Advertisement

சாதிப்பார்களா செய்னா, சிந்து

பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் சாம்பியன்ஷிப் துவங்குகிறது. இதில், இந்தியாவின் செய்னா, சிந்து சாதிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் சாம்பியன்ஷிப் இன்று துவங்குகிறது. சர்வதேச அரங்கில் மதிப்புமிக்கதாக கருதப்படும் இத்தொடரில், பிரகாஷ் படுகோனே (1980), கோபிசந்த் (2001) என இருவர் மட்டுமே கோப்பை வென்றுள்ளனர்.

இந்திய அணிக்காக இம்முறை செய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற செய்னா, 2015ல் பைனலில் ஸ்பெயினின் கரோலினாவிடம் தோல்வியடைந்தார். கடந்த ஆண்டு காலிறுதி வரை முன்னேறிய இவருக்கு, இம்முறை முதல் சுற்றே சவாலாக அமைந்துள்ளது. சீன தைபேயின் டாய் டிசுவுடன் மோதுகிறார். இவருக்கு எதிரான 14 போட்டியில் செய்னாவுக்கு 5ல் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது.

ஜொலிப்பாரா சிந்து

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி கைப்பற்றிய சிந்து, அதிகபட்சமாக கடந்த முறை காலிறுதி வரை முன்னேறினார். முதல் சுற்றில் தாய்லாந்தின் பூர்ன்பாவேயை எதிர் கொள்கிறார். கடந்த ஆண்டு இந்திய மற்றும் கொரியா ஓபனில் பட்டம் வென்ற இவர் அபார திறமை வெளிப்படுத்தினால், மீண்டும் ஜொலிக்கலாம். பயிற்சியாளர் கோபி சந்த் வழிகாட்டுதல் கைகொடுத்தால் இந்தியாவுக்கு சாதிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

ஸ்ரீகாந்த் எப்படி

ஆண்கள் ஒற்றையரில், ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் பிரான்ஸ் வீரர் பிரைஸ் லிவர்டசை சந்திக்கிறார். கடந்த ஆண்டு சூப்பர் சீரிஸ் தொடரில் 4 முறை கோப்பை வென்ற இவர் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானு அட்ரி- சுமித் ரெட்டி, சாட்விக்சாய்ராஜ்- சிராக் ஷெட்டி ஜோடி களம் காண்கிறது. பெண்கள் இரட்டையரில் அஷ்வினி பொன்னப்பா- சிக்கி ரெட்டி ஜோடி இணைகிறது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரனவ் ஜெர்ரி- சிக்கி ரெட்டி ஜோடி முதல் சுற்றில் ஜெர்மனியின் மார்வின்- லின்டா ஜோடியுடன் மோத உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement