Advertisement

சஞ்சு 'சரவெடி:'ராஜஸ்தான் அசத்தல் வெற்றி

பெங்களூரு: பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சஞ்சு சாம்சன், 92 ரன்கள் விளாச, ராஜஸ்தான் அணி, 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில், 11வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. நேற்று, பெங்களூருவில் நடந்த, 11வது லீக் போட்டியில் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

சாம்சன் விளாசல்

ராஜஸ்தான் அணிக்கு கேப்டன் ரகானே (36) நல்ல துவக்கம் தந்தார். ஷார்ட் (11) சோபிக்கவில்லை. பென் ஸ்டோக்ஸ் (27), ஓரளவு கைகொடுத்தார். சிக்சர்களாக விளாசிய சஞ்சு சாம்சன், ஐ.பி.எல்., அரங்கில் தனது 8வது அரைசதமடித்தார். பட்லர் (23) ஆறுதல் தந்தார். ராஜஸ்தான் அணி, 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு, 217 ரன்கள் குவித்தது. சாம்சன் (92 ரன், 10 சிக்சர், 2 பவுண்டரி, 45 பந்து), திரிபாதி (14) அவுட்டாகாமல் இருந்தனர்.

கோஹ்லி அரைசதம்

சவாலான இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு பிரண்டன் மெக்கலம் (4) ஏமாற்றினார். குயின்டன் டி காக் (26) நிலைக்கவில்லை. குல்கர்னி வீசிய 2வது ஓவரில், 3 பவுண்டரி விளாசிய கேப்டன் கோஹ்லி, 26 பந்தில் அரைசதம் எட்டினார். அபாரமாக ஆடிய இவர், 57 ரன்னில் ஆட்டமிழந்தார். நேகி (3) சொதப்பினார். டிவிலியர்ஸ் (20) பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை. வாஷிங்டன் சுந்தர் (35) ஓரளவு நம்பிக்கை தந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 36 ரன் தேவைப்பட்ட நிலையில், 16 ரன் மட்டுமே கிடைத்தது. பெங்களூரு அணி, 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு, 198 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. மன்தீப் சிங் (47) அவுட்டாகாமல் இருந்தார்.

பச்சை நிறமே...

நேற்றைய போட்டியில், புவி வெப்பமயமாதலை தடுப்பதற்காக மரம் வளர்க்க வலியுறுத்தி பெங்களூரு அணியினர் பச்சை நிற 'ஜெர்சி' அணிந்து விளையாடினர். 'டாஸ்' போடுவதற்கு முன், பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி, ராஜஸ்தான் அணி கேப்டன் ரகானேவுக்கு மரக்கன்று ஒன்றை வழங்கினார். இதற்கேற்ப ரசிகர்களும் பச்சை நிறத்திலான பெங்களூரு அணி கொடி அசைக்க, மைதானமே பசுமையாக காட்சியளித்தது.

ஒவ்வொரு சீசனிலும் பெங்களூரு அணியினர், சின்னசாமி மைதானத்தில் நடக்கும் ஏதாவது ஒரு போட்டியில் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடுவது வழக்கம்.

150

ஸ்டோக்ஸ் வீசிய 19வது ஓவரின் 2வது பந்தில் பெங்களூரு அணியின் வாஷிங்டன் சுந்தர், சிக்சர் அடித்தார். இது, இந்த சீசனில் பதிவான 150வது சிக்சராக அமைந்தது. முதல் சிக்சரை மும்பை அணியின் ரோகித் சர்மா (எதிர்: சென்னை) அடித்தார்.





Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement