Advertisement

நான் ஹேமலதா பேசறேன்...

நான் ஹேமலதா பேசறேன்...வணக்கம்! ஹேமலதா, நாங்க ஐபிஎம்ல இருந்து பேசுறோம், நீங்க எங்க நிறுவனத்திற்கு செலக்ட்டாகி இருக்கீங்க மற்ற விஷயங்களை மெயில் பண்றோம் வாழ்த்துக்கள் என்று சொல்லிய அடுத்த விநாடி ஹேமலாத எல்லையில்லா ஆனந்தம் அடைந்தார்.

கிராமத்தில் பிறந்தவர், மாடு மேய்த்து ஐந்து பேர் கொண்ட குடும்பத்தை காப்பாற்றும் படிக்காத அம்மா, உடம்புக்கு முடியாத அப்பா, ரேஷன் அரிசி சாப்பாடு, அப்ளிகேஷனுக்கு 500 ரூபாய் புரட்டமுடியாத சிரமம் இது போன்ற பின்னனியில் இருந்து வந்தவர்தான் ஹேமலதா.
அரியலுார் மாவட்டம் திருமனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமலதாவிற்கு ஒரு தங்கை ஒரு தம்பி உண்டு.விவசாய கூலி வேலை பார்த்த அப்பா பத்மநாபன் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் ஒய்வு எடுக்கவேண்டிய சூழ்நிலையில் குடும்ப சுமையை அம்மா குமுதவள்ளி ஏற்றுக்கொண்டார்.

கடனில் இரண்டு கறவை மாடுகளை வாங்கி பால் வியாபாரம் செய்தார்,அதில் வந்த வருமானத்தில் மொத்த குடும்பத்தையும் நகர்த்தி சென்றார்.மாடுகளுக்கு தீவனம் வாங்கிப் போடமுடியாது என்பதால் கறவை நேரம் போக மீதி நேரத்தில் மாடுகளை தீவனத்திற்காக காட்டிலும் மேட்டிலும் மேய்த்துக்கொண்டிருப்பார்.
நல்ல சாப்பாடு சாப்பிடனும் நாம நல்லபடியா வரணும் என்றால் அதற்கு ஒரே வழி படிப்புதாம்மா நீ நல்லா படிச்சு பெரிய வேலைக்கு போகணும் என்று சொல்லி சொல்லியே பிள்ளைகளை வளர்த்தார்.

அதற்கேற்ப மூத்த பெண்ணான ஹேமலதா உள்ளூரில் இருந்த பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பில் 472 மார்க்குகள் எடுத்தார்.இவ்வளவு மார்க்குகள் எடுத்ததால் ஸ்காலர்ஷிப் கொடுத்து பெரம்பலுார் பள்ளியில் படிக்க அனுமதி கிடைத்தது.
பிளஸ் டூ இரண்டாம் வருடம் படிக்கும் போது ஏற்ப்பட்ட திடீர் காய்ச்சல் காரணமாக ஹேமலதா மிகவும் பாதிக்கப்பட்டார்,அடிக்கடி மயங்கிவிழுவார்.பார்க்காத மருத்துவர்கள் கிடையாது ஏறாத மருத்துவமனை கிடையாது, அனைவரும் ஹேமாவை பரிசோதனைக்கூட எலியாக்கித்தான் பார்த்தார்களே தவிர சரியான மருத்துவம் தரவில்லை.

ஒரு கட்டத்தில் பள்ளி நிர்வாகம் நுாறு சதவீத தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படும் என்று நினைத்து ஹேமாவை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.அப்போதெல்லாம் தாயாகவும் தோழியாகவும் கடவுளாகவும் இருந்து காப்பாற்றியவர் அம்மாதான்.உன்னால் முடியும் என்று சொல்லி சொல்லியே ஹேமாவை சரிசெய்தார், பள்ளி நிர்வாகத்தின் காலில் விழாத குறையாக கெஞ்சி தேர்வு எழுதவைத்தார்.
தேர்வு முடிந்து 1104 மார்க்குகள் வந்த பிறகு அடுத்து என்ன செய்வது என தெரியவில்லை பக்கத்தில் உள்ள கலைக்கல்லுாரியில் 500 ரூபாய் கொடுத்து அப்ளிகேஷன் வாங்கவே முடியவில்லை.

அப்ளிகேஷன் வாங்கவே முடியவில்லையே எப்படி மேற்கொண்டு படிக்கப்போகிறோம் என்று கண்கலங்கி நின்றார்.அன்றைய தினம் அவரது அப்பா எங்கிருந்தோ கொண்டுவந்த தினமலர் பேப்பரில் ஒரு விளம்பரம் வந்திருந்தது.
அதில் படிக்கவசதி இல்லாத கிராமப்புற மாணவர்ளை ஆனந்தம் அமைப்பு படிக்கவைக்கும் என்று எழுதியிருந்தது.உடனே போன் செய்தார்.விவரம் கேட்டுக்கொண்டனர்.அதன் பிறகு எல்லாம் கனவு போல நடந்தது.

சென்னை இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலாஜியில் பிஇ சீட் கிடைத்தது இவரது படிப்பு,ஹாஸ்டல் உள்ளீட்ட அனைத்து செலவுகளையும் ஆனந்தம் பார்த்துக் கொண்டது.நான்காவது வருட படிப்பு முடிவதற்கு முன்பாகவே கேம்பஸ் இண்டர்வியூவில் ஐபிஎம்மில் செலக்ட்டாகிவிட்டார்.
செல்வக்குமார் அண்ணா,அன்பரசன் அண்ணா,கார்த்திக் அண்ணா உள்ளீட்ட ஆனந்தம் அண்ணாக்கள் யாரையும் மறக்கமுடியாது அவர்கள் கேட்டுக்கொண்டது எல்லாம் கடைசி வரை இந்த சமூகத்திற்கு உதவும் நல்ல மனுஷியாக இரு என்பதுதான்.உயிருள்ளவரை யாருக்காவது உதவிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் இப்போது என் தாராக மந்திரமும்,ஏனேனில் எனக்கு இப்படி யாராவது உதவவிட்டால் நான் இந்த நிலைக்கு வந்திருக்கவே முடியாதே...


கட்டுரையை படித்துவிட்டு ஹேமலதாவை பாராட்டுவதை விட முதலில் ஆனந்தம் அமைப்பை பாராட்டுவதே நல்லது, இத்தனைக்கும் ஆனந்தம் அமைப்பானது அம்பானிக்களால் நடத்தப்படுவது அல்ல, பணம் இல்லை என்ற காரணத்தால் ஏழை மாணவர்கள் படிப்பை விட்டுவிடக்கூடாதே என்ற அக்கறை கொண்ட இளைஞர்கள் சிலர் தங்களது ஊதியத்தில் இருந்து ஒரு பங்கை போட்டு நடத்திக்கொண்டு இருக்கின்றனர், அவர்களை உற்சாகப்படுத்தினால் இன்னும் பல ஹேமலாதக்களை அடையாளம் காட்டுவார்கள். அவர்களது எண்கள் :9841013532,9551939551.
-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (24)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement