Advertisement

அமெரிக்க அதிபர் டிரம்ப் அணுகுமுறை எப்படி?

எத்தனையோ முரண்பாடான முடிவுகள், குழப்பங்களை ஏற்படுத்தினாலும், தன் முயற்சிகள்
முறியடிக்கப்பட்டாலும், அமெரிக்க அதிபர் டிரம்ப், கவலைப்படுவதில்லை. ஒரு தலையாய,
'பிசினஸ்மேன்' என்ற முறையில், மிகப்பெரிய அமெரிக்காவை அவர் நடத்தும் விதம் வியப்பானது.
சிரியா மீதான தாக்குதல், ஆப்கனில் தலிபான் சக்திகளை அழிக்க, அவர் நடத்திய குண்டுவீச்சு, 'எச் - 1பி' விசா கெடுபிடி அமலாக்கம் போன்றவை, அவரது தலைமை பதவி துவங்கிய நுாறு நாளில் நடத்தப்பட்டவை. இதில், 'எச் - 1பி' விசா, நம் தகவல் தொழில்நுட்ப திறமைமிக்க பலரது வாழ்வைக் கேள்விக்குறியாக்குமோ என்ற கரு த்தை ஏற்படுத்தி உள்ளது. டிரம்ப் மேற்கொண்ட இம்முயற்சி, இந்தியாவுடன், அமெரிக்கா கொண்டிருக்கும் நீண்ட நட்பிற்கு இடைஞ்சல் தருவதாக இருக்கிறது என்ற கருத்தை, அந்த அரசிடம், நம் நிதியமைச்சர் ஜெட்லியும் உணர்த்தியிருக்கிறார். அபார வளர்ச்சி கண்ட நாடுகளான சீனா, ரஷ்யா எப்போதும் அமெரிக்காவின் செயல்களுக்கு உலக அரங்கில் ஈடு கொடுத்து, அதில் சிலவற்றை சமாளிக்கும் திறன் உடையவை. ஆனாலும், 50 ஆண்டுகளாக, 'சூப்பர் பவராக' உள்ள அமெரிக்கா, தன் நிலையை தாழ்த்திக் கொள்ளும் செயலில் ஈடுபடுகிறது. இக்கேள்வி தான், இன்று அனைவராலும் எழுப்பப்படுகிறது.
எதிர்க்கட்சி தலைவரான, ஒபாமாவை அவமானப்படுத்த விரும்பி, அவர் கொண்டு வந்த நலத்திட்டங்கள் தோற்கடிக்கப்பட்ட விதமும், சில ஜனநாயக முரண் அறிவிப்புகளும், ஒபாமா
அணுகுமுறை தந்த கவுரவத்தை, அமெரிக்கா தற்போது இழக்கிறதோ என்ற கேள்வி எழுகிறது.
வடகொரியாவுக்கு பாடம் கற்பிக்க டிரம்ப், போர்முனையை தேர்வு செய்யும் பட்சத்தில், அது, அவருடைய பெயருக்கும், பதவிக்கும் நல்ல பெயரைத் தராது. வடகொரியாவுடன் அவர் மேற்கொள்ள விரும்பும் துாதரக பேச்சு, இனம்புரியாத குழப்பத்தை உலக அரங்கில் ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம், இந்திய நட்புறவை விரும்பும் அமெரிக்க அரசு, தன் நாட்டின் இயற்கை எரிவாயு வளத்தில் இருந்து, இந்தியா போன்ற நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இசைந்திருக்கிறது. இதை தடை செய்யாமல், அவர் தர முன்வரும் பட்சத்தில், 2018 முதல், அமெரிக்க எரிசக்தி இங்கே வரலாம். டிரம்ப் மேற்கொண்ட விசா நடைமுறைக்கு விடையாக, 'இன்போசிஸ்' நிறுவனம், அங்குள்ள தன் கிளைகளில் பெரிய பதவிகளில், 10 ஆயிரம் அமெரிக்கர்களுக்கு பதவி தர முன்வந்திருக்கிறது. இதன் அடையாளம், இனி இதைவிட ஆளுமைத் திறமை உடைய நம்மவர்கள் மட்டுமே, அங்கு இந்த உயர் பதவிகளுக்கு செல்ல முடியும். அத்துடன், இம்மாதிரி உயர் பதவியை அலங்கரிக்கும் அறிவு ஜீவிகளுக்கு, இந்த நிறுவனங்கள் குறைந்த சம்பளம் தரமுடியாத சூழ்நிலை வரலாம். இதைப்பார்க்கும் போது, நம் தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள, 'சாப்ட்வேர்' வளர்ச்சி மற்றும் மருந்துகள் தயாரிப்பு துறைகளில் உள்ள அபார வளர்ச்சி போன்றவற்றில், அமெரிக்கா அதிக அளவு கவனம் காட்டி, அவற்றை சட்ட நடைமுறைகளுக்குள் கொண்டு வரலாம். அதற்கு முன் இத்துறைகளில் நாம் சில பாதுகாப்புகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அதேபோல, நம் தொழிற்துறைகளில் அதிக நட்பு கொண்ட பிரிட்டனில், மாற்றம் காணப்படுகிறது. அந்த நாட்டு பிரதமர் தெரசா மே, தன் நாட்டில் பொருளாதார அணுகுமுறையை சீராக்க, திடீர் தேர்தலை சந்திக்கிறார். ஐரோப்பிய யூனியனில் உள்ள, 27 நாடுகளுடனான வர்த்தகம் மற்றும் இதர உறவுகளை புதிதாக உருவாக்கவும், தன் நாட்டின் தனித்தன்மையை பாதுகாக்கவும் இத்தேர்தல் உதவிடும் என்பது, அவர் கணிப்பாகும்.
பிரிட்டன், மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதும், ஏதேனும் ஒரு முக்கிய கொள்கைக்காக தேர்தலை நடத்துவதும் வழக்கமானது. அந்த முறை நமக்கு பொருந்தாதது. அதே சமயம், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள், பிரிட்டனின் தனித்துவ போக்கை முற்றிலும் ஆதரிக்கவில்லை. இத்தேர்தல் முடிந்ததும், பிரிட்டன் எப்படி ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. ஆகவே, அமெரிக்க டிரம்ப், பிரிட்டன் தெரசா ஆகியோர், இந்தியாவின் வளர்ச்சிக்கு எப்படி உதவுவர் என்பதை, இப்போது முடிந்த முடிவாக கூறுவது அரிதாகும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

  • Sampath Kumar - chennai,இந்தியா

    இவரால் உலக போர் நிகழ வாய்ப்புகள் அதிகம் மினி ஹிட்லர்

  • A shanmugam - VELLORE,இந்தியா

    அமெரிக்கா அதிபரின் அணுகுமுறை ஹிட்லர்ரா அல்லது முசோலினியா என்றுதான் சந்தேகமாக உள்ளது.

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    ஜெயலலிதாவோட ஆவி இந்த கூமுட்டையின் உடலுக்குள் புகுந்து விட்டது என்கிறார்கள்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement