Advertisement

இதில் மட்டும் தமிழ்நாடு என்ன தனி நாடா?

பத்து மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு, காஷ்மீரிலும், தமிழகத்திலும்
தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டன. காஷ்மீரில் அனந்த்நாக் தொகுதியில், வேட்பாளர்கள் மீது, வாக்காளர்கள் கல் வீசி கலவரம் செய்தனர். அங்கு, தீவிரவாதம், ஜனநாயகத்தை வென்றது. தமிழகத்தில், ஆர்.கே. நகரில், வாக்காளர்கள் மீது வேட்பாளர்கள் பணத்தை வீசி, பாசம் காட்டினர். இங்கு, பணநாயகம் ஜனநாயகத்தை வென்றது.

மற்ற மாநிலங்களில் எந்த பிரச்னையும் இல்லாமல், ஏப்., 12ல் தேர்தல் நடந்து விட்டது. அண்டை மாநிலமான கேரளாவில், மலப்புறம் லோக்சபா தொகுதி, 13 லட்சம் வாக்காளர்களை கொண்டது. மத மோதல்கள் அடிக்கடி நடக்கும் அங்கு, எந்த தகராறும் இல்லாமல், தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு, ஒன்று கூட பதிவு செய்யப்படாமல், தேர்தல் நடந்திருக்கிறது.

ஆர்.கே.நகர் அசிங்கங்கள் : புறராணுவப்படை பாதுகாப்பு இல்லை; கூடுதல் பார்வையாளர்கள் இல்லை. ஆர்.கே.நகர் போல், எந்த அதிகாரிகளும் மாற்றப்படவில்லை. நம்மூர் போல் அத்தனை
அமைச்சர்களும் தொகுதியில் அணிவகுக்கவில்லை. முதல்வர் பினராயி விஜயன், ஒரு நாள் மட்டும் பிரசாரம் செய்தார். ஆர்.கே.நகர் போல வாக்காளருக்கு பணம், பரிசு... என்று நாம் பேச்சை எடுத்தால், அவர்கள் எள்ளிநகையாடுகின்றனர். 'ஓட்டுக்கு பணமா; இதற்கு நாங்கள் பிச்சை எடுப்போம்' என்கின்றனர் அந்த மக்கள். 'ஓட்டுக்கு பணம் தந்து, நாங்கள் ஒன்றும், பதவிக்கு வர விரும்பவில்லை. மக்கள் சேவை செய்யத் தான் பதவி. கொள்கைக்காக தான் அரசியல். பணம் தர முயற்சித்தாலே மக்கள் ஒதுக்கி தள்ளிவிடுவர்' என்று பதிலடி தருகின்றனர் வேட்பாளர்கள்.
ஆனால், ஆர்.கே.நகரில் நடந்த அசிங்கங்கள் தான் அனைவரும் அறிந்ததே! அ.தி.மு.க., சசிகலா அணியின் தேர்தல் குழுவில், 152 உறுப்பினர்களில் ஒருவராக, நியமிக்கப்பட்டார் மாநில முதல்வர் பழனிசாமி! ஒரு சட்டசபை தொகுதிக்கு, இப்படி ஒரு தேர்தல் பணிக்குழுவில், முதல்வர் இடம்பெறுவது வேறு எங்கும் நடக்காதது. தமிழகத்திலும் இதுவரை
நடக்கவில்லை. முதல்வர் பதவிக்கு, அந்த கட்சி தரும் மரியாதை அவ்வளவுதான் போலும்!
முதல்வரும், அமைச்சர்களும் ஆர்.கே.நகரே கதி என்று கிடந்ததால், 25 நாட்களாக அரசு இயந்திரம் நகரவே இல்லை.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் முதல் ஆர்.கே.நகர் கான்ஸ்டபிள்கள் வரை, தொகுதி தேர்தல் அதிகாரியான ஆர்.டி.ஓ., முதல் வி.ஏ.ஓ., வரை அனைவரையும், இடமாற்றம் செய்து பார்த்தது தேர்தல் கமிஷன். ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி கூட தேர்தல் பணி பார்க்க அவசியமில்லாத, சட்டசபை தொகுதியில், 30 பேரை நியமித்து விட்டது. எனினும், பொறுமையிழந்த தேர்தல் கமிஷன், மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கே மாற்றாக, இன்னொரு அதிகாரியை நியமித்து விட்டது. இப்படி ஒரு மாற்றம், வேறு எந்த மாநிலத்திலும் நடந்தது இல்லை. ஏன் தேர்தல் அரசியலில், தமிழ்நாடு மட்டும் தனி நாடாக மாறியது? ஏன் இங்கு மட்டும் தேர்தலில் பணம் விளையாடுகிறது? இங்குள்ள அரசியலும், மக்கள் மனநிலையும் அப்படி இருக்கிறது.ஜெயலலிதாவும், கருணாநிதியும்தமிழகத்து அரசியல்வாதிகளுக்கு, இடைத்தேர்தல் அத்துமீறல்களும்; மக்களுக்கு, இடைத்தேர்தல் இடையூறுகளும் புதிதல்ல.ஆரம்ப காலங்களில், அதிகாரிகளை சரிக்கட்டி, அதிகார துஷ்பிரயோகம் செய்து, ஆளுங்கட்சிகள் இடைத்தேர்தல்களை வென்றன. பின்பு, தேர்தல் கமிஷன் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து, தனது அதிகாரத்தால் அதிகாரிகளை எல்லாம் மாற்றிய போது, வாக்காளர்களை வசப்படுத்த கட்சிகள் முயன்றன. அதன் காரணமாகவே, வாக்காளன் வாசலுக்கு பணம் வரத்துவங்கியது.முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, சாத்தான்குளத்தில், எப்படியாவது சாதிக்க வேண்டும் என அவர் நினைத்ததன் விளைவு, அங்கு சாக்கடையில் கூட, ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.கருணாநிதி முதல்வராக இருந்த போது, திருமங்கலம் வெற்றியை எல்லாரும் திரும்பி பார்க்க வேண்டும் என்று நினைத்ததன் விளைவு, 'ஒரு ஓட்டு, 1,000 ரூபாய்க்கு விலை போனது. திருமங்கலம் பார்முலா' என்று ஒன்று உருவாகி, ஜனநாயகம் தலைகுனிந்தது.பின்னர், பணம் தாராளமாக விளையாடியதால், அரவக்குறிச்சியும், தஞ்சாவூரும் தேர்தல் நடத்த தகுதியில்லாத தொகுதிகளாக அறிவிக்கப்பட்டு, ஒத்தி வைக்கப்பட்டு, தனியாக தேர்தல் நடந்தது. இப்போது, ஆர்.கே.நகரும் அந்த பட்டியலில் இணைந்து விட்டது.ஜாதி, மதக்கலவரங்கள் என சட்டம், ஒழுங்கு பிரச்னைகளுக்காக தான் நம் நாட்டில் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுவது வழக்கம். ஆனால், ஓட்டு விலை பேசப்பட்டதற்காக, தொடர்ந்து தேர்தல்கள் தள்ளிவைக்கப்பட்டு, தமிழனின் மானம் காவு வாங்கப்பட்டிருக்கிறது.

எல்லாம் இலவசம் : பொங்கலுக்கு, இலவசமாக ஒரு துண்டு கரும்புக்கும், மானம் காக்க வேட்டி, துண்டுக்கும், ரேஷன் கடைகளில், தமிழனை வரிசையில் நிற்கும் நிலைக்கு தள்ளி விட்டன, நம்மை ஆண்ட கட்சிகள். எல்லாம் இலவசமாக வேண்டும் என்ற மனநிலையில், சராசரி தமிழன்
தள்ளப்பட்டு விட்டான்.அதன் விளைவு இப்போது, ஓட்டுக்கு காசு என்ற எதிர்பார்ப்பு, வாக்காளனுக்கு வாடிக்கையாகி விட்டது. கொள்ளையடித்த காசை தானே தருகின்றனர் என்ற விதண்டா நியாயம் பேசி, தங்களை சமாதானப்படுத்திக் கொள்கின்றனர் சிலர்.'எங்களுக்கு ஏன் பணம் தரவில்லை' என்று கேட்டு, அ.தி.மு.க., சசிகலா அணியின் தேர்தல் அலுவலகம் முன், வாக்காளர்கள் முற்றுகையிட்டனர் என்று செய்தி படித்தோம். அதேநேரத்தில், விவசாயத்தை காக்க வேண்டும் என்றும், காவிரி உரிமை கேட்டும் தலைநகர் டில்லியின் வீதிகளில், சுட்டெரிக்கும் ஏப்ரல் வெயிலில், உருண்டு, புரண்டு தமிழன் போராடிய செய்தியையும் படித்தோம்.
இப்படி இருவேறுப்பட்ட மனநிலையில், தமிழனை மாற்றியது அரசியல்வாதிகள் தான்!
ஆர்.கே.நகர் தொகுதியின், அதிகாரப்பூர்வ பெயர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர். ஜனாதிபதியாக
இருந்த ராதாகிருஷ்ணனின் பிரபலமான கூற்று... புறத்தில் உள்ள வறுமையை காட்டிலும், அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது!அகம் என்னும் மனதில் வறுமை உள்ள அரசியல்வாதிகள், புறத்தில் வறுமை உள்ள மக்களுக்கு, 4,000 ரூபாய் தந்து ஆசை காட்டினார்கள்.ஒரு தொகுதியில் இப்படி நடந்தால், சில மாதங்கள் தேர்தலை தள்ளி வைக்கலாம். திருமங்கலம் பார்முலா போல, ஆர்.கே.நகர் ஐடியா போல, அடுத்த சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும், ஓட்டிற்கு பணம் என்பது தமிழகத்தில் கட்டாயமாகி விட்டால் ஜனநாயகம் என்னவாகும்?

தீர்வு என்ன : இதற்கு தீர்வு, தேர்தல் சீர்திருத்தம் தான்! இது காலத்தின் கட்டாயம். ஊழல்வாதிகள் சிறை தண்டனை பெற்றால், ஆறு ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாது என்பது எப்படி அமலானதோ, அதே போன்று பணம் தரும் வேட்பாளர், தேர்தலில் போட்டியிடநிரந்தர தடை விதிக்க வேண்டும். லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்பது போல, ஓட்டுக்கு பணம் வாங்கும் வாக்காளரையும் தண்டிக்க வேண்டும். அவரது ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டளிக்க ஆறு ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும்.
ஏதோ சில வேட்பாளர்களும், சில வாக்காளர்களும் ஜனநாயகத்தை கேலிகூத்தாக்குவதால், ஒட்டுமொத்தமாக தேர்தலை தள்ளிவைக்க வேண்டி உள்ளது. இதனால் மக்கள் வரிப்பணம், அதிகாரிகள் உழைப்பு வீணாகிறது. ஆர்.கே.நகரில், தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதால், மக்கள் வரிப்பணம், 1.10 கோடி ரூபாய் வீணானது.அப்படி தள்ளிவைத்தாலும், மானம், ரோஷம் இல்லாத
கட்சிகள், குற்றச்சாட்டிற்குள்ளானவர்களையே மீண்டும் வேட்பாளராக அறிவிப்பர். எனவே, தேர்தல் கமிஷன், குறிப்பிட்ட வேட்பாளரையும், வாக்காளரையும் மட்டுமே தண்டிக்கும் விதத்தில், மக்கள் பிரதிநித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்.

ஜி.வி.ரமேஷ் குமார்
பத்திரிகையாளர்
rameshgvdmr@yahoo.com

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement