Advertisement

வங்கதேசத்தை வென்றது ஆப்கானிஸ்தான்: ரஷித் கான் அசத்தல்

அபுதாபி: வங்கதேசத்துக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் ரஷித் கான் 'ஆல்-ரவுண்டராக' அசத்த ஆப்கானிஸ்தான் அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) 14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. அபுதாபியில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதின. வங்கதேச அணியில் அபு ஹைதர், நஜ்முல் ஹொசைன் ஷான்டோ அறிமுகமாகினர். 'டாஸ்' வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

சாகிப் அசத்தல்

ஆப்கானிஸ்தான் அணிக்கு முகமது ஷாஜத், இஷானுல்லா ஜோடி துவக்கம் தந்தது. அபு ஹைதர் வீசிய 2வது ஓவரில் இஷானுல்லா தொடர்ச்சியாக 2 பவுண்டரி விளாசினார். பின் எழுச்சி கண்ட ஹைதர் 'வேகத்தில்' இஷானுல்லா (8), ரஹ்மத் ஷா (10) அவுட்டாகினர். பொறுப்பாக ஆடிய முகமது ஷாஜத், ஹஷ்மதுல்லா ஷஹிதி ஜோடி ஓரளவு ரன் சேர்த்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு 51 ரன் சேர்த்த போது சாகிப் அல் ஹசன் 'சுழலில்' ஷாஜத் (37) சிக்கினார். மோமினுல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஷஹிதி, அரைசதம் கடந்தார். தொடர்ந்து அசத்திய சாகிப் பந்தில் கேப்டன் அஸ்கர் (8), சமியுல்லா ஷென்வானி (18) போல்டாகினர்.

ரஷித் விளாசல்

ரூபெல் ஹொசைன் 'வேகத்தில்' ஷஹிதி (58) வெளியேறினார். அடுத்து வந்த குல்பதின், ஹைதர் வீசிய 42வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்தார். ரூபெல் ஹொசைன் வீசிய 45வது ஓவரில் அடுத்தடுத்து ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய ரஷித் கான், மொர்டசா வீசிய 48வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். மொர்டசா வீசிய கடைசி ஓவரில் 4 பவுண்டரி விரட்டிய ரஷித், 31 பந்தில் அரைசதமடித்தார். இது, ஒருநாள் போட்டி வரலாற்றில் இவரது 3வது அரைசதம்.

ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 255 ரன்கள் எடுத்தது. ரஷித் கான் (57), குல்பதின் (42) அவுட்டாகாமல் இருந்தனர். வங்கதேசம் சார்பில் சாகிப் அல் ஹசன் 4, ஹைதர் 2 விக்கெட் வீழ்த்தினர்.

மொர்டசா ஏமாற்றம்

சவாலான இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (7), லிட்டன் தாஸ் (6) ஏமாற்றினர். குல்பதின் பந்தில் மோமினுல் (9), முகமது மிதுன் (2) வெளியேறினர். ரஷித் கான் 'சுழலில்' சாகிப் (32), மகமதுல்லா (27) சிக்கினர். அடுத்து வந்த மெஹிதி ஹசன் மிராஸ் (4), கேப்டன் மொர்டசா (0), அபு ஹைதர் (1), ரூபெல் ஹொசைன் (0) நிலைக்கவில்லை.

வங்கதேச அணி 42.1 ஓவரில் 119 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. மொசாதக் ஹொசைன் (26) அவுட்டாகாமல் இருந்தார். ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான், குல்பதின், முஜீப் உர் ரஹ்மான் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

112 விக்கெட்

'சுழலில்' அசத்திய ரஷித் கான், 2 விக்கெட் கைப்பற்றினார். இதுவரை இவர், 49 போட்டியில், 112 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இதன்மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக விக்கெட் சாய்த்த ஆப்கானிஸ்தான் வீரர்கள் பட்டியலில் முகமது நபியுடன் (112 விக்கெட், 103 போட்டி) முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.



95 ரன்

அபாரமாக ஆடிய ரஷித் கான், குல்பதின் ஜோடி 95 ரன்கள் சேர்த்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தது. இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டி வரலாற்றில் 8வது விக்கெட்டுக்கு அதிக ரன் குவித்த ஆப்கானிஸ்தான் ஜோடி என்ற புதிய சாதனை படைத்தது.

* இது, இந்த ஜோடியின் 2வது அதிகபட்ச ரன். இதற்கு முன், 2017ல் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ரஷித் கான், குல்பதின் ஜோடி 7வது விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்திருந்தது.

'ஹேப்பி பெர்த்டே'

தனது 20வது பிறந்த நாள் (செப். 20) கொண்டாடிய ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (57) ஒருநாள் அரங்கில் தனது 3வது அரைசதம் கடந்தார். ஏற்கனவே அயர்லாந்துக்கு எதிராக 2 முறை (2016ல் 60, 2017ல் 56 ரன்) அரைசதம் கடந்திருந்தார்.

* தவிர இது, ஒருநாள் அரங்கில் ஒரு இன்னிங்சில் இவரது 2வது அதிகபட்ச ரன். இதற்கு முன், கடந்த 2016ல் அயர்லாந்துக்கு எதிராக 60 ரன் எடுத்திருந்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement