Advertisement

சென்னையில் நடந்த அசத்தல் நாடகங்கள்


என்னதான் சினிமா கவர்ச்சி அதிகமாகிக்கொண்டு போனாலும் நாடகங்களுக்கு என்று இன்றும் தனிமதிப்பு இருக்கிறது என்பதை சென்னையில் கடந்த 13ந்தேதி கிருஷ்ண கான சபாவில் நடைபெற்ற நாடகங்கள் நிரூபித்தன.
அரங்கம் நிறைந்திருந்த கூட்டத்திற்கு நடுவில் வீணை எஸ்.பாலசந்தர் நினைவாக அவர் அந்த நாளில் எடுத்த பிரபலமான 'அந்த நாள்' சினிமா, நாடகமாக மேடையேற்றப்பட்டது.


படத்தின் கதாநாயகனான நடிகர் திலகம் சிவாஜி படத்தின் முதல் காட்சியிலேயே சுட்டுக்கொல்லப்படுவார் .அவரை யார் கொன்றார்கள் என்று துப்பறிவதுதான் கதை.பாடல்களே இல்லாதது உள்ளீட்ட பல்வேறு புதுமைகளைக் கொண்டு வௌியான அந்தப்படம் இன்றைக்கும் வித்தியாசமான படம் என்று பாராட்டப்படும் படமாகும்.

அந்தப் படத்தை அப்படியே, அதன் சுவராசியம் குறையாமல் நாடகமாக்கியிருந்தார்கள்.அதிலும் சிவாஜியின் ரோலை ஏற்று நடித்த இசைக்கவி ரமணனின் நடிப்பும் வசன உச்சரிப்பும் பிரமாதம்,பணத்திற்காக தன்தரப்பு வாதத்தை நியாயப்படுத்த அவர் பேசும் வசனங்கள் அரங்கில் கைதட்டலை அள்ளியது.இதில் வேடிக்கை என்னவென்றால் ரமணன் உள்பட நாடகத்தில் நடித்த அனைவருக்குமே இந்த நாடக அனுபவம் புதிது என்பதுதான்.

இரண்டாவதாக கிரியா சக்தி சார்பாக குதிராம் போஸ் மற்றும் தில்லையாடி வள்ளியம்மை ஆகியோரைப்பற்றிய ஆங்கில நாடகம் நடந்தேறியது.

குதிராம்போஸ்,வங்காளப் புரட்சியாளர்.ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் கைதாகி 18 வயதில் துாக்கு மேடையேறியவர்.கடைசியாக ஏதாவது சொல்லவேண்டுமா என்ற போது 'வந்தே மாதரம்' என்றே முழங்கியவர்.

இதே போல இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது பதினாறாவது வயதில் உயிர்நீத்த பெண் போராளியே தில்லையாடி வள்ளியம்மை.இவரது போராட்ட உணர்வுதான் எனக்கு விடுதலை உணர்வை தந்தது என்று காந்தியால் பெரிதும் மதிக்கப்பட்டவர்.

இந்தியர்களுக்கான தலைவரியை எதிர்த்து தென்னாப்பிரிக்காவில் சிறை சென்றவர்,சிறையில் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக விடுதலை செய்யப்பட்ட போது, இந்தியர்களுக்கான தலைவரியை நீக்காமல் சிறையைவிட்டு வரமாட்டேன் என்று உறுதியாக இருந்தவர்.அவரது உறுதி காரணமாக தலைவரி நீக்கம் செய்யப்பட்டாலும் அந்த போராட்டத்தின் காரணமாக நலிவுற்ற நிலையில் சிறையைவிட்டு வெளியே வந்ததும் இறந்துபோனார்.

இவரது மறைவு கேட்டு பெரிதும் வருந்திய மகாத்மா, தான்பேசும் பெரும்பாலான கூட்டங்களில் தில்லையாடி வள்ளியம்மை பெயரைச் சொல்லாமல் இருக்கமாட்டார்.

இந்த இருவரின் வரலாறை மிக அருமையாக நாடகமாக்கியிருந்தனர்.இரு வேடங்களிலும் உசித்நாயர் என்ற இளைஞர் அற்புதமாக நடித்திருந்தார்.நாடகத்தின் பல பகுதிகள் மிக உருக்கமாக இருந்தது.இந்த நாடகத்தை தமிழ்ப்படுத்தி பள்ளிகளில் நடத்தினால் ஒவ்வொரு மாணவர்கள் மத்தியில் நிச்சயம் சேதப்பற்று ஊற்றெடுக்கும்.

நல்ல விஷயத்தை முன்னெடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நாடகங்கள் பற்றி மேலும் விவரம் அறிந்து கொள்ள தொடர்பு கொள்ளவேண்டிய எண்:9940533603.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement