Advertisement

சாணக்கியன் ஆகிறாரா தினகரன்?

'பன்னீர்செல்வத்துக்கு முன்பே கட்சியின் பொருளாளராக இருந்தவன் நான். 36 வயதிலேயே நான், பார்லி., உறுப்பினர். பார்லி., உறுப்பினராக, பேரவை செயலராக இருந்த நேரத்துல, வெறும் நகர செயலர் ஆக இருந்தவர் அவர். வயசுல தான், நான் அவரை விட சின்னவன். 'ஆனா, அனுபவம் எனக்கு அதிகம். பன்னீர்செல்வம் தன்னோட, 50 வயசுல தான், 'டாப் பாலிடிக்ஸு'க்கு வந்தார். ஆனா, நான் இருந்ததே அதுல தான். அதனால, அவரையெல்லாம், 'ஹேண்டில்' பண்றது எனக்கு ஒரு விஷயமே கிடையாது!'
- ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசார சமயத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தைப் பற்றி, அ.தி.மு.க., துணை பொதுச்செயலர், டி.டி.வி.தினகரன் உதிர்த்த வார்த்தைகள் இவை.

கூடவே, இன்னொன்றையும் சொல்லியிருந்தார்.'பன்னீர்செல்வம் அணியினர் மீண்டும் வந்தாலோ, தற்போது என்னுடன் இருப்பவர்கள் அவர்களோடு கைகோர்த்து என்னை ஒதுங்கி இருக்க சொன்னாலோ, நான் சரியென்று தலையாட்டி விட்டு சென்று விடுவேன். எனக்கு அரசியல் தொழில் அல்ல' என்பது தான் அது.இது தான், இப்போது நடந்து கொண்டிருப்பதை முன்கூட்டியே சொன்ன வார்த்தைகள் தான், 'அரசியல் சதுரங்கத்தில் சாணக்கியன் ஆகிறாரா தினகரன்...' எனும் சந்தேகத்தை அழுத்தமாய் விதைத்திருக்கின்றன.

'அ.தி.மு.க.,வின் துணைப் பொதுச்செயலர் பதவியில் இருக்கும் தினகரனை, கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்து, ஆட்சியையும், கட்சியையும் நடத்த வேண்டும் என்பது தொண்டர்கள், நிர்வாகிகளின் விருப்பம்' என, சொல்கிறார், அமைச்சர் ஜெயக்குமார். அது என்ன, 'ஒதுக்கி' வைத்துவிட்டு... 2011 டிசம்பர், 19ம் தேதி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அத்தனை பொறுப்புகளில் இருந்தும், தினகரன் உள்ளிட்ட, சசிகலா குடும்பத்தினரை துாக்கி
எறிந்து, கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்தினார் ஜெயலலிதா.

அது தான் ஒரு குடும்பத்தின் தலையீட்டை ஆட்சியிலும், கட்சியிலும் இருந்து நறுக்கும்
நடவடிக்கை. ஆனால், தற்போது பழனிசாமி குழு எடுத்திருப்பது அப்படிப்பட்டதா?
'அரசியல் என் தொழில் அல்ல' என்று சொன்ன தினகரன், ஒதுங்கி இருக்க போவதாக சொல்லி,
பல நாட்கள் ஆகியும், தானே முன்வந்து ராஜினாமா செய்யாமல் இருக்கிறார். சிறையில் உள்ள, சசிகலாவிடம் ராஜினாமா கடிதத்தை வாங்கும் முயற்சியில், பழனிசாமி குழு இன்னும் இறங்காமல் இருக்கிறது. இதை தானே, பன்னீர்செல்வத்தின் குழுவும், பழனிசாமியின் முடிவுக்கு வரவேற்பு தெரிவிக்கும் தொண்டர்களும் எதிர்பார்க்கின்றனர். இதை நிறைவேற்றுவதில் அமைச்சர் பெருமக்களுக்கும், தினகரனுக்கும் என்ன தயக்கம்... ஆக, அரங்கேறும் நாடகத்திற்கு பின்னால் திரைமறைவில் ஏதோ நடக்கிறது; அமைச்சர்களை அது இயக்குகிறது!

'தொண்டர்கள் விருப்பப்படி, தினகரனை விலக்கி வைக்கிறோம்' என்று சொல்லும் அமைச்சர்கள், யார் பக்கம் இருக்கும் தொண்டர்கள், தினகரனை தள்ளி வைக்கச் சொல்லி வற்புறுத்தினர் என்பதை, இன்னும் தெளிவுபடுத்தவில்லை. இ.பி.எஸ்., பக்கம் இருக்கும் தொண்டர்கள்
நிச்சயம் அப்படி சொல்லியிருக்க மாட்டார்கள். காரணம், ஆர்.கே.நகர் தேர்தல் பிரசார சமயத்தில், 'கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் என்னை எப்படி ஏற்று கொண்டு இருக்கின்றனர் என்பதை, நீங்கள் தேர்தல் பணியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். என்னை ஜெயிக்க வைக்க வேண்டும் என்ற வெறியோடு ஒவ்வொரு தொண்டனும் நெருப்பாய் உழைத்துக் கொண்டு இருக்கிறான்' என, தினகரன் சொல்லியிருக்கிறார்.

அப்படியென்றால், பன்னீர்செல்வம் அணியில் உள்ள தொண்டர்களின் வேண்டுகோளை தான், தற்போது, பழனிசாமி குழு நிறைவேற்றி இருக்கிறது. எனில், முன்னாள் அமைச்சர் முனுசாமி முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்பதில் பழனிசாமி குழுவுக்கு என்ன தயக்கம்?
சரி, இது ஒருபுறம் இருக்கட்டும்... ஆட்சி நடத்த போதுமான சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு
பழனிசாமிக்கு இருக்கும் நிலையில், அவர் ஏன் பன்னீரின் ஆதரவை எதிர்நோக்க வேண்டும்?
உள்ளாட்சி தேர்தலுக்குள் இலையை சேதாரமின்றி மீட்கவா? பன்னீர்செல்வத்திற்கு மக்கள்
மத்தியில் உருவாகியிருக்கும் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கவா... 'ஊர் ரெண்டுபடவில்லை' என்பதை ஸ்டாலின் மற்றும் பா.ஜ.,வுக்கு உணர்த்தவா?

பன்னீரும் இல்லை, சசிகலா, தினகரன் உள்ளிட்டோரின் ஆதிக்கமும் இல்லை எனும் நிலையில், பழனிசாமி குழு சுதந்திரமாக ஆட்சி நடத்த கிடைத்திருக்கும் ஒரு அருமையான சந்தர்ப்பம் இது! 'கட்சியும், ஆட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும்' எனும் கொள்கை கொண்ட, தம்பிதுரை உடன் இருக்கிறார். கட்சிக்கும், ஆட்சிக்கும் விசுவாசமாக, உண்மையாக இருக்கும் கறைபடியாத அமைச்சர் பெருமக்கள் இருக்கின்றனர். இதற்கு மேல் என்ன வேண்டும்?

சட்டத்துறை அமைச்சர், சி.வி.சண்முகத்தால், 'கருங்காலி, பச்சைத் துரோகி' எனவும், முன்னாள் அமைச்சர் வளர்மதியால், 'சண்டாளப்பாவி' எனவும் துாற்றப்பட்ட, பன்னீரின் வரவை, பழனிசாமி ஏன் விரும்ப வேண்டும்?பன்னீர்செல்வத்திடம் விசுவாசத்தை கற்றதாக இப்போது சொல்லும் அமைச்சர், ஆர்.பி. உதயகுமார், ஜெயலலிதா மறைவுக்கு பின் பன்னீர் முதல்வராக இருந்தபோது, 'சசிகலா முதல்வராக வேண்டும்' என்று, தான் சார்ந்துள்ள, ஜெயலலிதா பேரவை மூலம் தீர்மானம் நிறைவேற்றியவர். சசிகலா போட்டியிட தன் தொகுதியை தாரை வார்க்க துணிந்தவர். அப்படிப்பட்ட விசுவாசி, சசிகலா குடும்பத்தை விலக்கி வைக்க சம்மதித்திருப்பாரா... 'சசிகலா எங்கள் சின்னம்மா அல்ல, அம்மா' என, 'மனதின் அடி ஆழத்திலிருந்து' ஆவேசமாய் சொன்ன அமைச்சர், சி.வி.சண்முகம் இதற்கு எப்படி ஒப்புக் கொண்டார்?

அனைத்து, எம்.எல்.ஏ.,க்களும், தினகரனை விலக்கி வைக்க சம்மதம் தெரிவிக்கின்றனர் எனில், கூவத்துாரில் அத்தனை பேரும் யார் தலைமையின் கீழ் இருந்தனர்; யார் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடந்தனர்... தன்னை முதல்வராக்கி அழகு பார்த்த, ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக பன்னீர் இருந்தது போல், இன்னும் இருப்பது போல், தன்னை முதல்வராக்கிய, சசிகலாவிற்கும் பழனிசாமி இருப்பார் தானே; அப்படியெனில், அவர் எப்படி இந்த, 'ஒதுக்கி வைப்பு' சம்பிரதாயத்திற்கு சம்மதித்திருப்பார்?

'தினகரனால் ஆட்சிக்கும், கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது' என்பதால் தான்,
இம்முடிவு என்றால், தினகரன் மீதான குற்றங்களை அடுக்கி வைத்து, அவரை கடுமையாக அமைச்சர்கள் விமர்சித்திருக்க வேண்டும். ஆனால், அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் யாரும் அப்படி செய்யவில்லை. 'ஒதுக்கி வைக்கிறோம்' என, மென்மையாக சொல்லி சமாளிப்பதன் பின்னணியிலும், தினகரன் பெயரை சொல்லும் அளவிற்கு, சசிகலா பெயரை சொல்ல தயங்குவதிலும், பூசணிக்காய் சோற்றில் மறைவது அப்பட்டமாய் தெரிகிறது. ஜெயலலிதா மரணத்திற்கு பின், விரல் அசைவிலும், கண் அசைவிலும் அமைச்சர்களை கையாண்டது யார் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.

சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல், ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட யார் காரணம் என்பதும் தெரியும். நிலைமை இப்படியிருக்க, தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டோம் என்கிறது, பழனிசாமி குழு. இதற்கு, தமிழக மக்களின் விருப்பமும் ஒரு காரணம் என, கூசாமல் சொல்கிறது.சரி, எதற்காக இந்த நாடகம்?
* அன்னிய செலாவணி வழக்கின் தீர்ப்பு பாதகமாக அமைந்து, தினகரன் சிறை செல்லும் சூழல் ஏற்பட்டால், அதற்கு முன், கட்சியை ஸ்திரப்படுத்த வேண்டியது அவசியம்
* பன்னீரை சேர்த்து கொள்வதன் மூலம், இரட்டை இலையை தேர்தல் ஆணையத்திடம் இருந்து சேதாரமின்றி மீட்க முடியும். ஆர்.கே.நகருக்கு, 'தொப்பி' போதும் என்றாலும், கிராமங்களில் கோலோச்ச வழி செய்யும் உள்ளாட்சி தேர்தலுக்கு, 'இரட்டை இலை' அவசியம்
* இ.பி.எஸ்., அணியுடன் இணையும் போது, ஓ.பி.எஸ்.,சின் மக்கள் செல்வாக்கு தானாக சரியும். அதை பயன்படுத்தி அவரோடு உள்ளவர்களை வளைக்கலாம்; பன்னீரை தனிமைப்படுத்தலாம்
* ஸ்டாலின் மற்றும் பா.ஜ.,வின் பார்வையில் பலமானதொரு தோற்றத்தை ஏற்படுத்தலாம்
* ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கோரிக்கையை நீர்த்து போக செய்யலாம். ஒருவேளை விசாரணைக்கு உத்தரவிட்டாலும், ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, அதை கலகலத்து போக செய்யலாம்
* மீதமுள்ள, நான்கு ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை தக்க வைக்கலாம். இரண்டு ஆண்டுகளில் வரவிருக்கும் பார்லிமென்ட் தேர்தலில், அ.தி.மு.க.,வின் பலத்தை தேசிய கட்சிகளுக்கு உணர்த்தலாம்.
ஆட்சி, கட்சி, பன்னீர் என, ஒரே கல்லில் மூன்று மாங்காய்களுக்கு குறி வைத்திருக்கிறார் தினகரன். ஜெயலலிதாவின் அருகில் இருந்து அரசியல் கற்ற அனுபவத்தை, தற்போது களம் காண செய்திருக்கிறார்.

'கடந்த, 2001, செப்டம்பர், 21ம் தேதி, டான்சி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்கு பாதகமாக வரும் என்பதை ஒரு மாதத்திற்கு முன்பே துல்லியமாய் கணித்து, ஆகஸ்ட், 6ம் தேதியே, என் நேரடி பார்வையில் இருக்கும் பன்னீரை முதல்வராக தேர்ந்தெடுத்தவர் ஜெயலலிதா' என்பது தினகரனின் வாக்கு. அது உண்மையெனில், அப்படியொரு சாதுர்ய முடிவை தான், தினகரனும் தற்போது எடுத்திருக்கிறார் என, எண்ண வைக்கின்றன,

நிகழ்ந்து வரும் நாடகத்தின் காட்சிகள். இதோடு, மிக முக்கியமான இன்னொரு காரணமும் உண்டு. 'அ.தி.மு.க., பிளவுபட்டு நிற்பதற்கு, பா.ஜ., தான் காரணம்' என, கட்சியினர் சொல்லி வந்தாலும், தினகரன் தற்போது வரை அப்படி சொன்னதில்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட சமயத்தில், 'இது, மத்திய அரசின் வேலை' என, சொன்னதோடு மட்டும் நிறுத்திக் கொண்டார். இந்த அரசியல் முதிர்ச்சி தான், தற்போதைய நாடகத்திற்கு சூத்திரதாரி, அவர் தானோ என்றும் எண்ண வைக்கிறது.

இந்நிலையில், பழனிசாமி முன், பன்னீர் வைத்திருக்கும் நிபந்தனைகளை கணக்கில் கொண்டால், பன்னீர் சுதாரித்து விட்டார் என்றே மக்கள் நம்புகின்றனர். ஆனாலும், பன்னீர் அணியில் இருப்பவர்கள் மனம் மாறி, அணி மாற களம் அமைத்து தந்திருக்கிறது பழனிசாமி குழு. பன்னீர் இன்னும் உஷாராக வேண்டிய தருணம் இது!
ஒருவேளை, இந்நாடகத்தின் நோக்கம் நிறைவேறி, பழனிசாமி குழு இன்னும் பலம் பெறுமானால், இக்கட்டுரையின் தலைப்பில் இருக்கும் கேள்விக்குறி, கேலிப்பொருளாவது சத்தியம்!

இ- - மெயில்:
duraigopalrj@yahoo.co.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (6)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement