகத்தை எழுப்பும். தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகளை கையாள வேண்டிய நிலையில், ஆளும் அரசு தரப்பு சந்திக்கும் பிரச்னைகளும், எதிர்க்கட்சியான, தி.மு.க., இப்பிரச்னைகளை சாதகமாக்கி முடிவு காண முடியாத சூழ்நிலையும், அசாதாரண அரசியல் நிலையாகும். மாநிலக் கட்சிகள் நீண்ட ஆண்டுகள் ஒரு மாநிலத்தில் ஆட்சி புரிந்தால், அது, தனிநபர் துதி ஆட்சியை தொடர்ந்து வளர்த்து, ஆதாயம் காணும் பெரிய குழுவை உருவாக்குகிறதோ என்ற பொதுக்கருத்தை, இன்றுள்ள குழப்பங்கள் காட்டுகின்றன. மேலும், மற்றொரு புதுமையாக, நீதிமன்றமும், அரசில் உள்ள மந்திரிகள் ஊழலை சுட்டிக்காட்டி நடவடிக்கை என்ன என்று கேட்பதும், அடுத்த அவலமாகும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement