Advertisement

ரோஷக்கார ரோஸ்டன்... :ஆக்ரோஷம் இல்லா இந்தியா

ஐதராபாத்: ஐதராபாத் டெஸ்டில் துவக்கத்தில் அசத்திய இந்திய பவுலர்களிடம், போகப் போக ஆக்ரோஷம் குறைந்தது. இதனை பயன்படுத்திய ரோஸ்டன் சேஸ், ஹோல்டர் ரன் குவிக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி சரிவில் இருந்து மீண்டது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் ஐதராபாத்தில் நேற்று துவங்கியது. காயத்தில் இருந்து மீண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்பிய கேப்டன் ஹோல்டர், 'டாஸ்' வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

ஷர்துல் அறிமுகம்

இந்திய அணியில் முகமது ஷமிக்கு ஓய்வு தரப்பட்டு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர், 294வது டெஸ்ட் வீரராக அறிமுக வாய்ப்பு பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் கீமோ பால், லீவிஸ் நீக்கப்பட்டு வாரிகன் அணிக்கு திரும்பினார்.

அஷ்வின் நம்பிக்கை

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராத்வைட், பாவெல் ஜோடி துவக்கம் கொடுத்தது. ஷர்துல் ஓவரில் 2 பவுண்டரி அடித்த பாவெல், உமேஷ் பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பினார். இவர் 22 ரன் எடுத்த போது, அஷ்வின் சுழலில் ஜடேஜாவிடம் 'கேட்ச்' கொடுத்தார்.

குல்தீப் அபாரம்

ஹோப், குல்தீப் பந்துகளில் வேகமாக ரன்கள் சேர்த்தார். மறுபக்கம் ரகானே தயவில் தப்பிய பிராத்வைட்டை (14) அடுத்த பந்தில் வெளியேற்றினார் குல்தீப். உணவு இடைவேளைக்குப் பின் மீண்டும் பந்தை சுழற்றிய குல்தீப் இம்முறை ஹெட்மயரை (12) திருப்பி அனுப்பினார்.



சேஸ் அரைசதம்

அடுத்து சேஸ், டவ்ரிச் இணைந்தனர். ஜடேஜா பந்தில் இப்போட்டியின் முதல் சிக்சர் அடித்தார் சேஸ். கடந்த போட்டியில் தோற்றதால், ரோஷக்காரராக மாறிய இவர், குல்தீப் பந்திலும் பவுண்டரி அடித்தார். ஜடேஜா பந்தில் தன் பங்கிற்கு சிக்சர் அடித்தார் டவ்ரிச்.

6வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்த போது உமேஷ் 'வேகத்தில்' டவ்ரிச் (30) அவுட்டானார். நிதான ஆட்டத்தை தொடர்ந்த சேஸ், இத்தொடரில் தொடர்ந்து இரண்டாவது அரைசதம் எட்டினார். சர்வதேச அரங்கில் 7வது அரைசதம் இது.

இவருக்கு 'கம்பெனி' கொடுத்த ஹோல்டர், உமேஷ் பந்தில் பவுண்டரி அடித்து, டெஸ்ட் அரங்கில் 8வது அரைசதம் கடந்தார். 7வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்த போது ஹோல்டரை (52) அவுட்டாக்கினார் உமேஷ். ஒருகட்டத்தில் 113 ரன்னுக்கு 5 விக்கெட் என்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 295 ரன்கள் எடுத்திருந்தது. சேஸ் (98), பிஷூ (2) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement