Advertisement

குல்தீப் ஆறு...ரோகித் நுாறு: இந்திய அணி 'ஜோரான' வெற்றி

நாட்டிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 'சுழலில்' அசத்திய குல்தீப் 6 விக்கெட் கைப்பற்றினார். 'பேட்டிங்கில்' விளாசிய ரோகித் சதம் கடந்து கைகொடுக்க, இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜோரான வெற்றி பெற்றது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. நேற்று, முதல் போட்டி நாட்டிங்காமில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

குல்தீப் கலக்கல்: இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. குல்தீப் யாதவ் 'சுழலில்' ராய் (38), ஜோ ரூட் (3), பேர்ஸ்டோவ் (38) சிக்கினர். கேப்டன் மார்கன் (19) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய பட்லர், ஸ்டோக்ஸ் அரைசதமடித்தனர். ஐந்தாவது விக்கெட்டுக்கு 93 ரன் சேர்த்த போது குல்தீப் பந்தில் பட்லர் (53) ஆட்டமிழந்தார். குல்தீப் வீசிய 45வது ஓவரில் ஸ்டோக்ஸ் (50), டேவிட் வில்லே (4) அவுட்டாகினர். உமேஷ் 'வேகத்தில்' மொயீன் அலி (24), அடில் ரஷித் (22) வெளியேறினர். பிளங்கட் (10) 'ரன்-அவுட்' ஆனார்.

இங்கிலாந்து அணி 49.5 ஓவரில், 268 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் குல்தீப் 6 விக்கெட் கைப்பற்றினார்.

ரோகித் விளாசல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி சூப்பரான துவக்கம் தந்தது. வில்லே, மார்க் உட் வீசிய 2, 5வது தலா 3 பவுண்டரி அடித்தார் தவான். முதல் விக்கெட்டுக்கு 59 ரன் சேர்த்த போது மொயீன் அலி 'சுழலில்' தவான் (40) சிக்கினார். மார்க் உட் பந்தில் ஒரு சிக்சர் விளாசிய ரோகித், இவரது 9வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விரட்டினார்.

மார்க் உட் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கேப்டன் கோஹ்லி அரைசதமடித்தார். மொயீன் அலி வீசிய 28வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ரோகித், அடில் ரஷித் பந்தை சிக்சருக்கு அனுப்பி 18வது சதமடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 167 ரன் சேர்த்த போது ரஷித் 'சுழலில்' கோஹ்லி (75) அவுட்டானார்.

இந்திய அணி 40.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் (137), ராகுல் (9) அவுட்டாகாமல் இருந்தனர். இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி வரும் 14ல் லண்டனில் நடக்கவுள்ளது.



6 விக்கெட்

இந்தியாவின் குல்தீப் யாதவ், 10 ஓவரில், 25 ரன் மட்டும் வழங்கி, 6 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் ஒருநாள் அரங்கில் முதன்முறையாக ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்குமேல் விக்கெட் கைப்பற்றினார்.

* தவிர, ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் 6 விக்கெட் கைப்பற்றிய முதல் இடது கை சுழற்பந்துவீச்சாளர் ஆனார்.

இங்கிலாந்து மண்ணில்...

இந்தியாவின் குல்தீப் யாதவ் (6/25), இங்கிலாந்து மண்ணில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த 'சைனாமேன்' பவுலரானார். முன்னதாக கடந்த 2005ல் வங்கதேச அணிக்கு எதிராக மான்செஸ்டர் நகரில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாக், 9 ஓவரில், 29 ரன் வழங்கி 3 விக்கெட் கைப்பற்றினார்.

* தவிர இவர், இங்கிலாந்து மண்ணில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த சுழற்பந்துவீச்சாளரானார். முன்னதாக கடந்த 2004ல் பர்மிங்காமில் நடந்த கென்யாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானின் அப்ரிதி 11 ரன் வழங்கி 5 விக்கெட் வீழ்த்தியது சாதனையாக இருந்தது.

ஜெயசூர்யாவை முந்தினார்

இந்தியாவின் குல்தீப், ஒருநாள் போட்டி வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த 'சுழல்' வீரரானார். முன்னதாக 1993ல் மொராடுவாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கையின் ஜெயசூர்யா, 9.5 ஓவரில், 29 ரன் வழங்கி 6 விக்கெட் வீழ்த்தியது சிறப்பான செயல்பாடாக இருந்தது.

4வது இந்தியர்

ஒருநாள் போட்டி வரலாற்றில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இந்திய பவுலர்கள் பட்டியலில் 4வது இடம் பிடித்தார் குல்தீப். முதல் மூன்று இடங்களில் ஸ்டூவர்ட் பின்னி (6/04, எதிர்: வங்கம், 2014), கும்ளே (6/12, எதிர்: வெ.இ., 1993), நெஹ்ரா (6/23, எதிர்: இங்கிலாந்து, 2003) ஆகியோர் உள்ளனர்.





Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • kannaiya srinivasan - Muscat,ஓமன்


    நூறும் ஆறும் வெற்றிக்கனியை தந்தது...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement