Advertisement

மினியேச்சரில் அசத்தும் ஈஸ்வர் குமார்

மினியேச்சரில் அசத்தும் ஈஸ்வர் குமார்


இது திருக்குறள் புத்தகம்
இது பகவத்கீதை புத்தகம்

இது காந்தியின் வாழ்க்கை வரலாறு

என்று ஒவ்வொன்றாக சொல்லியபடி அவர் மேஜையின் மீது எடுத்துவைத்த புத்தகங்களை பார்த்தபோது முதலில் எதுவும் புரியவில்லை, புரிந்த போது பிரமிப்பின் எல்லைக்கு போவதை தவிர்க்கமுடியவில்லை,காரணம் ஒவ்வொரு புத்தகமும் பிறந்த குழந்தையின் கைவிரல் நகத்தைவிட குறைவான அளவிலேயே இருந்தது.

இந்த புத்தகம் வழக்கமான புத்தகம் போலவே காலிகோ துணி பைன்டிங்குடன்,அசத்தலான அச்சு வடிவத்தில்,பக்கவான பக்க எண்களுடன் காணப்பட்டது.ஒரே வித்தியாசம் இந்த புத்தகத்தை படிப்பதற்கு பூதக்கண்ணாடி தேவை.

இது போன்ற மினியேச்சர் வேலைகளில் வழக்கமாக வெளிநாட்டு கலைஞர்கள்தான் கோலோச்சுவார்கள், இங்கே நம் ஊர் கலைஞர் ஒருவர் இதில் அவர்களுக்கு சவால்விடும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

அவர்தான் ஈஸ்வர்குமார்

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் குடும்ப சூழ்நிலை காரணமாக பத்தாவது முடித்த கையோடு ஸ்கீரின் பிரிண்டிங் தொழிலில் இறங்கியவர்.ஒரு முறை மிகச்சிறிய புத்தகம் பற்றி படித்தவர் அதனைவிட சிறிதாக புத்தகம் தயார் செய்யவேண்டும், அந்த புத்தகம் திருக்குறளாக இருக்கவேண்டும் என்றும் முடிவு செய்தார்.

தனது தொழிலுக்கு நடு நடுவே எப்போதெல்லாம் ஒய்வு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் மினியேச்சர் திருக்குறள் புத்தகம் தயார் செய்ய ஆரம்பித்தார்.கிட்டத்தட்ட 15 மாத கால உழைப்பு, பல இரவுகள் பகலாகியது, நிறைய சறுக்கல்கள் ஆனாலும் இந்த நுட்பமான வேலையை சவாலாக செய்து முடித்தபோது பலரும் பாராட்டி மகிழ்ந்தனர்.

2002-ல் செய்திட்ட இந்த 1.8 செமீ அகலம் 1.4 செமீ நீளம் 3.5 கிராம் எடை கொண்ட திருக்குறள் புத்தகத்தை சாதனை புத்தகமாக லிம்கா புக் ஆப் இந்தியா அங்கீகரித்து ஈஸ்வர்குமாரை பெருமைப்படுத்தியது.

இதன் காரணமாக காந்தியின் வாழ்க்கை வரலாறு,பகவத் கீதை உள்ளீட்ட மினியேச்சர் புத்தகங்களை உருவாக்கினர்,ஒலைச்சுவடியில் அனுமன் சாலீசா உருவாக்கியது ஒரு சாதனை என்றால் ஊசி முனை அளவே உள்ள கால் கிராம் எடைக்கு குறைவான ஒரு ஒவிய புத்தகத்தை உருவாக்கியுள்ளது மற்றொரு சாதனை.இதை பார்ப்பதற்கு சாதாரண பூதக்கண்ணாடி போதாது விசேமான பூதக்கண்ணாடி வேண்டும்.

லிம்கா நிறுவனம் மீண்டும் ஒரு முறை இவரை அங்கீகரித்து பெருமைபடுத்தியது.மேலும் மும்பையில் நடைபெற்ற பிரிண்டிங் டெக்னாலாஜி கண்காட்சியில் இவருக்கு அகில இந்திய அளவில் முதல் பரிசு கிடைத்துள்ளதும் இவரது திறமைக்கு கிடைத்த பாராட்டாகும்.

இப்போது விளையாட்டு,சினிமா,அரசியல்,பிசினஸ்,விஞ்ஞானம் உள்ளீட்ட விஷயங்களில் புகழ் பெற்ற பத்து ஜீனியஸ்களை பற்றி மினியேச்சர் புத்தகம் போட உள்ளார்.இந்த புத்தகங்கள் மிக வித்தியாசமாக இருக்கும் உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்றால் மின்சாரம் கண்டுபிடித்த எடிசன் பற்றிய புத்தகம் பல்பு வடிவில் இருக்கும்.

இதை எல்லாம் தயார் செய்த பிறகுஒரு மியூசியம் வைத்து தனது படைப்புகளை எல்லாம் கண்காட்சியாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவேண்டும் என்பது இவரது விருப்பம். இதுவரையில் செய்திட்ட படைப்புகளை பார்க்க விரும்புபவர்கள் அவரது எண்ணுடன் தொடர்பு கொள்ளவும் எண்:9444154663.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (7)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement