Advertisement

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் 5வது தோல்வி

சோனேபட்: புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து ஐந்தாவது தோல்வியை பதிவு செய்தது. லீக் போட்டியில் 35-44 என்ற கணக்கில் பெங்களூரு அணியிடம் வீழ்ந்தது.

இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் ஆறாவது சீசன் தற்போது நடக்கிறது. ஹரியானாவில் நடந்த 'பி' மண்டல லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

போட்டி துவங்கியது முதல் தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் வழக்கம் போல தவறுகள் செய்யத் துவங்கினர். தற்காப்பு பகுதியில் சொதப்பியதால் அதிகமான புள்ளிகளை வாரி வழங்கினர். இதனால் முதல் 12 நிமிடத்தில் இரண்டு முறை ஆல் அவுட்டானது. பின் அஜய் தாகூர் ஒவ்வொரு புள்ளிகளாக பெற முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 14-25 என பின்தங்கியது.

இரண்டாவது பாதி துவங்கியதும் பெங்களூரு அணி ஆல் அவுட்டானது. பெங்களூரு அணிக்கு அதிக ரெய்டு புள்ளிகள் பெற்றுத் தந்த காஷ்லிங்கை, தமிழ் தலைவாஸ் அணியின் சுனில் தனி நபராக மடக்கி, ரசிகர்களுக்கு சற்று நம்பிக்கை (24-30) தந்தார்.

போட்டியின் 35வது நிமிடத்தில் கேப்டன் அஜய் தாகூர் காயத்தால் வெளியேறியது கூடுதல் பின்னடைவு ஆனது. முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 35-44 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

ஆறாவது சீசனில் முதல் போட்டியில் மட்டும் வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ் அணி, தொடர்ந்து ஐந்தாவது தோல்வியை பதிவு செய்தது.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Sakthimayil .G - madurai,இந்தியா


    பெஸ்ட் டீம் போர் தமிழ் தலை வா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement