Advertisement

கற்றுக்கொடுக்க வந்தோம், கற்றுக்கொண்டு திரும்புகிறோம்...

கற்றுக்கொடுக்க வந்தோம், கற்றுக்கொண்டு திரும்புகிறோம்...

நல்லா படிக்கணும் தங்கம் என்று சொல்லி வெள்ளரிக்காய் விற்கும் ஒரு பெண்மணி தன் பெண் குழந்தைக்கு அன்பு முத்தங்களை வழங்கி ஒரு பள்ளியின் வாசலில் இறக்கிவிடுகிறார், மடியைவிட்டு இறங்கிய அந்தக் குழந்தை வஞ்சகமின்றி தன் தாய்க்கு வாஞ்சையுடன் நிறைய முத்தங்களை வழங்கிவிட்டு அந்தப் பள்ளிக்குள் குஷியுடன் குதித்து ஒடுகிறது.

இவரைப் போல கீரை விற்கும் பெண்,ஆட்டோ ஒட்டுபர்,மாட்டுவண்டி ஒட்டிவருபவர் என்று சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மனிதர்கள் தங்கள் வாழ்க்கையின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதும் தங்கள் பிள்ளைகளை படிப்பதற்காக அந்தப் பள்ளியில் விட்டுச் செல்கின்றனர்.

அந்தப்பள்ளிதான் ஏழை ஏளிய மக்களுக்கு பைசா செலவு இல்லாமல் கல்வியை தொண்டாக வழங்கிவரும் சேவாலயா பள்ளி.சென்னை திருநின்றவூர் பக்கம் உள்ள காசுவா கிராமத்தில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் இந்தப் பள்ளியில் முதியோர் இல்லம்,ஆர்கானிக் தோட்டம் மற்றும் தெருவில் விடப்படும் மாடுகளை பராமரிக்கும் கோசாலையும் இயங்கிவருவது சிறப்பு.
சேவாலயாவில் படிக்கும் குழந்தைகள் வெறும் படிப்பை படிப்பதுடன் நின்றுவிடாது இங்குள்ள முதியோர்களுடன் பேசவேண்டும்,இயற்கை உரம்கொண்டு காய்கறிகள் பயிரிடுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளவேண்டும் மேலும் இங்குள்ள கால்நடைகளிடம் அன்பு செலுத்தி உயிரினங்களை நேசிக்க பழகிக்கொள்ள வேண்டும்.

பிளஸ் டூ போன்ற பள்ளி படிப்பை முடித்தவர்கள் கல்லுாரியில் காலடி எடுத்துவைக்க நீண்ட இடைவெளி கிடைக்கும் அந்த இடைவெளியில் பெரும்பாலான குழந்தைகள் எங்கெல்லாம் சுற்றுலாவாக சென்று இன்பமாக இருக்கமுடியும் என்று தேடித்தேடி செல்வர்.
இதே நிலைதான் வெளிநாடுகளிலும் ஆனால் லண்டனைச் சேர்ந்த அபிஷா மர்பி,ரூபி ஸ்வேடல் ஆகிய இரு பள்ளித் தோழிகளுக்கு தங்களது நீண்ட விடுமுறையை இந்தியாவில் செலவழிக்க வேண்டும் அதுவும் ஒரு கிராமத்து குழந்தைகளுடன் என்பதில் ஆர்வமாக இருந்தனர்.அவர்களது தேடலுக்கு சரியான தீர்வாக இருந்ததுதான் சேவாலயா.

கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கு வந்தவர்களுக்கு குழந்தைகள் இவர்கள் மீது காட்டிய அன்பு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிட்டது.ஸ்போக்கன் இங்கிலீஷ் என்று சொல்லக்கூடிய ஆங்கில உரையாடல் படிப்பினை பாடமாக சொல்லிக்கொடுத்தனர், கூடுதலாக நடனம் விளையாட்டு என்று தங்களுக்கு தெரிந்ததை எல்லாம் கூட கற்றுக்கொடுத்தனர்.

அபிஷாவுக்கும்,ஸ்வேடலுக்கும் இங்குள்ள கோசாலை நிரம்பப் பிடித்துப் போன விஷயமாகிப் போனது இங்குள்ள கன்றுகளுடன் விளையாடுவதை பெரிதும் விரும்புகின்றனர்.அதே போல வயதில் மூத்த பெரியோர்களின் அன்பிலும் பெரிதும் வசப்பட்டுவிட்டனர்.

எளிய உணவு,பெரியோர்களின் அன்பு,விலங்குகளிடம் நட்பு என்று பல விஷயங்களை கற்றுக்கொண்ட சந்தோஷத்துடன் இருந்தாலும் விரைவில் நாடு திரும்பவேண்டும் என்ற வருத்தமும் இருக்கிறது...
இப்போது போனாலும் இன்னும் ஒரு பெரிய விடுமுறை எடுத்துக்கொண்டு திரும்ப வருவோம் அப்படி வரும்போது எங்கள் குழு இன்னும் பெரிய குழுவாக இருக்கும் ஏனேனில் இங்கே கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்றனர் இருவரும்...

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (14)

 • Rajesh - Chennai,இந்தியா

  நமது மூத்தவர்கள் கூட நம் குழந்தைகளுக்கு இதையெல்லாம் சொல்லித்தரவேண்டும்.

 • Srinivasan N - Chennai,இந்தியா

  மனதை மிகவும் நெகிழ வைத்த பதிவு. வாழ்த்துகள் முருகராஜ் அவர்களுக்கு.

 • vasu - Sydney,ஆஸ்திரேலியா

  நம்ம ஊரு டவுனு பொண்ணுங்களையும் இங்கே போக சொல்லுங்க. அவங்களுக்கு மண் மரம் மாடு என்றால் என்ன வென்று தெரியாது.

 • Gopal Selvam - New Delhi,இந்தியா

  சென்னை காசுவா கிராமத்தில் இயங்கிவரும் சேவாலயா பள்ளியில் முதியோர் இல்லம்,ஆர்கானிக் தோட்டம் மற்றும் தெருவில் விடப்படும் மாடுகளை பராமரிக்கும் கோசாலையும் இயங்கிவருவது மிகவும் பாராட்டப்படவேண்டியது. இதுபோன்ற பள்ளிகள் இந்தியாவில் அதிக அளவில் செயல்பட வேண்டும்.

 • Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ

  தகப்பன்சாமி என்ற சொல் சிவபெருமான் முருகனிடம் கற்றதை குறிப்பிடுகிறது.கற்றது கை மண்அளவுகல்லாதது உலகளவு என்பதே கற்கவேண்டியதுமட்டும் ஏராளம் என்று சுட்டிக்காட்டுவதுடன்,யார்,எங்கு,எப்பொழுது,யாரிடம்,எதனை கற்க வேண்டிவரும் என்றகேள்விகளுக்கு உரிய பதில்களை இயற்கை, காலம் என்ற பெட்டகத்தில்தான் வைத்திருக்கிறது.

 • cvgeetha - calicut,இந்தியா

  ஒரு கட்டத்தில் மனுஷனுக்கு மிகுதி திருப்தி தருவது எடு போன்ற செயல்களே. வாழ்க தினமலர். தினமலர் நல்ல விஷயங்கள் நெறைய செய்கிறது.

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  நன்றி சார்

 • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

  சாதாரண வெள்ளைக்காரங்க நம்ம பண்பாடு கலாசாரம் எல்லாத்திலையும் மரியாதை வைக்க தொடங்கிட்டாக. ஆனா பாரின் மதம் மதம் புடிச்சவுங்களுக்கு தெரிய மாட்டேனுது நம்ம அருமை. வெளிநாட்டு மதகுருமார்கள் அவுங்களுக்கு காசுக்கோ மோகத்தினாலையோ சிங்கிசா அடிக்கிற உள்ளூர் கூட்டம். இவிங்க திருந்தணும். திருத்தணும்.

 • Paranthaman - kadappa,இந்தியா

  உலகத்தின் இன்றைய மனித நாகரிகங்களில் மிக சிறந்த நாகரிகம் இந்திய நாகரிகம். அதில் மிகவும் சிறந்தது தமிழனின் நாகரிகம். உணவு உடை தெய்வ வழிபாடு குடும்ப வாழ்க்கை தொழில் உழைப்பு பாசம் நேசம் தர்ம தானம் நேர்மை ஆகியவற்றில் சிறந்தவன் தமிழன். தமிழனாக பிறந்ததற்கு ஒவ்வொருவரும் பெருமை படவேண்டும்.

 • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

  நிறைவான மனிதமே தெய்வீகம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement