Advertisement

இந்தியாவுக்கு இரண்டு கோப்பை: 3வது 'டுவென்டி–20' போட்டியில் வெற்றி

கேப்டவுன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது 'டுவென்டி-20' போட்டியில் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. ஏற்கனவே ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணிக்கு, இரண்டாவது கோப்பையாக அமைந்தது.

தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில், தொடர் 1-1 என, சமநிலையில் இருந்தது. நேற்று, 3வது போட்டி கேப்டவுனில் நடந்தது.

கோஹ்லி விலகல்

இந்திய அணியில் 'ரெகுலர்' கேப்டன் விராத் கோஹ்லி, முதுகு வலி காரணமாக விலகினார். கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டார். கோஹ்லிக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் வாய்ப்பு பெற்றார். உனத்கட், சகால் நீக்கப்பட்டு பும்ரா, அக்சர் படேல் சேர்க்கப்பட்டனர். 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டுமினி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

ரெய்னா நம்பிக்கை

கிறிஸ் மோரிஸ் வீசிய முதல் ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்த கேப்டன் ரோகித் சர்மா (11), ஜூனியர் டாலா 'வேகத்தில்' வெளியேறினார். சிக்சர் அடித்து ரன் கணக்கை துவக்கிய ரெய்னா, பெலுக்வாயோ வீசிய 5வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரி விளாசினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்திருந்த போது, ஷம்சி 'சுழலில்' ரெய்னா (43) சிக்கினார். மணிஷ் பாண்டே (13), நிலைக்கவில்லை. ஷம்சி வீசிய 12வது ஓவரில், 2 பவுண்டரி அடித்த தவான் (47), 'ரன்-அவுட்' ஆனார். தோனி (12) சோபிக்கவில்லை. அடுத்து வந்த தினேஷ் கார்த்திக், டாலா வீசிய 19வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்தார். மோரிஸ் வீசிய கடைசி ஓவரில் பாண்ட்யா (21), கார்த்திக் (13) அவுட்டாகினர்.

இந்திய அணி, 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 172 ரன்கள் எடுத்தது. அக்சர் படேல் (1), புவனேஷ்வர் குமார் (3) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் டாலா, 3 விக்கெட் கைப்பற்றினார்.

டுமினி அரைசதம்

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு ஹென்ட்ரிக்ஸ் (7) ஏமாற்றினார். பின் இணைந்த டேவிட் மில்லர், கேப்டன் டுமினி ஜோடி நிதானமாக ஆடியது. இரண்டாவது விக்கெட்டுக்கு 35 ரன் சேர்த்திருந்த போது ரெய்னா பந்தில் மில்லர் (24) சிக்கினார். தென் ஆப்ரிக்க அணி, 10 ஓவரில், 2 விக்கெட்டுக்கு, 52 ரன் மட்டுமே எடுத்திருந்தது.

பின் எழுச்சி கண்ட டுமினி, அக்சர் படேல் வீசிய 12வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் விளாசினார். பாண்ட்யா பந்தில் கிளாசன் (7) சரணடைந்தார். அடுத்து வந்த கிறிஸ்டியன் ஜான்கர், ரெய்னா வீசிய 14வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரி அடித்தார். ஷர்துல் தாகூர் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டுமினி, அரைசதமடித்தார். பொறுப்பாக ஆடிய இவர், 41 பந்தில், 55 ரன் எடுத்து 'பெவிலியன்' திரும்பினார். பும்ரா பந்தில் மோரிஸ் (4), போல்டானார். அபாரமாக ஆடிய ஜான்கர், ஷர்துல் தாகூர் வீசிய 18 வது ஓவரில், ஒரு சிக்சர், 3 பவுண்டரி அடிக்க, 18 ரன் கிடைத்தது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன் தேவைப்பட்டது. புவனேஷ்வர் வீசிய 20வது ஓவரில், 11 ரன் மட்டுமே கிடைத்தது. கடைசி பந்தில் ஜான்கர் (49) அவுட்டானார். தென் ஆப்ரிக்க அணி, 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. பெகார்டியன் (15) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் புவனேஷ்வர், 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரை இந்திய அணி, 2-1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது. சமீபத்தில் முடிந்த ஒருநாள் தொடரை இந்திய அணி, 5-1 எனக் கைப்பற்றியது. இதன்மூலம் தென் ஆப்ரிக்க மண்ணில் ஒருநாள், 'டுவென்டி-20' என, இரண்டு கோப்பை வென்று அசத்தியது.







Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement