Advertisement

பயிற்சியாளர் விலகல் ஏன்

மும்பை: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் துஷார் விலகலுக்கு, மிதாலி ராஜ் , ஹர்மன்பிரீத் தான் காரணம் என கூறப்படுகிறது.

இந்திய முன்னாள் வீரர் துஷார் அரோத், 51. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்சியாளராக இருந்தார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை தொடரில் அணியை பைனல் வரை அழைத்து செல்ல உதவினார். இவரது பயிற்சி முறை மிகவும் கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இவருக்கு எதிராக 'சீனியர்' மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர் சேர்ந்து இந்திய கிரிக்கெட் போர்டு நிர்வாகக்குழுவிடம் புகார் தெரிவித்தால், பிரச்னை பெரிதானது. இதனையடுத்து, துஷார் தனிப்பட்ட காரணத்திற்காக பதவி விலகுவதாக தெரிவித்தார்.

வீராங்கனைகள் எதிர்ப்பு

இது குறித்து பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் இரண்டு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. ஒரு பயிற்சி முகாம் இரண்டரை மணி நேரம் நடத்தப்பட்டுள்ளது. இதனால், 30 வயதை எட்டிய வீராங்கனைகள் நெருக்கடியை சந்தித்துள்ளனர். இதில் ஏற்பட்ட எதிர்ப்புதான் துஷார் பதவி விலக காரணம்,'' என்றார்.

பாதிப்பு இல்லை

இது குறித்து துஷார் கூறுகையில்,'' இந்திய பெண்கள் அணியினர் தங்களின் சாதகமான வட்டத்திலிருந்து வெளியே வர வேண்டும். நீண்ட நாள் ஒரே மாதிரியாக செயல்பட முடியாது. எனக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. எதிர்காலத்தில் இந்திய பெண்கள் அணி இன்னும் பல சாதனைகள் எட்டும் என நம்புகிறேன். எனது வாழ்த்துகள் எப்போதும் இவர்களுக்கு உண்டு,'' என்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement