Advertisement

ஹாக்கி: இந்தியா–இங்கிலாந்து 'டிரா'

லண்டன்: பரபரப்பான உலக கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா, இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதிய லீக் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.

லண்டனில், பெண்களுக்கான 14வது உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில் 'நடப்பு சாம்பியன்' நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட 16 அணிகள், 4 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. 'பி' பிரிவில் நடந்த லீக் போட்டியில் உலகின் 'நம்பர்-2' இங்கிலாந்து அணி, 10வது இடத்தில் உள்ள இந்தியாவை சந்தித்தது. இது, இந்திய வீராங்கனை நமிதா பங்கேற்ற 150வது சர்வதேச போட்டி.

போட்டி துவங்கிய 42வது வினாடியில் கிடைத்த முதல் 'பெனால்டி கார்னர்' வாய்ப்பை இங்கிலாந்து வீராங்கனைகள் வீணடித்தனர். பின், 8வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு கிடைத்த 2வது 'பெனால்டி கார்னர்' வாய்ப்பை இந்திய அணியினர் தடுத்தனர். ஆட்டத்தின் 20, 22வது நிமிடத்தில் அடுத்தடுத்து கிடைத்த 3 'பெனால்டி கார்னர்' வாய்ப்புகளில் இங்கிலாந்து அணியினரின் கோலடிக்கும் முயற்சிக்கு இந்திய கோல்கீப்பர் சவிதா முட்டுக்கட்டை போட்டார்.

இந்நிலையில் 25வது நிமிடத்தில் நவ்ஜோத் கவுர் 'பாஸ்' செய்த பந்தில் இந்தியாவின் நேகா கோயல் முதல் கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் இந்திய அணி 1-0 என, முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியின் 48வது நிமிடத்தில் கிடைத்த 6வது 'பெனால்டி கார்னர்' வாய்ப்பை இங்கிலாந்து வீராங்கனைகள் கோட்டைவிட்டனர். பின், 53வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் கோலடிக்கவிடாமல் இந்திய கோல்கீப்பர் சவிதா தடுத்தார். அப்போது திரும்பி வந்த பந்தை இங்கிலாந்தின் லில்லி ஓஸ்லி கோலாக மாற்றினார்.

தொடர்ந்து போராடிய இரு அணி வீராங்கனைகளால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என, 'டிரா' ஆனது.

ஜெர்மனி வெற்றி

'சி' பிரிவில் நடந்த லீக் போட்டியில் ஜெர்மனி, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய ஜெர்மனி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement