Advertisement

இலங்கை 'திரில்' வெற்றி

பல்லேகெலே: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் லக்மல் அசத்த, இலங்கை அணி 3 ரன் வித்தியாசத்தில் 'டக் வொர்த் லீவிஸ்' விதிப்படி 'திரில்' வெற்றி பெற்றது.

இலங்கை சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில், தென் ஆப்ரிக்கா 3-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டது. நான்காவது போட்டி பல்லேகெலேயில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்கா பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி இரண்டு மணி நேரம் தாமதமாக துவங்க, போட்டி தலா 45 ஓவராக மாற்றப்பட்டது.

பெரேரா அரை சதம்

இலங்கை அணிக்கு டிக்வெல்லா, உபுல் தரங்கா துவக்கம் தந்தனர். 9வது ஓவரின்போது, மீண்டும் மழை குறுக்கிட 39 ஓவராக குறைக்கப்பட்டது. டுமினி 'சுழலில்' டிக்வெல்லா (34) சிக்கினார். தரங்கா 36 ரன்கள் எடுத்தார். குசல் பெரேரா (51) அரை சதம் கடந்தார். கேப்டன் மாத்யூஸ் (22) ஜொலிக்கவில்லை. சனாகா (65), திசரா பெரேரா (51*) அரை சதம் விளாசினர். இலங்கை அணி 39 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 306 ரன்கள் எடுத்தது.

இலக்கு மாற்றம்

தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் குயின்டன், ஆம்லா ஜோடி துவக்கம் அளித்தது. 2வது ஓவரில், மழை குறுக்கிட தென் ஆப்ரிக்கா இலக்கு 21 ஓவரில் 191 ரன்களாக மாற்றப்பட்டது. லக்மல் பந்தில் குயின்டன் (23) அவுட்டானார். ஆம்லா (40), டுமினி (38) ஓரளவு கைகொடுத்தனர். ரீசா ஹென்ரிக்ஸ் (2), பெலுக்வாயோ (9) ஒற்றை இலக்கில் திரும்பினர். வெற்றிக்கு லக்மல் வீசிய கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டன. இரண்டாவது பந்தில் மில்லர் (21) சிக்கினார். மொத்தம் 4 ரன் மட்டுமே கிடைக்க, தென் ஆப்ரிக்கா 21 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 187 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இலங்கை சார்பில் அதிகபட்சமாக லக்மல் 3 விக்கெட் வீழ்த்தினார்.

ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி 12ல் கொழும்புவில் நடக்கவுள்ளது.

..............



Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement