Advertisement

இப்போது பிரித்திகா யாஷினி ...


இப்போது பிரித்திகா யாஷினி ...


தனிமையையும், தீண்டாமையையுமே தங்கள் வாழ்க்கையின் சீதனங்களாக கொண்டுவாழும் திருநங்கைகளின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் முதல் புள்ளியாய் வந்திருக்கிறார் பிரித்திகா யாஷினி.இவர் இப்போது தருமபுரி காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கிற்கான சப்-இன்ஸ்பெக்டர்.

இதற்காக இவர் ஒவ்வொரு நொடியையும் வலியுடன் கடந்தே வந்திருக்கிறார்.அதென்ன ஒவ்வொரு நொடி என்பதை அறிய மேற்கொண்டு படியுங்கள்.

சேலம் கந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கலையரசன்-சுமதி தம்பதியருக்கு இரண்டு ஆண் வாரிசுகள், இரண்டாவது வாரிசு பிரதீப்குமார்.
இவர் பிளஸ் டூ படிக்கும் போது தனக்குள் பெண்மை மலர்வதை உணர்ந்திருக்கிறார், தான் ஒரு ஆண் இல்லை என்பதை குடும்பத்தாரிடம் உணர்த்தியிருக்கிறார்.

அவர்களுக்கு இது புரியவில்லை மந்திரவாதியை கூப்பிட்டு இருக்கின்றனர், அந்த மந்திரவாதியும் வாங்கிய காசுக்கு பிரதீப்குமாரை அடி அடியென அடித்து உடலை ரணமாக்கிவிட்டு சென்றுவிட்டான்.இந்த போராட்டத்திற்கு நடுவில் கல்லுாரியில் சேர்ந்து பிசிஏ முடித்து பட்டதாரியாகவும் ஆனார்.

பெற்றோர் நல்லவர்கள் ஆனால் புரியாதவர்கள் நம்மால் அவர்களுக்கு எதற்கு அவமானமும் தொல்லையும் என்று வீட்டைவிட்டு வெளியேறி சென்னை வந்து சேர்ந்தார்.

திருநங்கைகளை அன்புகாட்டி அரவணைக்கும் 'தோழி' அமைப்பு இவருக்கு அடைக்கலமும் தந்து, விடுதி வார்டன் வேலை வாய்ப்பும் வாங்கிக்கொடுத்தது.சிறுக சிறுக சேமித்து ஆஸ்பத்திரியில் சேர்ந்து அறுவை சிகிச்சை செய்துகொண்டு முழுமையான பெண்ணாக மாறினார்.

பெண்ணாக மாறிய பிறகு சான்றிதழில் உள்ள பிரதீப்குமார் உள்ளீட்ட ஆண் அடையாளத்தை மாற்ற விரும்பி வழக்கறிஞர் பவானியை சந்தித்தார்.அவரது உதவியுடன் பிரதீப்குமாராக இருந்தவர் பிரித்திகா யாஷினியானார்.இவரது வாழ்க்கையில் சிரித்ததைவிட அழுததே அதிகம், அப்பொழுதெல்லாம் பெரும் ஆறுதலாக இருந்து அன்பு செலுத்திய தனது தோழி யாஷினியின் பெயரை பின் பெயராக வைத்து தோழிக்கு பெருமை சேர்த்தார்.

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தார்.ஆண் பெண் என்ற இரு பாலினத்திற்குதான் தேர்வு நீங்கள் இதில் வரவில்லை என்று கூறி தேர்வானையம் இவரது விண்ணப்பதை நிராகரித்தது.

மூன்றாம் பாலினம் என்று ஒன்று இருக்கும் போது அதை சொல்லாதது உங்கள் குற்றமே தவிர என் குற்றம் இல்லை என்று மீண்டும் கோர்ட்டிற்கு சென்றார்.மூன்றாம் தேதி எழுத்துத்தேர்வு இருந்த போது இரண்டாம் தேதி இரவுதான் அனுமதி கிடைத்தது.

தேர்வில் 28.5 கட்ஆப் எடுத்திருந்திருந்தாலும் நீங்கள் எடுத்த மார்க் போதாது என்று சொல்லி தேர்வானையம் இவரை பெயிலாக்கியது.பெண்களுக்கு கட் ஆப் மார்க் 25தான் நான் ஒரு பெண் தேவையான மார்க்குகள் வாங்கியுள்ளேன் என்று மீண்டும் கோர்ட்டிற்கு சென்றார்.அவர் சொல்வது சரிதானே இதில் என்ன தப்பைக் கண்டீர்கள் என்று கோர்ட் மீண்டும் தேர்வானையத்தை குட்டியதும் பிரித்திகா எழுத்து தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

அதன்பிறகு உடல் திறன் போட்டி, குண்டு எறிதல் ஈட்டி எறிதலில் தேர்ந்தாலும் ஒட்டத்தில் ஒரு நொடி தாமதாக வந்தார் என்று சொல்லி மீண்டும் பிரித்திகாவை நிராகரித்தனர்.பிரித்திகா விடவில்லை, மீண்டும் கோர்ட் படியேறினார். நான் ஒடிய வீடியோவை பாருங்கள் ஒரு நொடியை காரணம்காட்டி என் வாழ்வை பாழாக்கிவிடாதீர் என்று கெஞ்சினார்.அவரது முயற்சி வென்றது.

இதை அடுத்து உதவி ஆய்வாளருக் கான ஓராண்டு பயிற்சியை முடித்த பிரித்திகா யாஷினிக்கு தற்போது காவல் நிலைய பணி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இருந்து பணி ஆணையையும் வாழ்த்தையும் பெற்ற போது அவரது முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி.

நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்யக்கிடைத்த அற்புதமான வாய்ப்பு இதனை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்வேன் எனது அடுத்த கனவு ஐபிஎஸ்தான் என்றார், அதுவும் விரைவில் நனவாக வாழ்த்துவோம்.

எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (18)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement