Advertisement

ஒருமித்த ஆதரவு நல்ல திருப்பம்!

டில்லியில், 41 நாட்களாக நடந்த விவசாயிகள் போராட்டம், 'வாபஸ்' ஆகி இருக்கிறது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த கடையடைப்பு போராட்டம், அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. தேசிய தென்னக நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு நடத்திய இந்த நெடும் போராட்டத்திற்காக, 'மீடியா'க்களின் கவனத்தை ஈர்க்க, அவர் மேற்கொண்ட அபார உத்திகள் ஏராளம். எலியை கடித்தப்படி எதிர்ப்பு, கடைசியில் முன்னாள் பிரதமர், மொரார்ஜி தேசாய் விரும்பிய, 'சிறுநீர்த் தத்துவம்' ஆகிய எல்லாவற்றையும் கையாண்டு முடித்திருக்கிறார். அவரது போராட்டம், பிரதமர் மோடியை வரவழைக்கும்படி, வேறு சில விதத்தில் நடத்தியிருக்கலாம் என்று, இங்குள்ள மிகச்சிறிய கட்சிகள் யோசனை கூறியது பரிதாபமானது; மாறாக, இவர்களும் அங்கு சென்று பல நாட்கள் போராட்டத்தில் அரை நிர்வாண கோலத்தில் பங்கேற்றிருக்கலாம். விவசாயிகள் கோரிக்கைகளை, மத்திய, மாநில அரசுகள் முழுவதும் நிறைவேற்றவில்லை என்ற கருத்தை, வர்த்தகர்கள் உட்பட அனைவரும், இப்போது கூறுவது கவனிக்கத்தக்கது. தேசியமய வங்கிகளில், விவசாயக் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், தென்னக நதிகளை இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், மத்திய விவசாய அமைச்சர் ராதாமோகனில் துவங்கி, தமிழக முதல்வர் பழனிசாமி வரை, இத்தடவை தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.மத்திய, மாநிலங்களில் ஒரே ஆட்சி, மற்ற அண்டைய மாநில விவசாயிகள் இவைகளை ஆதரிக்கும் முயற்சிகள், நதிகளை இணைக்க பிரம்மாண்ட முன்னேற்பாடு, அதற்கான நிதி ஆதாரம் ஆகியவை அவசியம் என்பதை,
இப்போராட்டம் சுட்டிக்காட்டி இருக்கிறது. இது, 40 ஆண்டுகளாக நம்மை ஆண்ட மாநில,
மத்திய ஆட்சியாளர்களுக்கு முன்பே தெரிந்த விஷயமாக இருக்கலாம்.காவிரி டெல்டா, இம்மாதிரி வறட்சியை சந்தித்தது இல்லை என்பதும், தஞ்சைப் பகுதி, 'தமிழகத்தின் நெற்களஞ்சியம்' என்ற பெயரை இழக்கும் அளவுக்கு, இயற்கை பாதிப்பில் இருக்கிறது என்பதும், இன்று நாம் சந்திக்கும் உண்மை.எதிர்காலத்தில் விவசாயத் துறை மேம்பட, பல்வேறு புதிய அணுகுமுறைகள், கூலித் தொழிலாளர் பற்றாக்குறை நீக்கம், தண்ணீர் சேமிப்பு, அதிக விளைச்சல் வந்தால் அதை சேமித்து, நஷ்டப்படாமல் விற்க வசதி ஆகியவை பற்றி, அதிகம் விவாதிக்க வேண்டிய புதிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.அது மட்டும் அல்ல; தமிழகத்தில் விவசாய நிலங்களை பயிரிடுவோர் யார், லீசுக்கு விடும் சாத்தியக்கூறுகள் உள்ளதா, வேறு சில மாநிலங்கள் போல, விவசாய நிலங்களின் மண் பரிசோதனை நடந்து அவர்களுக்கு அதற்கான தகவல் தரப்பட்டதா என்பதை, இனி சமூக வலைதளங்கள் ஆய்ந்து, நிறை குறைகளை பட்டியலிட்டால், அரசுக்கும், ஆள்வோருக்கும் பல உண்மைத் தகவல்கள் கிடைக்கும்.கடந்த வாரத்தில் டில்லியில் நடந்த, 'நிடி ஆயோக்' கூட்டத்தில், இம்மாதிரி சில தகவல்கள் பேசப்பட்ட போது, அதில் தமிழக முதல்வரும் கலந்து கொண்டிருக்கிறார் என்பதால், இனி, அவர் உயர் அதிகாரிகளுடன் இவை குறித்து ஆலோசிக்கலாம். தமிழக விவசாயத் துறை அமைச்சகம், பயிர் காப்பீட்டு நடைமுறைகளை அமல்படுத்த, முழுவீச்சில் முற்பட வேண்டும். அதே போல, வேளாண் வளர்ச்சி என்பதற்கு, தமிழகத்திற்கு மத்திய அரசு தரும் தொகை எவ்வளவு, அது, 2016 - 2017ல் சரியாக போய்ச் சேர்ந்திருக்கிறதா அல்லது வறட்சி நிவாரணத்தில் ஒரு அங்கமாகி விட்டதா என்பதையும், மாநில அரசு தெரிவித்தால், மத்திய அரசு கூறும் தகவல்கள் சரி தானா என்பதும் தெரியும்.இத்தடவை, வர்த்தகர்கள், விவசாயிகள் பாதிப்பை அதிகம் உணர்ந்திருப்பதால், விவசாயிகள் நேரடியாக பொதுச் சந்தையில் விற்கும் பொருட்களை அதிரடி விலையில் வாங்கும் பழைய நடைமுறைகளை மாற்றி, மின்னணு பரிவர்த்தனைக்கு மாறினால் கூட, நம் சிறிய விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்கும். விவசாயிகள் நாட்டின் வளத்திற்கு உதவு பவர்கள் என்ற கருத்து, எல்லாத் தரப்பினரின் இடையேயும் ஏற்பட, இம்முயற்சிகள் வாய்ப்பைத் தரட்டும். இதற்கான உத்திகளை இனி, அய்யாக்கண்ணு போன்றவர்கள், அரசியல் தலைவர்கள் மட்டும் இன்றி வேளாண் விஞ்ஞானிகளையும், நீர் மேலாண்மை அறிஞர்களையும் கலந்து
ஆலோசித்து, அரசுக்கு யோசனை கூற முற்பட்டால், அது பயன் தரலாம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Karthik - Chennai,இந்தியா

    விவசாயம் வளர்க்க வேண்டும். விவசாயிகளை ஊக்க படுத்த வேண்டும். நம் நாடு விவசாய நாடு. அவர்கள் இருந்தால் தான் நாம் வாழ முடியும். இயற்கை விவசாயம் வளர்க்க வேண்டும். கார்பொரேட்களை ஒழிக்க வேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement