Advertisement

முன்னணியில் வர மாற்றம் வருமா?

இந்த ஆண்டில், நாடு முழுவதும், பல லட்சம் மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வில் பங்கேற்றனர். சி.பி.எஸ்.சி., மெட்ரிக் என, பல ரக பாடத் திட்டங்களில், நாடு முழுவதும் உள்ள மாணவ, மாணவியர் இப்போது தங்கள் எதிர்காலவாய்ப்புகளை, அதிக கனவுகளுடன் துவக்கும்
காலமாகும்.

பொதுவாக, பொறியியல் படிப்புக்கு அதிகம் பேர் முயற்சித்தாலும், பட்டய கணக்காளர் படிப்பு, இப்போது தமிழகத்தில் அதிக அளவு ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இது தவிர, பொருளாதாரம், இலக்கியம், கலாசாரம் சம்பந்தமான படிப்புகள், சமூக இயல் போன்றவை, மேல்தட்டு மாணவர்களின் கருத்தை ஈர்ப்பதாக கூறப்படுகிறது. ஏதோ ஒரு பட்டம் பெற வேண்டும் என்ற மனப்போக்கில் இருந்து, மாறி வரும் சுபாவம் எழுந்திருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள, 29 மாநிலங்களில், மொத்தம், 7,000 பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. அத்துடன், 17 பல்கலை கழகங்கள் கல்வித் தரத்தில் உள்ளவை என்றும், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை தெரிவிக்கிறது.இவை, தங்களுக்கான பாடத்திட்டம், கற்றுத் தரும் நடைமுறை ஆகியவற்றை தனித்துவமாகக் கொண்டிருக்கின்றன. இப்போது, பொறியியல்
பட்டதாரிகளில் பலர், திறமை என்ற அம்சத்தை பெறாததால், வேலைவாய்ப்பு இன்றி, தங்களுக்கு தொடர்பற்ற பல்வேறு பணிகளில் காலத்தைக் கழிக்கும் சூழல் உள்ளது.

கற்றுத்தரும் ஆசிரியர்களின் கல்வித்தகுதி குறைபாடு, உரிய கல்வி தரும் வசதிகள் இன்மை ஆகியவற்றால், மாணவர் சேர்க்கை குறைந்து. மூடப்படும் அபாயமும் பொறியியல் கல்லுாரிகள் சந்திக்கும் பிரச்னையாகும். அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் தலைவர் சஹஸ்ரபுதே, சமீபத்தில், 'தமிழகத்திலும், ஆந்திராவிலும் அதிக அளவு பொறியியல் கல்லுாரிகள் மூடப்படும் சூழ்நிலை எழுந்திருக்கிறது' எனக்கூறி, அதற்கான சட்ட முடிவுகளை எடுப்பதாக தெரிவித்திருக்கிறார்.

அது மட்டுமின்றி, சில குறிப்பிட்ட பொறியியல் படிப்புகளுக்கான பாடத் திட்டங்களில் கவனம், அதற்குரிய வகையில் தகுதி வாய்ந்த பேராசிரியர்களுக்கு பயிற்சித் திட்டங்களையும், அகில இந்திய கவுன்சில் நடைமுறைப்படுத்த துவங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
அதே சமயம், மத்திய அரசு திட்டத்தின், 'திறமை மிக்க இந்தியா' என்ற கருத்துக்கு, பொறியியல் கல்லுாரிகளில் வசதி எந்த அளவுக்கு ஏற்பட்டிருக்கிறது. அக்கல்லுாரிகளும், தொழில் நிறுவனங்களும் இணைந்து செயலாற்ற வழி உள்ளதா என்பது, இன்னமும் தீர்வு காணப்படாத விஷயமாக இருக்கிறது.

மத்திய அரசு, 'திறன் இந்தியா' திட்டத்தில், அடுத்த ஆறு ஆண்டுகளில் பல்வேறு தொழில்களில் திறமை உடையோர் என்ற வகையில், 40 கோடி பேருக்கு பயிற்சி தர வேண்டும்; அது, சுலபமானது அல்ல.பொதுவாக, பொறியியல் தொழில்நுட்ப படிப்பில், தொழில் திறன் மிக்கவர்களாக உருவாக்குதல் அல்லது குறிப்பிட்ட தொழிலுக்கானவர்கள் என, தகுதியான கல்வி தர, வழி கிடையாது. சில பொறியியல் கல்லுாரிகள் மட்டும் அப்பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, பணியாற்ற இப்போது முன் வந்திருக்கின்றன.

தகவல் தொழில்நுட்ப துறையில், தேர்வுசெய்யப்படும் பொறியியல் பட்டதாரிகளுக்கு, அந்தந்த நிறுவனங்கள் தனி பயிற்சி தருவது வேறு விஷயம். நாட்டில் வேலை பார்க்கும் திறன் உடைய இளைய சமுதாயம் கணிசமாக இருந்த போதும், பல்வேறு சூழல்களில், இவர்கள் பட்டதாரிகளாக மட்டும் வலம் வர வேண்டிய நிலை உள்ளது.

அதேபோல, சிறந்த பயிற்சி தரும் பொறியியல் கல்லுாரிகள் அல்லது பெரிய கல்வி நிறுவனங்கள், இந்த விஷயத்தில் என்ன மாற்றத்தைக் கொண்டு வரப்போகின்றன என்பதும் தெரியவில்லை. ஏனெனில், பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., அடுத்ததாக மாநிலங்களில், பிளஸ் 2 படிக்கும் போதே, மாணவர்களின் ஆர்வத்தை அறிந்து அதற்கான படிப்பில் ஈடுபடுத்தப்பட, முனைப்பு காட்டும் என்கின்றனர். அதேபோல, மேற்படிப்பு, 'கட் - ஆப்' மதிப்பெண் பிரச்னைகளைக் குறைக்க, வினாத்தாள் திருத்தத்தில் சலுகை மதிப்பெண் தரும் வழக்கத்தை நிறுத்த ஆலோசித்திருக்கிறது.

கல்வி என்பது மாநில அரசின் கீழ் வரும் திட்டம் என்பதால், எந்த மாநிலம் இப்பிரச்னைகளை தங்கள் மாநில வளம் கருதி, கல்வியாளர்களுடன் சிந்தித்து மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது என்பது இனி தெரியவரும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement