Advertisement

மதுரைக்கு கிடைக்குமா முதல் வெற்றி

திருநெல்வேலி: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் இன்று மதுரை, திண்டுக்கல் அணிகள் மோதுகின்றன. இதில் மதுரை அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினால் டி.என்.பி.எல்., அரங்கில் முதல் வெற்றியை பதிவு செய்யலாம்.

தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) 'டுவென்டி-20' தொடரின் 3வது சீசன் நடக்கிறது. இதில் திண்டுக்கல், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. திருநெல்வேலியில் இன்று நடக்கவுள்ள 2வது லீக் போட்டியில் மதுரை, திண்டுக்கல் அணிகள் மோதுகின்றன.

கடந்த இரண்டு சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய மதுரை அணி, 13ல் தோல்வியடைந்தது. ஒரு போட்டி (எதிர்: கோவை, 2017) மழையால் கைவிடப்பட்டது. எனவே இன்று மதுரை அணியினர் முழுத்திறமையை வெளிப்படுத்தினால் டி.என்.பி.எல்., வரலாற்றில் முதல் வெற்றியை ருசிக்கலாம். அருண் கார்த்திக், கவுசிக், தலைவன் சற்குணம், எஸ்.பி. நாதன் உள்ளிட்டோர் கைகொடுத்தால் நல்லது.

திருச்சிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த சோகத்தில் திண்டுக்கல் அணி உள்ளது. இப்போட்டியில் 'பேட்டிங்கில்' நம்பிக்கை தந்த ஹரி நிஷாந்த், ராமலிங்கம் ரோகித், கேப்டன் அஷ்வின் மீண்டும் கைகொடுக்கலாம். பவுலிங்கில் சொதப்பிய முகமது, ஆதித்யா அருண் எழுச்சி காண வேண்டும். 'சுழலில்' கேப்டன் அஷ்வின் பலம் சேர்க்கிறார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement