Advertisement

பிரிட்டனின் தெரசா மே காட்டும் பாதை!

ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., அணிகளுக்கு இடையே எத்தகைய சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டாலும், அது, தற்காலிக முடிவாகவே இருக்க வாய்ப்புண்டு. யார் முதல்வராக வந்தாலும், ஒரு சில கேள்விகள் நிச்சயம் தொண்டர்கள் மனதிலும், மக்கள் மனதிலும் வலுவாக நாற்காலி போட்டு உட்கார்ந்திருக்கும். இவருக்கா, நாம் ஓட்டு போட்டோம்... இவர் முகம் பார்த்தா, இவர் கொடுத்த வாக்குறுதிகளை கேட்டா, இவர் ஆளுமையின் மீது நம்பிக்கை வைத்தா, ஆட்சி, அதிகாரத்தை வழங்கினோம்?இரு அணிகளுக்கு இடையே இருந்த பிளவு, சிமென்ட் பூசப்பட்டு இருக்குமே தவிர, அடிப்படை கேள்விகள் அப்படியே தான் இருக்க போகின்றன. ஒவ்வொரு முறை,
எந்த நலத்திட்டம், நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதை கடுமையாக விமர்சிக்க கூடியவர்கள், கட்சிக்குள்ளேயே இருப்பர். முரண்பாடுகளும் முளைத்தபடியே இருக்கக்கூடும். எதை செய்தாலும், 'கூட்டுத் தலைமை'யின் அனுமதியை பெற வேண்டிய நிலைமை ஏற்படலாம்.
அடிப்படையில், தலைமையின் மீதான, நம்பிக்கை பற்றாக்குறை பெரிய பிரச்னையாக எழும்.
இத்தகைய நிலைமை, தமிழகத்திற்கு மட்டுமே உரியது அல்ல. பிரிட்டனிலும் இது தான் நிலைமை. இரண்டு இடங்களிலும் பல ஒற்றுமைகள். 2015ல், 'கன்சர்வேடிவ்' கட்சியை சேர்ந்த, டேவிட் கேமரூன், பிரிட்டன் பிரதமராக தேர்வு பெற்றார். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. 'பிரெக்ஸிட்' என்று இதற்கு பெயர். பிரிய வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவெடுக்க, பொது ஓட்டெடுப்பை நடத்தினார், கேமரூன். 'பிரியக்கூடாது' என்ற அணியை சேர்ந்தவர் அவர். ஆனால் மக்கள், 'பிரிய வேண்டும்' என, ஓட்டளித்து விட்டனர். அதனால், தோல்வியை ஒப்புக்கொண்டு, டேவிட் கேமரூன், பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்தவரான, தெரசா மே என்ற பெண்,
புதிய பிரதமரானார். 199 எம்.பி.,க்களின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்த அவருக்கும், ஐரோப்பிய யூனியனை விட்டு, பிரிட்டன் பிரிவதில் ஒப்புதல் இல்லை தான். ஆனால், மக்கள் எண்ணத்துக்கு மதிப்பளித்து, பிரிவதற்கான ஏற்பாடுகளில் இறங்க துவங்கினார்.இங்கு தான் சிக்கல் ஆரம்பித்தது. அவருடைய பல நடவடிக்கைகள், விமர்சனத்துக்கு உள்ளாயின. இத்தனைக்கும், கன்சர்வேடிவ் கட்சிக்கு, பிரிட்டன் பார்லிமென்டில் அதிக பலம் உண்டு. பெரும்பான்மை, எம்.பி.,க்களால் தேர்வு பெற்றவர், தெரசா. அப்படியிருந்தும், 'பிரெக்ஸிட் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அவருக்கு என்ன அதிகாரமிருக்கிறது... அவர் என்ன, மக்களால் தேர்வு பெற்ற பிரதமரா... கேமரூன் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப வந்த, இடைக்கால பிரதமர்
தானே...' என்பன போன்ற கேள்விகள் எழுந்தன. நம்பிக்கை பற்றாக்குறை தான் இங்கும்
பிரச்னையை ஏற்படுத்தியது.

தெரசா மே, என்ன செய்தார் தெரியுமா... பிரிட்டன் பார்லிமென்ட் தேர்தலை அறிவித்து விட்டார். 2020ல் தான் அடுத்த தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால், 2017, ஜூன் 8 அன்று தேர்தல் நடக்கும் என, தைரியமாக அறிவித்து விட்டார். காரணம், ஒன்றே ஒன்று தான். தன் முடிவுகளுக்கு வலிமை வேண்டும்; தன் கருத்துகளுக்கு மக்கள் ஆதரவு வேண்டும்; தன் நடவடிக்கைகள், 'மக்கள் பேராதரவு' என்ற உறுதியான அடித்தளத்தின் மேல் நிற்க வேண்டும்; மக்களின் அங்கீகாரத்தோடு எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டும் என்பதே, இதற்கு அடிப்படை.
எதிர்க்கட்சியான, தொழிலாளர் கட்சி முதற்கொண்டு, அனைவரும், திடீர் தேர்தலை வரவேற்றிருக்கின்றனர். மக்கள், தெரசா மேயின் துணிச்சலை கண்டு ஆச்சரியப்படுகின்றனர். சமீபத்திய கருத்துக் கணிப்புகள், தெரசாவுக்கு மக்கள் ஆதரவு கூடுவதையே காட்டுகின்றன.
ஓ.பி.எஸ்., அல்லது இ.பி.எஸ்., எவராக இருந்தாலும், பிரிட்டன் விவகாரத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இருக்கிறதல்லவா!

ஆர்.வெங்கடேஷ், பத்திரிகையாளர்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • K,kittu.MA. - Anna Nagar,இந்தியா

    காட்சிகளில் இணைப்பு ஒரு நாடகம் தான் பன்னீர் பற்றி செய்தி வெளிவந்தால் தெரியும் டப்பா டான்ஸ் ஆடிவிடும்..சேகர் ரெட்டி வாய் திறக்காமல் இருப்பது ஏன்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement