Advertisement

ஒருநாள் அணியில் ரிஷாப்: தினேஷ் கார்த்திக் நீக்கம்

ஐதராபாத்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் இரண்டு ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டார். ரிஷாப் பன்ட் அறிமுக வாய்ப்பு பெற்றார்.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் போட்டி வரும் 21ல் கவுகாத்தியில் நடக்கவுள்ளது. இத்தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

வருகிறார் ரிஷாப்

கடந்த ஆசிய கோப்பையில் ஓய்வு தரப்பட்ட விராத் கோஹ்லி மீண்டும் ஒரு நாள் அணியை வழிநடத்துகிறார். ரோகித் சர்மா, ஷிகர் தவான் துவக்க வீரர்களாக தொடர்கின்றனர். 'மிடில்-ஆர்டர்' வீரர்களாக லோகேஷ் ராகுல், அம்பதி ராயுடு, மணிஷ் பாண்டே இடம் பிடித்துள்ளனர்.

சமீப காலமாக ரன் சேர்க்க தடுமாறும் அனுபவ விக்கெட் கீப்பர் தோனி அணியில் நீடிக்கிறார்.

ஆசிய கோப்பை தொடரில் தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் (6 போட்டி, 146 ரன்) தடுமாறினார். இதனால் கார்த்திக் நீக்கப்பட்டு இளம் விக்கெட் கீப்பரான ரிஷாப் பன்ட் அறிமுக வாய்ப்பு பெற்றார். இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்டில் 114 ரன்கள், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ராஜ்கோட் டெஸ்டில் 92 ரன் எடுத்து இருந்தார். இதனால் இவருக்கு ஒருநாள் அணியிலும் இடம் கிடைத்துள்ளது.

பும்ரா இல்லை

ஆசிய கோப்பை (4 போட்டி, 48 ரன், 7 விக்.,) மற்றும் ராஜ்கோட் டெஸ்டில் (100, 4 விக்.,) நம்பிக்கை அளித்த 'ஆல் ரவுண்டர்' ஜடேஜா மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறாத வேகப்பந்துவீச்சாளர்களான புவனேஷ்வர், பும்ராவுக்கு ஓய்வு தொடர்கிறது. முகமது ஷமி, ஷர்துல் தாகூர், கலீல் அகமது என மூன்று 'வேகங்கள்' இடம்பெற்றுள்ளனர். வழக்கம்போல இரட்டை சுழற்பந்துவீச்சாளர்களான குல்தீப், சகால் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

அணி விவரம்: கோஹ்லி (கேப்டன்), ரோகித் (துணை கேப்டன்), தவான், லோகேஷ் ராகுல், அம்பதி ராயுடு, மணிஷ் பாண்டே, தோனி, ரிஷாப் பன்ட், ஜடேஜா, சகால், குல்தீப், ஷமி, கலீல் அகமது, ஷர்துல் தாகூர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bebeto - chennai,இந்தியா


    கார்த்திக் நீக்கம், ஆனால் டோனி, ராயுடு, மனிஷ் பாண்டே ஆகியோர் இருக்கிறார்கள். என்ன ஒருதலை பட்ஷம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement