Advertisement

நீரின்றி அமையப்போகிறதா உலகு.?

நீரின்றி அமையப்போகிறதா உலகு.?


சமீபத்தில் தமிழகம் முழுவதும் சைக்கிளில் சுற்றிவந்த அந்த 32 வயது இளைஞர் சுப்பிரமணியன் முகத்தில் களைப்பை விட அதிகம் கவலையே தென்பட்டது.
பிரிந்த கட்சிகள் சேருமா?நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி தேறுமா?என்பதற்காக ஏற்ப்பட்ட கவலையல்ல அது, தமிழத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னையை பற்றி யாரும் கவலைப்பட மாட்டேன் என்கிறார்களே என்பதால் ஏற்பட்ட கவலையே அது.


அடிப்படையில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவரான சுப்பிரமணியன் படித்து முடித்து சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலையில் இருந்தாலும் மனம் முழுவதும் விவசாயிகளின் நலனைச் சுற்றி சுற்றியே வந்தது.
ஊறுக்கே சோறு போடும் விவசாயிக்கு நாட்டில் உரிய மரியாதை இல்லாத வருத்தம் காரணமாக விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாப்போம் என்ற கோரிக்கையை மக்களிடம் பரப்பவேண்டும் என்று முடிவெடுத்தார்.


இதற்க்காக நண்பர்களுடன் சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார் பலர் உடன் வருவதாக சொன்னார்கள், புறப்படுவதற்கு முதல் நாள் வேறு வேலை இருப்பதாக நண்பர்கள் ஒதுங்கிக்கொள்ள, தனி ஒருவனாக கடந்த மார்ச் 16ந்தேதி சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார்.
முதல் நாள் வாங்கிய புது சைக்கிள் இரண்டு செட் காட்டன் பேண்ட் டிசர்ட் தலைக்கு தொப்பி கையில் பிடித்து பேசக்கூடிய ஸ்பீக்கர் செலவுக்கு கொஞ்சம் பணம் இவற்றுடன் கிளம்பியவர் திருவள்ளூர்,காஞ்சிபுரம்,வேலுார்,கிருஷ்ணகிரி,தர்மபுரி உள்ளீட்ட 32 மாவட்டங்களையும் 32 நாட்களில் சுற்றிவிட்டு கடந்த வாரம்தான் சென்னை திரும்பினார்.


காலை 5 மணிக்கு கிளம்பிவிடுவார் வழியில் கிடைக்கும் எளிய உணவு தண்ணீர் இவருக்கு போதுமானதாக இருந்தது இரவுக்குள் அடுத்த ஊருக்கு போய்விடுவார் வழியில் பத்து பேர் இருந்தால் கூட சைக்கிளை நிறுத்திவிட்டு பிரச்சாரத்தை ஆரம்பித்துவிடுவார் ,கூடவே துண்டு பிரசுரத்தையும் விநியோகித்தபடி சென்றார்.
துண்டு பிரசுரத்தில் விவசாயிகளின் நலன் காப்பது மட்டுமின்றி,லஞ்ச ஊழலை ஒழிப்போம்,தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்போம்,மரம் வளர்ப்போம்,நீர்நிலைகளை காப்போம்,மதுவை ஒழிப்போம் என்பது போன்ற வாசகங்களும் இடம் பெற்றிருந்தன.


தமிழகத்தின் பெரிய சிறிய நகரங்கள் மட்டுமின்றி குக்கிராமங்களைக் கூடவிடாமல் கிட்டத்தட்ட 3ஆயிரத்து200 கிலோமீட்டர் துாரம் சுற்றிவந்த சுப்பிரமணியன் தனது பயண அனுபவத்தை தொகுத்த போது பல விஷயங்கள் வேதனையை ஏற்படுத்தியது.
குடிநீருக்காக மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர், ஒரு நாளின் பெரும்பகுதியை தண்ணீர் தேடலுக்கே செலவழிக்கின்றனர் திருவண்ணாமலை அருகே ஒரு பஞ்சாயத்தில் அதிகாலையில் கிடைக்கும் ஒரு குடம் தண்ணீருக்காக விடிய விடிய துாக்கம் தொலைந்து காத்திருந்தனர்.


ராமநாதபுரம் போன்ற பகுதியில் அடுத்து ஊரில் சென்று தண்ணீர் எடுத்து வருவதற்காக நீளமான தண்ணீர் வண்டிகளே தயார் செய்து வைத்துள்ளனர்.நான்கு குடம் தண்ணீருக்காக குழந்தைகள் உள்ளீட்ட மொத்த குடும்பமே அந்த தண்ணீர் வண்டியை தள்ளிச்செல்கிறது.
பல ஊர்களில் ஆண்கள் குளிப்பது என்பது குழாய்களில் இருந்து கசிந்து வெளிவரும் தண்ணீரில்தான் அந்த தண்ணீரை நீண்ட நேரம் காத்திருந்து பிடித்துக் கொண்டு போய் பெண்கள் பயன்படுத்தக் கொடுக்கின்றனர்.நீர் நிலைகள் புனிதமானது அதனை போற்றி வணங்கிடக்கூட வேண்டாம் ஆனால் சுத்தமாக சுகாதாரமாக பராமரித்திட வேண்டாமா? இது தங்களது வாழ்வாதாரம் என்பதும் அடுத்துவரும் தலைமுறைக்கு தந்து செல்லவேண்டும் என்பதும் மக்களுக்கு ஏன் தெரியமாட்டேன் என்கிறது.
கையால் தோண்டி ஊற்று நீர் எடுத்துக்கொடுத்த காலமும் களமும் எனது தஞ்சை மண்ணில் இருபது ஆண்டுகளுக்கு முன்கூட இருந்தது,ஆனால் இப்போது அங்கே நானுாறு அடி ஐநுாறு அடி போர் போட்டும் தண்ணீரைக் காணோம் என்று சொல்லும் போது அழாமல் இருக்கமுடியவில்லை.


மாற்றம் என்பது யாரோ எங்கிருந்தோ வந்து ஏற்படுத்துவார்கள் என்று எண்ணக்கூடாது நமக்குள் இருந்துதான் அந்த மாற்றம் வரவேண்டும் நீர் நிலைகளை பாதுகாப்பதிலும் விவசாயத்தை முன்னெடுப்பதிலும் அந்த மாற்றத்தை துவங்கவேண்டும் இனி என் நிகழ்காலமும் எதிர்காலமும் இதைப்பற்றியேதான் இருக்கும் என்று சொல்லி முடித்துக்கொண்டார்.

சுப்பிரமணியனுடன் பேசுவதற்க்கான எண்:8939941185.
-எல்.முருகராஜ்


murugaraj@dinamalar.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (29)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement