Advertisement

மற்றவர்களிடம் பேசுவோம்... தவறில்லை!

உலகளவில், 32 கோடி பேர் மனச் சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்க, இந்தியாவில் மட்டும், ஐந்து கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கின்றன, உலக சுகாதார மையம் ஆய்வறிக்கையும் இதர ஆய்வுகளும். பல வகையான மனநோய்கள் இருந்தாலும், மனச்சோர்வு தான் முதன்மையானது. மனநோய் என்பதும் ஒரு குறைபாடு என அறிவுறுத்தப்பட்டு, நோய்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இத்தகைய குறைபாட்டை பற்றி மக்கள் வெளிப்படையாக பேச வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்தாண்டை, 'மன அழுத்தம் இருக்கிறதா? பேசலாம் வாருங்கள்!' என்ற கருத்தோடு உலக ஆரோக்கிய தினமாக, இன்று கொண்டாடப்படுகிறது.

உலக சுகாதார மையத்தால், 1950 முதல், உலக ஆரோக்கிய தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சர்க்கரை நோய், புற்றுநோய், இதய நோய், தொற்று நோய்கள் என, பல கருப்பொருள்களை முன்வைத்து, உலகளவில் மக்களுக்கு தேவைப்படும் விழிப்புணர்வு, மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் வழிமுறைகள், பொருளாதார உதவி என, பலவற்றுக்கு உலக சுகாதார மையம் உதவி வருகிறது. மற்ற நோய்களை காட்டிலும் மனச்சோர்வு நமக்கு தெரியாமலேயே, உயிரை கொன்றுவிடும். கை, கால், உடலில் எந்தப் பகுதி சரியில்லை என்றாலும், மன திடத்தால் அவற்றை குணமாக்கவோ, தேற்றியோ வாழ முடியும். ஆனால் மனம் சரியில்லை என்றால், அதுவே பல நோய்களுக்கு வேராக அமையும் என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.
இந்தியாவில், 36 சதவீத இளைஞர்கள், அதிகளவில் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது ஒரு ஆய்வு. நம்மை சுற்றியிருப்பவர்களில், ஐந்தில் ஒருவருக்கு மனச்சோர்வு உள்ளது.
இதன் அறிகுறிகள் தெரியாமலும், உணராமலும் பலரும் இதை எப்படி எதிர்கொள்வது என புரியாமலும், குழப்பமான நிலையிலேயே வாழ்கின்றனர். இளைஞர்கள், வேலை, திருமணம், உறவுகளைக் கையாளுதல், நண்பர்களினால் அழுத்தம் என, பல காரணங்களாலும் மன சோர்வுக்கு தள்ளப்படுகின்றனர்.ஐ.டி., துறையில் வேலைப்பார்க்கும் பெண் ஒருவர் கூறியது. ''திருமணத்தைப் பற்றிய குழப்பம் நீடித்ததால், வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. அலுவலகத்தில் இதைப்பற்றி யாரிடம் பேசுவது என தெரியாமல், பல சமயங்களில் வேலையிலிருந்து பாதியில் வீட்டுக்கு கிளம்பியிருக்கிறேன். ''இப்படியே தொடர்ந்தால் வேலையே போய்விடும் என்பது எனக்குத் தெரியும். ஒருகட்டத்தில் எனக்கு தொடர்பில்லாத வேறு ஒரு டீமில் இருக்கும் முக்கிய பெண்ணிடம் இதைப்பற்றி பேசினேன். நான் ஒருவரை நாடிப்போய் என் பிரச்னைகளை சொன்னதே எனக்கு நிம்மதியாக இருந்தது,” என்றார்.
ஒருவருக்கு பிரச்னை இருக்கிறது என்பதை உணரும்போது, யாரிடமாவது அதைப்பற்றி பகிர்ந்து கொள்ளுதல் ஆறுதலை தருவதோடு, பிரச்னையை வேறு ஒருவர் எப்படி அணுகுகிறார் என்பதும் புரியும் என்கின்றனர் மனநல மருத்துவர்கள். இத்தகைய ஆலோசனைகளை, தேர்ந்த மருத்துவர்கள் வழங்குவது முக்கியம் என்றாலும், நண்பர்களோடும் உறவினர்களோடும் பகிர்ந்து கொள்வதன் மூலம், முதல் நிலையிலேயே ஓரளவுக்கு நிம்மதியும் பெற முடியும்.
ஹிந்தி நடிகை தீபிகா படுகோன், தனக்கு ஏற்பட்ட மனச்சோர்வை எப்படி எதிர்கொண்டார் என்பதை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளிப்படையாகத் தெரிவித்தார்.
மனச்சோர்வு ஏற்பட்டதை உணர்ந்தபோது, அவருடைய குடும்பம் அவருக்கு வழங்கிய அரவணைப்பு, உறுதுணையாக இருந்துள்ளது. மனச்சோர்விலிருந்து ஒருவர் மீண்டு வருவதற்கு, குடும்பமும், நண்பர்களும் அவசியமானவர்கள். நமக்கு மனச்சோர்வு இருப்பதை, நாமே ஏற்றுக் கொள்வதில்லை. ஒருசிலர் அதை உதாசீனம் செய்வர்; இன்னும் சிலர், அதை குணக்கேடாக நினைப்பர். மற்றவர்கள் நம்மைப் பற்றி தவறாக நினைத்து விடுவர் என பயப்படுவர். இப்படி உதாசீனம் செய்யும்போது, ஒரு கட்டத்தில், அக்குறைபாடு உடலளவில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். சர்க்கரை குறைபாடு, இரத்த அழுத்தம், இதய நோய், உடல் பருமன் என, பல குறைபாடுகள் நம்மைத் தாக்கும். உதாரணமாக, மனச்சோர்வுடன் இருக்கும்போது என்ன சாப்பிடுகிறோம் என்று தெரியாது. பசி எடுப்பது போல தோன்றும், சிலருக்கு பசியே இருக்காது. நாம் வழக்கமாக செய்யும் செயல்களைத் தொடர முடியாமல்

கைவிடுவோம். : இந்த மாற்றங்கள் எதனால் ஏற்படுகின்றன எனத் தெரியாமல், நமக்கு ஏதோ குறை, அல்லது நோய் என்று நினைத்து, குடும்பமும், நண்பர்களும் அச்சப்படுவர்; உதவிக்கு வருவர் அல்லது புறக்கணிப்பர். இன்னும் சிலருக்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவே முடியாது. எதிர்மறையான உணர்ச்சிகளான கோபம், வெறுப்பு, பொறுமையின்மை, தனிமை, அடிக்கடி அழுவது போன்றவை தோன்றும். இப்படி எல்லாம் இருந்தால், நிச்சயம் ஏதோ ஒரு விஷயத்தில் நம்முடைய மனம் நிறைவாக இல்லை, சோர்வாக உணருகிறது, நிறைவு இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம். நம்முடைய நண்பர்கள் யாரிடமாவது, இத்தகைய எண்ணங்களைப் பகிர்ந்துக் கொள்ளலாம். மேலும், மனச்சோர்விலேயே பல்வேறு நிலைகள் உள்ளன. அதற்கு மருத்துவ ரீதியான உதவியைப் பெறுவது மிகவும் முக்கியம். மனநல ஆலோசகரை அணுகுவதோடு, மனச்சிக்கலுக்கு மருத்துவத்தை அணுகுவது அவமானம் இல்லை. ஏனெனில் மன பிரச்னைகள் நிச்சயம் குணப்படுத்தக் கூடியவை. மனச்சோர்விலிருந்து விடுபட, மருத்துவ வசதிகள் இன்று பெருகியிருப்பதோடு, நம்பகத்தன்மையையும் மேம்பட்டிருக்கிறது. நிவாரணமும் கைகூடியிருக்கிறது.
மனச்சோர்விலிருந்து குணமாக நமக்கு பொறுமையும், நம்பிக்கையும் மிகவும் அவசியம்.
மனச் சோர்வின் தீவிரத்தை உணர்ந்ததால் தான், உலக சுகாதார மையம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவெடுத்துள்ளது. 2017ஐ, மனச்சோர்வைப் பற்றிய உரையாடலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த முயற்சி செய்துள்ளது. மனச் சோர்வை நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம் என்றால், நாம் வாழ்ந்தும் பயனற்று போவோம் என்பது தான் கசப்பான உண்மை.

ஜனனி
சமூக நல விரும்பி
seethavenkat11@gmail.com

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement