Advertisement

கட்டாய வெற்றியை நோக்கி மும்பை

மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று, கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் உள்ள மும்பை அணி, பஞ்சாப்பை சந்திக்கிறது.

இந்தியாவில் 11வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இதில் ஐதராபாத், சென்னை அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்டன. டில்லி அணி கோப்பை வாய்ப்பை இழந்துவிட்டது. 'பிளே ஆப்' செல்ல, இன்னும் இரு அணிகளுக்கு மட்டுமே இடம் என்ற நிலையில், மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 5 அணிகள் போட்டியில் உள்ளன.

இதனிடையே, இன்று சொந்தமண்ணில் களமிறங்கும் நடப்பு சாம்பியன் மும்பை அணி, அஷ்வினின் பஞ்சாப்பை சந்திக்கிறது. இதுவரை 12 போட்டியில் 5ல் மட்டும் வென்ற மும்பை (10 புள்ளி) அணியின் பேட்டிங், நிலையற்றதாக உள்ளது.

துவக்கத்தில் சூர்யகுமார் (473 ரன்), எவின் லீவிஸ் (325) தவிர, கேப்டன் ரோகித் சர்மா, பாண்ட்யா, குர்னால் என, ஒருவரும் நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்துவது இல்லை. பவுலிங்கில் பும்ரா, மெக்லீனகன், பாண்ட்யா கூட்டணி சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே, எதிரணி ரன் குவிப்புக்கு அணை போட முடியும்.

பரிதாப நிலை

பஞ்சாப் அணி 11வது சீசனை சிறப்பாக துவக்கியது. இடையில் ஒருவார ஓய்வுக்கு சென்று வந்த பின், நிலைமை தலைகீழாகி விட்டது. கடைசியாக களமிறங்கிய 5 போட்டிகளில் ஒன்றில் மட்டும் தான் வென்றது. இதனால், 12 போட்டியில் 6 வெற்றியுடன், 12 புள்ளிகள் பெற்று, ஐந்தாவது இடத்தில் உள்ளது. கடந்த முறை பெங்களூருவுக்கு எதிராக 88 ரன்னில் சுருண்டது போல இல்லாமல், இம்முறை சுதாரித்து விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. துவக்கத்தில் 'அபாய' கெய்ல் (350 ரன்), விளாசல் லோகேஷ் ராகுல் (558) நல்ல துவக்கம் கொடுக்கின்றனர். 'மிடில் ஆர்டரில்' கருண் நாயர் (247), ஸ்டாய்னிஸ் உட்பட பலரும் சொதப்புகின்றனர். தவிர, மயங்க் அகர்வால் (120), பின்ச் உள்ளிட்டோர் கிடைத்த வாய்ப்புகளை வீணடிக்கின்றனர்.

பவுலிங்கை பொறுத்தவரையில், 'வேகத்தில்' மிரட்டும் ஆன்ட்ரூ டை, இதுவரை 20 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இவருக்கு கைகொடுக்கும் 'சுழல்' வீரர் முஜீப் அர் ரஹ்மான் (14), தன் பங்கிற்கு அசத்துகிறார். மற்றபடி, அஷ்வின் (6), ராஜ்பூட் (8), பெரியளவில் விக்கெட் வீழ்த்தாதது ஏமாற்றம் தான்.

ஒருவேளை...

இன்றைய போட்டியில் மும்பை அணி தோற்றால், அடுத்து டில்லியை வென்றாலும் 12 புள்ளிகள் மட்டும் பெற முடியும். இதனால், 'பிளே ஆப்' சுற்றுக்கு செல்ல முடியாது. ஒருவேளை, இன்று பஞ்சாப் தோற்றாலும், கடைசி ஆட்டத்தில் சென்னையை, பெரியளவில் வீழ்த்தினால், அடுத்த சுற்று குறித்து யோசிக்க முடியும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement